பாடல் #888

பாடல் #888: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரந்
தாண்டவக் கூத்துத் தமனியத்திற் தானே.

விளக்கம்:

ஈடு இணையில்லாத தனியெழுத்தான ஓம் என்கிற பிரணவ மந்திரமே இறைவன் ஆடும் தாண்டவத் திருக்கூத்து ஆகும். அந்த தாண்டவமாக இருப்பது அனைத்து உயிர்களுக்கும் மாபெருங்கருணையில் அருள்புரியும் இறைவனது அருளல் தொழிலாகும். தாண்டவத் திருக்கூத்து ஆதியும் அந்தமுமின்றி தனித்து நிற்கும் இறைவனின் தன்மை ஆகவும் இருக்கிறது. இந்தத் தாண்டவத் திருக்கூத்துதான் தில்லையில் பொன்னம்பலத்தில் எப்போதும் நடந்துகொண்டு இருக்கின்றது.

பாடல் #889

பாடல் #889: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்குந்
தானே அகார உகாரம தாய்நிற்குந்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலமுந் தானே.

விளக்கம்:

ஆதி அந்தமில்லாத இறை சக்தியாகிய பரம்பொருளே பேரொளியின் ஒளி உருவத் தத்துவமாகவும் ஓங்கார மந்திரத்தின் அகார உகார எழுத்துக்களாகவும் பேரொளியின் ஒளி உருவத் தாண்டவத் திருக்கூத்தாகவும் அண்ட சராசரங்கள் அனைத்தையும் தாங்கி அருட் சக்தியாகிய தம்மையும் தாங்கி நிற்பதாகவும் இருக்கின்றது.

பாடல் #890

பாடல் #890: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தராதல மூலைத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமவா சியவாந்
தராதலஞ் சொல்லிற் றான்வா சியவாகுந்
தராதல யோகந் தயாவாசி யாமே.

விளக்கம்:

அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கும் ஆதி அந்தமில்லாத பரம்பொருளாகிய இறை சக்தியே இந்த உலகத்திலுள்ள உயிர்களுக்குள் மூலாதாரத்தில் நமசிவாய என்றும் அதைச் சுற்றியுள்ள அக்கினி மண்டலத்தில் நமவாசிய என்றும் உடலைச் சுற்றியுள்ள சூரிய மண்டலத்தில் வாசிய என்றும் உடலைத் தாண்டி யோக நிலையில் பெறும் கருணையான பரவெளியைச் சுற்றியுள்ள சந்திர மண்டலத்தில் வாசி என்றும் மந்திரச் சொற்களாக இருக்கின்றது.

பாடல் #891

பாடல் #891: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா விடம்என்ப
ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதியே ஆனந்த மாமே.

விளக்கம்:

பிரணவ மந்திரமான ஓங்காரத்தில் அகாரம் சிவமாகவும் உகாரம் சக்தியாகவும் இருக்கின்றது. இந்த இரண்டு பரம்பொருள்களைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது சிற்றறிவினால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகும். இவற்றை இறைவன் ஆடும் திருக்கூத்தின் உண்மையான ஞானத்தைப் பெற்ற யோகியர்களால் மட்டுமே அறிந்து உணர முடியும். ஞானத்தை பெற்று அகார உகாரமாக இருக்கும் சிவசக்தியை அறிந்து உணர்ந்து விட்டால் அதுவே அவர்களுக்கு இறைவனிடத்தில் சரணாகதியாகவும் பேரின்பம் கொடுக்கும் பேரானந்தமாகவும் இருக்கும்.

பாடல் #892

பாடல் #892: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் இங்கில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாகவே அகப்படுந் தானே.

விளக்கம்:

ந என்கின்ற சிகார எழுத்தும் ம என்கின்ற வகார எழுத்தும் அறிவெழுத்துக்கள் ஆகும். ந எழுத்து அறிவைச் செலுத்துவதும் ம எழுத்து செலுத்தியவாற்றிலே சென்று அறிவதும் ஆகும். அறிவதாகிய வகாரம் தன்னைச் செலுத்துவதாகிய சிகாரத்திலே அடங்கி விடும். அதோடு யகரமாகிய சிவம் சேர்க்க வரும் சிவாய என்னும் மூன்றெழுத்து ஆன்மாக்களுக்கு ஆனந்தத்தை வழங்குவதை அறிபவர் மிகச் சிலரே. இவற்றை அறிந்து கொள்பவர்களுக்கு சிவன் ஆனந்த கூத்தனாய் இருப்பதும் அவன் ஆனந்தக்கூத்தும் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #893

