பாடல் #997

பாடல் #997: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகந்
துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.

விளக்கம்:

பட்டுப் போகாத அரச மரத்தின் பலகையை நேராக வைத்து அதன் மேலே நன்றாகப் பதியுமாறு ‘மசிவாயந’ என்று எழுதி அது போலவே பனை ஓலையிலும் எழுதி அந்த ஓலையின் மேலே தேன் கூட்டைச் சுட்டால் கிடைக்கும் மெழுகினால் பூசி அந்த மெழுகு ஓலையோடு ஒட்டி பக்குவப்படும் அளவிற்கு நெருப்பில் காட்டி அவ்வாறு பக்குவப்பட்ட ஓலையை அரசம் பலகையின் மேல் வைத்து அதில் எழுதியுள்ள ‘மசிவாயந’ என்ற மந்திரத்தை ஓதி வருபவர்களுக்கு தம்பனம் எனும் சித்தி கிடைக்கும்.

குறிப்பு: தம்பனம் என்பது இறைவனை அடையத் தடையாக இருக்கும் எதையும் கட்டுதல் அல்லது அடக்குதல் என்று பொருள்படும்.

பாடல் #998

பாடல் #998: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கரண விரளிப் பலகை யமன்றிசை
மரணமிட் டெட்டின் மகார வெழுத்திட்டு
வரணமி லைங்காயம் பூசி யடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே.

விளக்கம்:

பட்டுப்போகாத கொன்றை மரத்தின் பலகையை எடுத்து அதை யமனுடய திசையாகிய தெற்குத் திசையை நோக்கி வைத்து அதில் பாடல் #997 இல் உள்ளபடி ‘மசிவாயந’ என்று எழுதி அதன்பின் அந்தப் பலகையின் மேல் மறைப்பில்லாமல் நன்றாகத் தெரியும்படி ஐந்துவித காயங்களாகிய சுக்கு மிளகு கடுகு பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைப் பூசிவிட்டு அந்தப் பலைகையைத் தலைகீழாக மண்ணில் புதைத்துவிட்டு அதன் மேலே அமர்ந்து அதில் எழுதி மந்திரத்தை தியானித்து செபித்து வந்தால் மோகனம் எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: மோகனம் வித்தை என்பது வேண்டியவற்றை வசியம் செய்வதாகும். உணவுப் பொருளை சுட்டு பக்குவப்படுத்தும் அடுப்பு போல பலகையைப் பக்குவப்படுத்த வேண்டும் என்பதே இங்கு அடுப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல் #999

பாடல் #999: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்
பாங்கு படவே பலாசப் பலகையிற்
காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சாட னத்துக்கே.

விளக்கம்:

வடமேற்கில் சிவபெருமானின் அழிக்கும் முகத்தில் ஒன்றாகிய ஐயனார் கோயிலில் அழகாகத் தெரியும்படி பட்டுப்போகாத பூவரசம் பலகையின் மேல் ஓலையை வைத்து அதை நெருப்பிலிருந்து வரும் புகை மேல் காட்டி முழுவதும் கரி படரும் வரை வைத்து அதன்மேல் விஷத்தினைப் பூச வேண்டும். அதன் பிறகு ஓலை மேல் ஓங்காரம் எழுதி வைத்து மந்திரம் செபித்து வந்தால் உச்சாடனம் எனும் வாக்கு பலிதம் உண்டாகும்.

குறிப்பு: ஐயனார் கோயில் என்பது ஊரின் வட மேற்கு எல்லையைக் குறிக்கும். வாக்கு பலிதம் என்றால் சாதகர் சொல்லும் வார்த்தைகள் அப்படியே நடப்பதாகும்.

பாடல் #1000

பாடல் #1000: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையிற்
பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

விளக்கம்:

நண்பகல் நேரத்தில் சிவன் உருத்திரனாக தாண்டவம் ஆடும் முதுகாட்டில் பச்சை ஓலையில் ஐந்துவித காயங்களான சுக்கு, மிளகு, கடுகு, பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை அரைத்துப் பூசி அதை எடுத்துச் சென்று அக்கினி மூலையில் (தென்கிழக்கு மூலையில்) மூன்று சதுரங்களின் மத்தியில் (முக்கோணத்திற்கு நடுவில்) புதைத்து வைத்துவிட்டால் நமது உள்ளத்தில் அச்சமூட்டும்படி இருக்கும் தீய சக்திகளை எல்லாம் மேலுலகில் இருக்கும் தேவர்களின் துணையோடு அழிக்கும் மாரணம் எனும் சக்தியைப் பெறலாம்.

பாடல் #1001

பாடல் #1001: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஏய்ந்த வரிதார மேட்டின்மே லேபூசி
ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்
கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.

விளக்கம்:

பொருத்தமான அரிதாரக் கலவையை ஒரு ஓலையின் மேல் பூசி அதன் மேல் பொருத்தமாக ‘அ’ மற்றும் ‘உ’ எழுத்துக்களை எழுதி சொல்லும் மந்திரத்தை கிரகிக்கக்கூடிய உத்தமமான வில்வ மரப் பலகையின் மேல் வைத்து மந்திரத்தை எண்பதினாயிரம் (80,000) முறை உச்சரித்தால் வசியம் எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: வசியம் எனும் வித்தை பகைவர்களாக இருப்பவர்களை நண்பர்களாக மாற்றி எப்போதும் அன்போடு இருக்கச் செய்வது.

