பாடல் #1571

பாடல் #1571: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆய்ந்தறி வார்கள மரர்வித் தியாதர
ராய்ந்தறி யாவண்ணம் நின்ற வரனெறி
யாய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
வாய்ந்தறிந் தேன்மன மயம்மைகண் டேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயநதறி வாரகள மரரவித தியாதர
ராயநதறி யாவணணம நினற வரனெறி
யாயநதறிந தெனவன செவடி கைதொழ
வாயநதறிந தெனமன மயமமைகண டெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர்
ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன் நெறி
ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கை தொழ
ஆய்ந்து அறிந்தேன் மனம் மய அம்மை கண்டேனே.

பதப்பொருள்:

ஆய்ந்து (இறைவனை ஆராய்ந்து) அறிவார்கள் (அறிவார்கள்) அமரர் (அமரர்களும்) வித்தியாதரர் (உண்மை ஞானமும் உலக ஞானமும் பெற்ற ஞானிகளும்)
ஆய்ந்து (ஆனாலும் ஆராய்ந்து) அறியா (அறிந்து கொள்ள முடியாத) வண்ணம் (தன்மையை உடையவனாக) நின்ற (நின்று) அரன் (அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற) நெறி (வழி முறையாக இருக்கின்றது அன்பினால் உணர்கின்ற வழி முறையாகும்)
ஆய்ந்து (அப்படிப் பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து) அறிந்தேன் (அறிந்து கொண்டு) அவன் (அவனின்) சேவடி (திருவடிகளை) கை (எமது இரண்டு கைகளையும் கூப்பி) தொழ (தொழுது வணங்கி)
ஆய்ந்து (எமக்குள்ளே ஆராய்ந்து) அறிந்தேன் (அறிந்து கொண்டோம்) மனம் (எமது மனமாகவும்) மய (அதன் தன்மைகளாகவும்) அம்மை (எமக்குள் இயங்குகின்ற அனைத்துமாகவும் அன்பின் வடிவமாகிய இறைவனின் சக்தியே இருந்து எமக்கு காண்பித்ததை) கண்டேனே (யாம் கண்டு கொண்டோம்).

விளக்கம்:

இறைவனை ஆராய்ந்து அறிந்தவர்களே அமரர்களாகவும் உண்மை ஞானமும் உலக ஞானமும் பெற்ற ஞானிகளாகவும் இருக்கின்றார்கள். ஆனாலும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவனாக நின்று அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற வழி முறை அன்பினால் உணர்கின்ற வழி முறையாகும். அப்படிப் பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து அறிந்து கொண்டு அவனின் திருவடிகளை எமது இரண்டு கைகளையும் கூப்பி தொழுது வணங்கி எமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொண்டோம். அது எப்படி என்றால் அன்பின் வடிவமாகிய இறைவனின் சக்தியே எமக்குள் இருக்கின்ற மனமாகவும் அதன் தன்மைகளாகவும் எமக்குள் இயங்குகின்ற அனைத்துமாகவும் இருந்து எமக்கு காண்பித்தை யாம் கண்டு கொண்டோம்.

பாடல் #1572

பாடல் #1572: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

அறிய வொண்ணாத வுடம்பின் பயனை
யறிய வொண்ணாத வறுவகை யாக்கி
யறிய வொண்ணாத வறுவகைக் கோசத்
தறிய வொண்ணாத தோரண்டம் பதித்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிய வொணணாத வுடமபின பயனை
யறிய வொணணாத வறுவகை யாககி
யறிய வொணணாத வறுவகைக கொசத
தறிய வொணணாத தொரணடம பதிததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிய ஒண்ணாத உடம்பின் பயனை
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி
அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து
அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதித்தே.

பதப்பொருள்:

அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) உடம்பின் (உடம்பின்) பயனை (உண்மையான பயனாகிய அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதை உணர்ந்து)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) அறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) வகை (வழி முறைகளில் தங்களின் பக்குவத்து ஏற்ற) ஆக்கி (ஒரு வழி முறையை தேர்ந்து எடுத்து அதில் முழுமை பெற்று)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) அறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) வகை (வழி முறைகளில் தாங்கள் கடைபிடிக்கின்ற வழி முறையின் மூலம் கிடைக்கின்ற) கோசத்து (தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரனாக இருக்கின்ற உறையை பெற்று)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாதது (முடியாததாக இருக்கின்ற) ஓர் (ஒரு) அண்டம் (அண்டத்தையே தமது உடம்பிற்குள்) பதித்தே (பதித்து காணுவதே இறைவனை அடைவதற்கான வழி முறையாகும்).

விளக்கம்:

அறிந்து கொள்ள முடியாத உடம்பின் உண்மையான பயனாகிய அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதை உணர்ந்து, இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளில் தங்களின் பக்குவத்து ஏற்ற ஒரு வழி முறையை தேர்ந்து எடுத்து அதில் முழுமை பெற்று அந்த முறையின் மூலம் கிடைக்கின்ற தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரனாக இருக்கின்ற உறையை பெற்று, ஒரு அண்டத்தையே தமது உடம்பிற்குள் பதித்து காணுவதே இறைவனை அடைவதற்கான வழி முறையாகும்.