பாடல் #988: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆனஇம் மூவரோ டாற்றவ ராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமுஞ்
சேனையும் செய்யச்சிவ சக்கரந் தானே.
விளக்கம்:
தானவராகிய சேத்திர பாலகர் (பைரவர் – காலத்தை காப்பவர்), சட்டராகிய வீரபத்திரர், சதிரர்களாகிய பிள்ளையார், முருகர் என இந்த மூன்று வகையினரோடு இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், நந்தி, இடபன், மாகாளன், பிருங்கி, சண்டன், விருஷபர், சண்டிகேசுவரர் ஆகிய 15 பேருடன் பிரம்மா, திருமால், மகேசுவரன், சதாசிவன், உருத்திரன் ஆகிய ஐவரும் சேர்ந்து மொத்தம் 24 தெய்வங்களின் பீஜ எழுத்துக்களை பாடல் #987 இல் உள்ள சக்கரத்தை சுற்றி 24 கட்டங்களிளும் எழுத சிவசக்கரம் அமையும்.
குறிப்பு: அசையா சக்தியாகிய இறைவனிடமிருந்து முதலில் தோன்றிய ஒலி ஒளியிடமிருந்து உருவாகிய ஐந்து மூர்த்திகளே சேனைகளாவார்கள்.
