பாடல் #1220

பாடல் #1220: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆயிழை யாளொடு மாதிப் பரமிடம்
ஆயதோ ரண்டவை யாறு மிரண்டுள
ஆய மனந்தோ றறுமுக மவைதனில்
ஏயவார் குழலி யினிதுநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1219 இல் உள்ளபடி சக்திமயமாக மாறிய சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருக்கும் அழகிய ஆபரணங்களை அணிந்த இறைவியோடு ஆதிப் பரம்பொருளாகிய இறைவனும் சேர்ந்து வீற்றிருக்கின்றார். அப்போது சாதகர் தமது எண்ணத்தால் அவர்களை நோக்கி நெருங்கிச் செல்லும் போது அவர்கள் இருவரும் சேர்ந்த அம்சமானது சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரச் சக்கரங்களும் அவரது தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளமும் தலை உச்சியைத் தாண்டி இருக்கின்ற துவாதசாந்த வெளியும் ஆகிய எட்டு இடங்களிலும் வந்து வீற்றிருக்கும். அதன் விளைவால் புனிதமாக மாறிய சாதகரின் மனமும் அவருக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரச் சக்கரங்களும் இறைவியின் திருமுகமாக மாறி அதில் நறுமணம் வீசுகின்ற நீண்ட கூந்தலையுடைய இறைவி இனிமையாக வீற்றிருக்கின்றாள்.

கருத்து: சாதகருக்குள் வீற்றிருக்கின்ற இறைவனும் இறைவியும் சாதரின் எண்ணத்தால் நெருங்கும் பொழுது அவருக்குள் இருக்கின்ற எட்டு இடங்களிலும் வீற்றிருந்து அதன் விளைவால் அவரது மனதை இறைவியின் தூய்மையான மனமாகவே மாற்றுகின்ற விதத்தை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1221

பாடல் #1221: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நின்றனள் நேரிழை யோடுட னேர்பட
இன்றெ னகம்படி யேழு முயிர்ப்பெய்துந்
துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள்
ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1220 இல் உள்ளபடி சாதகருக்குள் இனிமையாக வீற்றிருக்கும் இறைவியானவள் தமது மேலான நிலைக்கு ஏற்ற அழகிய அணிகலன்களை அணிந்து கொண்டு சாதகரோடு சேர்ந்து அவருக்குள் நீண்டு பரவி இருக்கும் ஒரு பொழுதிலேயே சாதகருக்குள் இருக்கும் ஏழு சக்கரங்களும் மேன்மையான நிலையில் சக்தியூட்டம் பெறுகிறது. அதன் பிறகு சாதகருக்குள் இருக்கும் பத்து வாயுக்களும் (பாடல் #595 இல் காண்க) ஒன்றாகச் சேர்ந்து உயர்ந்த நிலையில் பிராணனாக மாறி அதில் இறைவியின் நாமம் எப்போதும் இயல்பிலேயே இடைவிடாமல் ஓதிக் கொண்டே இருக்கும் போது இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் உண்மை நிலையை சாதகர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும்படி இறைவி அவருக்குள் நின்று அருள்புரிகின்றாள்.

கருத்து: சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற பத்து வாயுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உயர்ந்த நிலையில் பிராணனாக மாறும் பொழுது அதில் இறைவியின் நாமம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் போது சாதகரால் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற உண்மை நிலையை பரிபூரணமாக உணர்ந்து கொள்ள முடியும் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1222

பாடல் #1222: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உணர்ந்தெழு மந்திர மோமெனு முள்ளே
மணந்தெழு மாங்கதி யாதிய தாகுங்
குணந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்
கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே.

விளக்கம்:

பாடல் #1221 இல் உள்ளபடி இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் உண்மை நிலையை சாதகர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும் பொழுது அவருக்குள்ளிருந்து எழுகின்ற மந்திரமானது ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகும். சாதகர் அந்த உட்பொருளை உணர்ந்து கொள்ளும் பொழுது அவருக்குள்ளிருந்து நறுமணத்துடன் எழுகின்ற உட்பொருளே அவர் சென்று சேருகின்ற இறுதியான இடமாகவும் ஆதிப் பரம்பொருளாகவும் இருக்கின்றது. அந்த ஆதிப் பரம்பொருளான உட்பொருளின் இரண்டு தன்மைகளாக இதுவரை ஒளிந்து கொண்டிருக்கும் கள்வனாகிய இறைவனும் கள்வியாகிய இறைவியும் வெளிப்பட்டு ஒன்றாகச் சேர்ந்து இறைவனின் மேல் பேரன்பு கொண்ட இறைவியின் திருவுருவமாக சாதகருக்கு காட்சி கொடுப்பார்கள்.