பாடல் #1002

பாடல் #1002: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எண்ணாக் கருடனை ஏட்டில் யகாரமிட்
டெண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவற் பலகை யிட்டுமேற் கேநோக்கி
எண்ணா வெழுத்தொடெண் ணாயிரம் வேண்டிலே.

விளக்கம்:

தகுந்த வியாழக் கிழமை அன்று ஓலைச்சுவடியில் ‘யநமசிவா’ என்று எழுதி அதன் மேல் புடம் போட்ட வெள்ளிப் பற்பத்தைப் பூசி பட்டுப்போகாத ஒரு வெள்ளை நிற நாவல் மரப் பலகையின் மேல் வைத்து அந்தப் பலகையை மேற்குத் திசை நோக்கி வைத்து எழுதிய ‘யநமசிவா’ மந்திரத்தை எட்டாயிரம் முறை உச்சரித்தால் ஆகருடணம் (ஆகர்ஷணம்) எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: ஆகருடணம் என்பது எண்ணத்தால் கவர்தல் அல்லது வசீகரித்தல் ஆகும்.

பாடல் #884

பாடல் #884: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரானின்ஓர் எழுத்தே.

விளக்கம்:

ஞானங்களிலெல்லாம் மேன்மையானது என்று ஞானியரால் புகழப்படுகின்ற சிவஞானத்தையே யான் போற்றிக் கொண்டாடுகிறேன். எனது சிந்தனையில் அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் போற்றுதற்குரிய திருவடிகளையே சிந்தித்து சிவஞானத்தில் தெளிவு பெறுகிறேன். யான் தெளிந்து பெற்ற சிவயோகத்தை உங்களுக்கும் சொல்லுகின்றேன் கேளுங்கள். சிவயோகமாவது நமது இறைவனைப் போற்றும் மந்திரங்கள் அனைத்திற்கும் மேலானதாகிய ஓங்காரம் எனும் ஒற்றை எழுத்து மந்திரத்தை உச்சரிக்காமல் எண்ணத்தில் வைத்து மூச்சுக்காற்றோடு கலந்து ஜெபித்துக் கொண்டே இருப்பதாகும். இதையே யானும் எப்போதும் செய்து கொண்டே இருக்கிறேன்.

பாடல் #885

பாடல் #885: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஓரெழுத் தாலே உலகெங்குந் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

விளக்கம்:

பிரணவமாகிய ஓம் என்னும் ஓரெழுத்து மந்திரத்தால் அண்ட சராசரங்கள் அனைத்தும் தாமாகி விரிந்து பரவி இருக்கும் இறை சக்தியே அகாரம் உகாரம் ஆகிய இரண்டு எழுத்துக்களால் சிவம் சக்தி எனும் இருவராக இருந்து பிறகு அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்று எழுத்துக்களால் ஒன்றாகி மாபெரும் ஜோதியாக உருவெடுப்பதை மாயை எனும் பேரெழுத்தில் மறைக்கப்பட்டிருக்கும் உலத்தவர்கள் அறிந்துகொள்ளாமல் இறை சக்தியை பலதில் தேடி மயங்குகின்றார்கள்.

பாடல் #886

பாடல் #886: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருவம் பலமே
தேவர் உறைகின்ற தென்பொதுவே ஆமே.

விளக்கம்:

தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலையான தேவனாகிய இறைவன் தங்கியிருக்கும் இடமே சிற்றம்பலம் என்றும், சிதம்பரம் என்றும், திரு அம்பலம் என்றும், தென் நாடு என்றும் போற்றப்படுகின்றது. அந்த தென்நாட்டில் வீற்றிருக்கும் இறை சக்தி உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவானது ஆகும்.

பாடல் #887

பாடல் #887: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத் தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமே சங்காரத் தருந்தாண் டவங்களே.

விளக்கம்:

பாடல் #886 ல் உள்ளபடி உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவான இறை சக்தி வீற்றிருக்கும் தென் நாட்டு சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலம் இறைவனின் ஐந்து வகையான திருக்கூத்துக்களை (நடனம்) காட்டி நிற்கின்றது. அவை அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உயிர்களையும் படைக்கின்ற அற்புத தாண்டவம், அந்த உயிர்களில் உண்மை ஞானம் பெற்றவருக்கு பேரின்பத்தைக் கொடுக்கும் ஆனந்த தாண்டவம், அனைத்து உயிர்களின் வாழ்க்கை முழுதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு மூச்சாய் உயிராய் இயங்குகின்ற அனவரத் தாண்டவம், அவற்றின் விதி முடியும் போது உலக வாழ்க்கையை அழித்து அருளுகின்ற சங்காரத் தாண்டவம், உலகங்களையும் அதிலிருக்கும் உயிர்களையும் முற்றாக அழித்துத் தம்மோடு மீண்டும் சேர்த்துக்கொள்ளும் ஊழிக்காலப் பிரளயத் தாண்டவம் ஆகிய பெருமை வாய்ந்த ஐந்து தாண்டவங்களே ஆகும்.