பாடல் #1056: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
பராசத்தி மாசத்தி பல்வகை யாலும் தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய் உராசத்தி ஊழிகள் தோறும் உடனே புராசத்தி புண்ணிய மாகிய போகமே.
விளக்கம்:
பாடல் #1054 இல் உள்ளபடி ஞானத்தின் மொத்த வடிவாக இருக்கும் பராசக்தியானவள் மாபெரும் சக்தியாக பலவகைகளிலும் உயிர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் அந்தந்த செயல்களுக்கு ஏற்ற சக்தியாக நின்று அருளுகின்றாள். பராசக்தியின் இந்த தன்மையை உயிர்கள் உணராமல் இருக்கின்றார்கள். இந்தப் பராசக்தியே யுகம் யுகமாக தொடர்ந்து பிறவி எடுக்கும் ஆன்மாக்களுடன் உடனிருந்து பாதுகாக்கின்றாள். திரிபுரையாகிய இந்த பராசக்தியே உயிர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலனை அருளி இன்பத்தை வழங்குகின்றாள்.
பாடல் #1056 இல் உள்ளபடி இன்பத்தை அனுபவிக்கின்ற உயிர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுடன் சேர்ந்து பின்னிப் பிணைந்து இருக்கும் சடை முடியைப் போல நிற்கின்றாள் பராசக்தி. இந்தப் பராசக்தியை தினந்தோறும் தியானித்து சாதகம் செய்யும் அடியவர்களுக்கு அவர்கள் செய்த சாதகத்தின் பலனாக கொடி போல வளர்கின்ற ஞானத்தைக் கொடுத்து அந்த கொடியில் சரிபாதியாக நின்று அதைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பாகவும் இருக்கின்றாள்.
பாடல் #1057 இல் உள்ளபடி ஞானத்தை தாங்கி வளர்க்கின்ற கொம்பைப் போன்றவளும், முழுமையுடன் அழகாக விளங்கும் கொங்கைகளை கொண்டவளும், மணம் கமழ்கின்ற வாசனை மலர்களை தன் கூந்தலில் சூடிக்கொண்டு இருப்பவளும், தேவர்களும் விரும்பி தேடுகின்றவளாக இருப்பவளும், பவளம் போன்ற சிகப்பான மேனியைக் கொண்ட சிறுமியாக இருப்பவளுமாகிய திரிபுரை சக்தி இராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்தைக் கொண்டு அருளுகின்றாள். இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை அளிக்கக் கூடியவள் இந்த சக்தியே என்று நம்பி எனது உள்ளத்திற்குள்ளே பணிவோடு வைத்திருக்கின்றேன்.
கருத்து:
திரிபுரை சக்தியானது இராஜராஜேஸ்வரி எனும் பெயருடன் தேவர்களுக்கும் அமிர்தத்தை அருளி ஞானத்தை வளர்ப்பவளாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். கொம்பை போன்றவள் என்பது ஞானம் என்கிற கொடியைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பாக இருப்பதைக் குறிக்கின்றது. முழுமையான அழகுடன் விளங்கும் கொங்கைகள் என்பது தேவர்களுக்கும் அமிர்தமான பாலை தருபவளாக இருப்பதைக் குறிக்கின்றது. மணம் கமழ்கின்ற வாசனை மலர்களை சூடியுள்ளவள் என்பது வண்டு தேனைத் தேடி வாசனையுள்ள மலரை நோக்கிச் செல்வதைப் போல தேவர்கள் இறைவனேடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை தேடிப் பெறுவதற்கு இராஜராஜேஸ்வரியை நாடிச் செல்வதைக் குறிக்கின்றது. செம்பவளத் திருமேனியைக் கொண்ட சிறுமி என்பது உச்ச நிலை ஞானத்தின் ஆரம்பத்தைக் கொடுத்து அருளும் இராஜராஜேஸ்வரியின் திருவுருவத்தைக் குறிக்கின்றது.
பாடல் #1059: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பராபரைச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலைவியவ ளாமே.