கருத்து:

உண்மையை அறிந்து கொண்டால் உயிர்களால் தங்களின் கர்மங்களை அனுபவத்து கழிக்க முடியாது என்பதால் மறக்கருணையால் அனைத்தையும் மாயையால் மறைந்து சூதானமாக ஓங்கார மந்திரத்தின் உட்பொருள் தத்துவமாக உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற இறைவனும் இறைவியும் எப்படி இருக்கின்றார்கள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1223

பாடல் #1223: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆமது அங்கியு மாதியு மீசனும்
மாமது மண்டல மாருத மாதியும்
ஏமது சீவன் சிகையங் கிருண்டிடக்
கோமலர்க் கோதையுங் கோதண்ட மாகுமே.

விளக்கம்:

பாடல் #1222 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் காணும் இறைவனின் மேல் பேரன்பு கொண்ட இறைவியின் திருவுருவமானது அக்னியாகவும் ஆதிப் பரம்பொருளாகவும் இறைவனாகவும் மிகப் பெரியதாக விரிந்து பரவி இருக்கும் அக்னி சூரிய சந்திர ஆகிய மூன்று மண்டலங்களாகவும் வாயு முதலாகிய ஐந்து பூதங்களாகவும் அதிலிருந்து உருவாகி உலகத்திற்கு இறங்கி வருகின்ற உயிராகவும் அந்த உயிரைத் தாங்கி இருக்கின்ற உடலாகவும் அதற்குள் உண்மையை மறைத்துக் கொண்டு இருக்கும் மாயையாகவும் இருக்கின்றது. அந்த இறைவியே மேன்மை மிகுந்த மலர்களைச் சூடிக்கொண்டு இருக்கும் பேரழகு பொருந்திய கூந்தலுடன் சாதகரின் உடலைத் தாங்கிக் கொண்டு நடுவில் இருகின்ற சுழுமுனை நாடியாகவே இருக்கின்றாள்.

கருத்து:

பாடல் #1222 இல் சாதகருக்குள் காட்சி கொடுத்த இறைவியின் திருவுருவம் சாதகருக்குள் இருக்கின்ற விதத்தை இந்த பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1224

பாடல் #1224: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய வைம்ப துடனே யடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரையவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.

விளக்கம்:

பாடல் #1223 இல் உள்ளபடி சாதகரின் உடலைத் தாங்கிக் கொண்டு இறைவியாகவே இருகின்ற சுழுமுனை நாடியில் வீற்றிருக்கின்ற சக்தியாக இறைவனும் இறைவியும் ஒன்றாகச் சேர்ந்த மனோன்மணி இருக்கின்றாள். பாடல் #1222 இல் உள்ளபடி ஓங்காரம் எழுகின்ற இந்த சுழுமுனை நாடிக்குள் இருந்து வெளிப்படும் பாடல் #955 இல் உள்ளபடி அதன் அட்சரங்களான ஐம்பது அட்சரங்களும் மனோன்மணிக்குள்ளேயே அடங்கி விடும். மனோன்மணி சக்தியாக சுழுமுனை நாடியில் வீற்றிருப்பதே அசையா சக்தியும் அசையும் சக்தியும் ஒன்றாகச் சேர்ந்த பராபரையும் அதில் சரிபாதியாகிய அசையும் சக்தியாகிய பரை எனும் இறைவியும் ஆகும். இந்த இறைவியே படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களைப் புரிந்து கொண்டு இருக்கின்றாள்.

பாடல் #1225

பாடல் #1225: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தானிகழ் மோகினி சார்வான யோகினி
போன மயமுடை யாரடி போற்றுவர்
ஆனவ ராவியி னாகிய அச்சிவத்
தானாம் பரசிவ மேலது தானே.