பாடல் #893: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

படுவ திரண்டு பலகலை வல்லார்
படுவ தோங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

விளக்கம்:

இறைவனை பல வகையான யோகத்தாலும் ஞானத்தாலும் தமக்குள் உணர்ந்து அடைந்த இறைவனை உணர்ந்து கொள்ளும் முறைகளாக யோகியர்களாலும் ஞானியர்களாலும் சொல்லப்படுகிறது. அவை அம் சம் என்கிற இரண்டு பீஜங்களும் ஓங்காரம் (ஓம்) பஞ்சாட்சரம் (நமசிவாய) எனும் இரண்டு ஆதார மந்திரத் தத்துவங்கள் அடங்கி இருக்கும் இறைவனின் சங்காரத் தாண்டவத்தின் அருளல் தொழிலுமாகிய இவை அனைத்தும் உயிர்களின் உடலுக்குள் இருக்கும் ஆறு சக்கரங்களிலும் பரவி இருக்கும் முறைகளும் ஆகும்.

பாடல் #894

பாடல் #894: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத் தாகம வசனங்கள்
வாறே பொதுவாகு மன்றின் அமலமே.

விளக்கம்:

ஓங்காரத்தின் அகார உகாரங்களே சதாசிவ தத்துவமாகவும், எக்காலத்திலும் மாறாத ஆகமங்களாகவும், வண்டுகள் மகிழ்ந்து தங்கும் புன்னை மரம் போல் அடியவர்கள் மகிழ்ந்து தங்கும் சிவ பரம்பொருளின் சரணாகதி திருவடிகளாகவும் தில்லையில் ஆடும் திருக்கூத்தாகவும் ஆகமங்கள் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிமுறைகளாகவும் உலகங்கள் அனைத்திற்கும் பொதுவான தென்னாட்டு சிற்றம்பலத்தின் மலமாசுக்களை நீக்கும் பொன் மன்றமாகவும் இருக்கின்றன.

பாடல் #895

பாடல் #895: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

அமலம் பதிபசு பாசம் ஆகமம்
அமலம் திரோதாயி யாகுமா னந்தம்
அமலம் சொல்ஆணவ மாயை காமியம்
அமலம் திருக்கூத்தா டுமிடந் தானே.

விளக்கம்:

பதி பசு பாசம் என்ற சைவ சித்தாந்தத்தை உணர்வது அமலமாகும். ஆகமங்களை உணர்வதின் மூலம் மாயையை நீங்கி கிடைக்கும் பேரானந்தம் அமலமாகும். ஆணவம் மாயை கன்மம் ஆகிய மூன்று மலங்களும் இல்லாதது அமலமாகும். இறைவன் திருக்கூத்தாடுகின்ற இடங்களெல்லாம் மல மாசுக்கள் இல்லாத தூய்மையான அமலமாகும்.

குறிப்பு: ஆணவம் மாயை கன்மம் ஆகிய மாசுக்கள் இல்லாத தூய்மை அமலம் எனப்படும்.

பாடல் #896

பாடல் #896: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்குந்
தானே தனக்குத் தன்மலையு மாய்நிற்குந்
தானே தனக்குத் தன்மயமு மாய்நிற்குந்
தானே தனக்குத் தலைவனு மாய்ஆமே.

விளக்கம்:

இறைவன் தனக்குத் தானே குருவாக நின்றும் அனைத்தையும் தாங்கி தன்னையும் தாங்கி நிற்கும் மலையாக நின்றும் அனைத்திலும் பரவி தனக்குள்ளும் பரவி நின்றும் தனக்கு தானே இறைவனாகவும் இருக்கின்றான்.

குறிப்பு: இறைவன் தனக்குத் தானே என்னவாகவெல்லாம் இருக்கின்றார் என்பதை இப்பாடலில் அருளுகின்றார்.

பாடல் #897

பாடல் #897: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனான இறைவன் அனைத்திற்கும் மேலான திருக்கூத்தின் தலைவனாகவும் அனைத்தையும் தாங்கி நிற்கும் சத்திய பாத்திரத்தின் தலைவனாகவும் பேரறிவான ஞானத்தின் தலைவனாகவும் இணையில்லாத திருவடிகளுக்கு தலைவனாகவும் இருக்கின்றான்.

குறிப்பு: இறைவன் எதற்கெல்லாம் தலைவனாக இருக்கின்றார் என்பதை இப்பாடலில் அருளுகின்றார்.