விளக்கம்:
ஒவ்வொரு உயிர்களும் மாறி மாறி எடுக்கும் பலவிதமான பிறவிகளில் அவர்களுக்குள்ளே மறைத்து வைக்கப்பட்ட பொருளாக இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து இருக்கின்ற திரிபுரை சக்தி பத்து முகங்களைக் கொண்டு காக்கின்றாள். தானாக செயல்படும் அனைத்து செயல்களுக்கும் காரணமாக அசையா சக்தியான சதாசிவமூர்த்தியும் அதனை செயல்படுத்தும் கருவியாக அசையும் சக்தியான திரிபுரையும் இருக்கிறார்கள். இந்தத் திரிபுரை சக்தியானவள் ஸ்ரீவித்யா எனும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருக்கின்றாள்.
கருத்து:
திரிபுரை சக்தியானது ஸ்ரீவித்யா எனும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். உலகத்திலுள்ள உயிர்கள் முதற்கொண்டு அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்துமே தமது ஆயுளில் பலவிதமாக தன்னை மாற்றிக் கொண்டே இருப்பதற்கான அறிவை கொடுக்கும் தலைவியாக ஸ்ரீவித்யா தேவி இருக்கின்றாள்.
பாடல் #1060: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.
விளக்கம்:
பாடல் #1059 இல் உள்ளபடி தலைவியாக இருக்கும் ஸ்ரீவித்யா தேவி அனைத்திற்கும் மேலான ஞானத்தின் உச்சியில் நின்று உலகத்தோடு கலந்து அனைத்து உயிர்களுக்கும் அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ற சரிசமமான அறிவைக் கொடுக்கும் ஞானப் பாலை அருளுகின்றாள். இந்த சக்தியானவள் என்றும் மாறாதவளாக அனைத்து செயல்களையும் செய்வதற்கு தேவையான ஞானத்தை அருளி அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றாள். திரிபுரை சக்தியாக இருக்கும் இந்த ஸ்ரீவித்யா தேவியை எனது உள்ளத்துக்குள்ளே வைத்து நிலை நிறுத்தியதால் அவள் எனக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள்.
கருத்து: அனைத்து செயல்களையும் செய்யும் ஞானத்தை வழங்குகின்ற திரிபுரை சக்தியானது ஸ்ரீவித்யா தேவி எனும் பெயருடன் உயிர்களுக்குள்ளே என்றும் மாறாமல் நிலைபெற்று நின்று அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ற அறிவைக் கொடுப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.
பாடல் #1060 இல் உள்ளபடி எனக்குள் நிறைந்து நின்ற திரிபுரை சக்தி தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு அனைத்து செயல்களோடு கலந்து எனது உள்ளத்தில் பதிந்து இருக்கின்றாள். ஏழு உலகத்திலும் அவளை உணர்ந்தவர்கள் வந்து தொழுகின்றபடி எனது மனமாகிய அம்பலத்தில் ஆடுகின்ற இறைவனோடு ஒன்றி மனோன்மணி எனும் பெயருடன் தான் செய்கின்ற அனைத்து செயல்களையும் மங்கலமாக்குகின்றாள். சிவம் வேறு திரிபுரை சக்தி வேறு என்று வேறுபடாமல் ஒன்றோடு ஒன்றாக ஒன்றி நின்று எப்போதும் பிரியாமல் எனது உள்ளத்துள் ஒன்றாக அடைந்திருக்கின்றாள்.
குறிப்பு: இறைவன் ஆடுகின்ற அனைத்து இடங்களும் (அடியவர்களின் உள்ளம் உட்பட) அம்பலம் என்று அறியப்படும். இறைவனோடு திரிபுரை சக்தி ஒன்றாகக் கலந்து நிற்பதை மனோன்மணி என்ற பெயரில் அறியலாம்.