விளக்கம்:

பாடல் #1224 இல் உள்ளபடி ஐந்து தொழில்களையும் புரியும் இறைவியை தமக்குள் அறிந்து கொண்ட சாதகர் அவருக்குள் எப்போதும் இயங்கிக் கொண்டு இருக்கின்ற குண்டலினி சக்தியையும் அதைச் சார்ந்து இருக்கின்ற யோகத்தின் காரியமாக விளங்கும் சக்தியையும் தாண்டி மேல் நிலைக்குச் சென்று பராசக்தியின் தன்மையை அடைந்து அவளின் திருவடியைப் போற்றி வணங்குவார்கள். அவ்வாறு இறைவியின் திருவடிகளைப் போற்றி வணங்கிக் கொண்டு இருக்கும் சாதகர்களின் ஆன்மா பரம்பொருளாகிய இறைவனின் அம்சமான சிவம் எனும் நிலையை அடைந்து அதையும் தாண்டி அனைத்திற்கும் மேலான நிலையில் இருக்கும் அசையா சக்தியாகிய பரசிவத்தோடு ஒன்றாகக் கலந்துவிடும்.

கருத்து:

பராசக்தியின் நிலையை அடைந்த சாதகர்கள் அவளின் திருவடிகளை போற்றி வணங்கிக் கொண்டே இருந்தால் இறைவனின் அம்சமான சிவம் எனும் நிலையை அடைந்து அதன் பிறகு அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய பரசிவத்தோடு கலந்துவிடுவார்கள்.

பாடல் #1226

பாடல் #1226: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யம்பொற் றிருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை யோமெனு மவ்வுயிர் மார்க்கமே.

விளக்கம்:

பாடல் #1225 இல் உள்ளபடி பரசிவமாகவே ஆகிவிட்ட சாதகருடைய தலை உச்சிக்கு மேல் இருக்கின்ற பரவெளியில் பேரொளியாக வீற்றிருக்கும் சிவத்தின் சடை முடியாக வருகின்ற ஒளிக்கீற்றுகளே பேரின்பத்தில் அசைந்து ஆடுகின்ற சக்தியாகவும் அவளது தூய்மையான பொன் போன்ற திரு உருவமாகவும் இருக்கின்றது. இவர்கள் இருவரையும் முதன்மையாக வைத்து ஓதுகின்ற அனைத்து மந்திரங்களுக்குள்ளும் சரிசமமான பாகமாக இருப்பது அனைத்துமாகிய ஓம் எனும் பிரணவ மந்திரமாகும். இந்தப் பிரணவ மந்திரத்துக்குள் அடங்கி இருக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் இறைவனை நோக்கி சென்று அடைகின்ற வழியாக அதுவே இருக்கின்றது.

பாடல் #1227

பாடல் #1227: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மார்க்கங்க ளீன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கு மறிய அரியா ளவளாகும்
வாக்கும் மனமும் மருவியொன் றாய்விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாகுமே.

விளக்கம்:

பாடல் #1226 இல் உள்ளபடி பிரணவ மந்திரத்துக்குள் அடங்கி இருக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் இறைவனை நோக்கி சென்று அடைகின்ற வழிகளை கொடுத்து அருளிய இறைவியானவள் இறைவனும் இறைவியும் சேர்ந்த மனோன்மணியாக நன்மையின் வடிவமாகவே இருக்கின்றாள். எவராலும் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்வதற்கு மிகவும் அரிதானவளாக அவள் இருக்கின்றாள். சிற்றறிவின் சிந்தனைகளையும் அதன் மூலம் நிகழும் செயல்களையும் விட்டு விட்டு இறைவனோடு ஒன்றாகிவிட்ட பேரறிவை நோக்கி செல்லுகின்ற சிறப்பை பெற்ற சாதகர்களுக்கு பேரறிவின் நுண்ணியமான அறிவாக இறைவியே இருக்கின்றாள்.

பாடல் #1228

பாடல் #1228: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்
பின்னறி வாகும் பிரானறி வாற்றடஞ்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாவது சன்மார்க்க மாமே.

விளக்கம்:

பாடல் #1227 இல் உள்ளபடி பேரறிவை நோக்கி செல்லுகின்ற சாதகர்களுக்கு பேரறிவின் நுண்ணியமான அறிவாக இருக்கின்ற இறைவியே அவர்களுக்கு புத்தி நுட்பமான அறிவைக் கொடுக்கின்றாள். அவர்களுக்குப் பின்னால் இருந்து ஆட்டுவிக்கின்ற அறிவாக இருப்பது இறைவனுடைய பேரறிவாகும். சிவத்தோடு ஒன்றாக கலக்க வேண்டும் என்று இறைவனது பேரறிவை அறிந்து கொண்டு அதன் வழியே செல்லுகின்ற சாதகர்களுக்கு அவர்கள் செல்லுகின்ற செம்மையான வழிமுறையாக இருப்பதுவே சன்மார்க்கம் என்று அழைக்கப் படுகின்றது.