பாடல் #1061 இல் உள்ளபடி எமது உள்ளத்திற்குள் ஒன்றாக அடைந்திருக்கும் மனோன்மணி சக்தியானவள் தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு முடிவில்லாமல் அனைத்து செயல்களையும் செய்து கொண்டே இருக்கின்றாள். அப்படி அவள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருக்கும் மிகப்பெரும் தலைவனாகிய இறைவனோடு சேர்ந்து எப்போதும் தாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கும் மனோன்மணியானவள் தான் செய்கின்ற அனைத்து செயல்களையும் மங்கலமாக்குகின்றாள். இவளை தனது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் உயிர்கள் இருக்கின்றார்கள்.
பாடல் #1062 இல் உள்ளபடி திரிபுரையாக இருக்கும் மனோன்மணி சக்தியை தமது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்கள் அவ்வழியிலேயே சாதகம் செய்யும் போது இறைவன் அவர்களுக்கு உள்ளிருந்து ஒளியாக வெளிப்படுவான். அந்த இறைவனோடு நறுமணம் கமழும் மலர்களை தன் கூந்தலில் அணிந்து இருக்கும் இறைவியும் ஒன்றாகக் கலந்திருந்து வெளிப்படுவாள். அப்படி வெளிப்பட்ட திரிபுரை சக்தி காட்டும் வழியில் அன்போடு செல்பவர்களுக்கு அவள் நற்கதியை அருளுவாள்.
பாடல் #1063 இல் உள்ளபடி நற்கதியை அருளுகின்ற திரிபுரை சக்தியான இறைவி பேரானந்தத்தின் வடிவமாகப் பேரழகுடன் இருக்கின்றாள். புளியம் பழத்தின் மேல்பகுதி கடினமாக இருந்தாலும் அதனுள் இருக்கும் பழுத்த பழம் மென்மையாகவும் ஓடுடன் ஒட்டாமலும் இருப்பது போல திரிபுரை சக்தி தனது அருள் பார்வையால் எமது உள்ளத்திற்குள் பார்த்து எம்மை தெளிய வைத்து எமக்குள் ஒளியாக இருக்கும் இறைவனின் சிவகதியை காட்டி எம்மை மேன்மை அடைய வைத்து தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.
பாடல் #1065: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
உண்டில்லை என்ற துருச்செய்து நின்றது வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டல முன்றுற மன்னிநின் றாளே.
விளக்கம்:
திரிபுரை சக்திக்கு உருவம் உண்டு என்று சொல்பவர்களுக்கு உருவமாக இருக்கிறாள். உருவம் இல்லை என்று சொல்பவர்களுக்கு அருவமாக இருக்கிறாள். தன்னைத் தியானித்தவர்களுக்கு அவர்கள் தியானித்த உருவமாகவே அவள் காட்சி கொடுக்கின்றாள். உலகத்தின் இயக்கத்திற்கு காரணம் இறைவன் காரியம் இறைவி இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அருவுருவமாக தில்லை அம்பலத்தில் எங்கும் நிறைந்து ஆடுகின்றார்கள். இந்த அருவுருவமே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் உய்ய வேண்டும் என்பதற்காக சூரிய சந்திர அக்னி ஆகிய மூன்று மண்டலங்களிலும் நிறைந்து திரிபுரை சக்தியாக நிற்கின்றாள்.
கருத்து: உலக இயக்கத்திற்கு வெப்பம் குளிர்ச்சி இரண்டுமே வேண்டும் இதை சூரிய சந்திர மண்டலங்களாக இருந்து திரிபுரை சக்தி அருளுகின்றாள். பிரளயத்தில் அனைத்து உயிர்களும் இறைவனோடு திரும்பவும் சென்று கலந்து விடுவதற்கு அக்னி மண்டலமாக திரிபுரை சக்தி நிற்கின்றாள். பாடல் #612 இல் உள்ளபடி உடலில் (பிண்டத்தில்) இருக்கும் மூன்று மண்டலங்களே உலகத்திலும் (அண்டத்தில்) இருக்கின்றது. இவளே திரிபுரை என்று அறியப்படுகின்றாள்.