பாடல் #836

பாடல் #836: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந்
திங்களிற் செவ்வாயை புதைத்திருந் தாரே.

விளக்கம் :

இருளும் வெளிச்சமும் கலந்து இருக்கும் அதிகாலை நேரத்தில் துணைவனும் துணைவியும் போகத்தின் போது சிற்றின்பத்தில் இருந்தாலும் துணைவன் தனது சுக்கிலத்தையும் துணைவி தனது சுரோணிதத்தையும் வெளிப்படுத்தாமலேல்யே மனதை ஒருமைப்படுத்தி இறையருளில் மட்டுமே மனதைப் பதித்து வைத்து செய்வது பரியங்க யோகமாகும்.

பாடல் #837

பாடல் #837: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்
துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே.

விளக்கம்:

துணைவனும் துணைவியும் போகத்தில் இருக்கும்போது அந்த இன்பத்திலேயே மூழ்கிவிடாமல் அறிவை மாற்றி இறைவன் மேல் வைத்து மனத்தைத் தூய்மையுடன் எண்ணிப் பார்க்கும் சிறந்த அழகோடு பரியங்க யோகம் செய்பவர்களுக்கு உலகியல் துன்பம் உண்டாகாது. இறைவியைத் தம்மில் பாதியாகக் கொண்ட இறைவனது அருளால் சுக்கிலம் வெளியே வந்து விழாமல் உள்ளுக்குள்ளேயே மேல்நோக்கி எழுந்து செல்லும்.

பாடல் #838

பாடல் #838: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.

விளக்கம் :

மூலாதாரத்திலிருந்து சுவாதிட்டானம் வழியாக காமாக்கினியை புருவ நடுவுக்கு கொண்டு சென்று அங்குள்ள சிவனை அறிந்த பின் அனலின் முன் மெழுகு உருகுவது போன்று சாதகர்க்கு உடம்பு ஜோதியாய் மாறிவிடும். ஜோதியாய் ஆன பின் புருவ நடுவைத் தாண்டி தலைக்கு மேல் பெருவெளியை அறிந்தவர்களுக்கு உடல் உலகியலில் வீழ்வது இல்லை.

பாடல் #839

பாடல் #839: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

வெளியை அறிந்து வெளியி னடுவே
ஒளியை அறிவி னுளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே.

விளக்கம்:

பரவெளியாகிய ஆகாயத்தை அறிந்து அதன் நடுவில் உள்ள அருள் ஒளியை உணர்ந்து அதில் விளங்குகின்ற அருளொளியையும் அவ்வொளியால் தெளிவான மெய்ப்பொருளையும் குரு நந்தி பெருமான் அருளால் உணர்ந்தேன். பரியாங்க யோகத்தில் இதற்கு மேல் அறியத் தக்கது ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பாடல் #840

பாடல் #840: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தி னடுவான வப்பொருள்
மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே

விளக்கம் :

இல்லறத்தில் இருப்பவர்களில் பரியாங்க யோகத்தின் மூலமாக அனைத்தும் இறைவன் ஒருவனே என்ற உணர்வைப் பெற்றிருந்தவர்கள் யாரவது உள்ளார்களா என்றால் திருமால், பிரம்மா, உருத்திரன், நந்தி, சிவகணங்கள் இவர்கள் எல்லாம் துய தலைவனாகிய சிவனை உணர்ந்து அவனே பரம்பொருள் என்று தங்களது துணைவியருக்கு உணர்த்தினர்.

பாடல் #841

பாடல் #841: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே.

விளக்கம் :

பரியாங்க யோகத்தின் மூலம் மின்னல் போன்ற இடையை உடைய சக்தியையும் அவளை ஆள்பவனாகிய சிவனையும் அவர்கள் கூட்டத்துடன் பொன்னொளி கொண்ட ஆகாயத்தில் நிலை பெறும்படி செய்து அக்கூட்டத்தில் யோகி ஆன்மாவாகிய தன்னையும் பார்த்தால் இவ்வுலகத்தில் நெடுங்காலம் வாழ்வார்.

பாடல் #842

பாடல் #842: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.

விளக்கம்:

துணைவி பெற்றுக்கொள்ளும் துணைவனின் சுக்கிலத்தை வெளியே நீக்காமல் பரியங்க யோகத்தின் மூலம் உள்வாங்கிக் கொள்ளும் முறையில் சுக்கிலத்தை உடம்பினுள் ஆற்றலாய் மாற்றுகின்ற வழியை அறிகின்றவர் ஒருவரும் இல்லை. அவ்வழியை அறிந்தவர் இறைவனை அடையும் வழியை அறிந்தவராவார்.

பாடல் #843

பாடல் #843: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.

விளக்கம் :

போகத்தை அனுபவிக்கத் தகுதியான வழியை அறிந்து அதை நன்கு பயின்றால் தலையிலுள்ள உரோமம் கறுக்கும் சாதகருக்கு தேவையான நன்மை கருதி சக்தியும் அவனை அறிந்து செயல் புரிவாள். சாதகரின் காலத்தை அறிந்து அவரின் உணர்வில் உள்ள உலகியல் எண்ணத்தை போக்கி அருள்வாள்.

பாடல் #844

பாடல் #844: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.

விளக்கம் :

தலை உச்சியில் ஆயிரம் இதழ்த் தாமரை ஒன்று உண்டு. அது ஞான வெளியில் இருப்பதால் அங்கு நிலமோ நீரோ இல்லை. இந்தத்தாமரை வேர் இல்லாமல் மலர்ந்தே உள்ளது. அதனால் அதற்கு மொட்டும் இல்லை. அது ஒளியால் நிரம்பி உள்ளது. ஒளி எங்கும் பரவி இருப்பதால் அதற்கு குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கும் என்று இல்லை. ஓளிக்கு காரணம் இந்த தாமரையே என்றாலும் அதற்கு அடியும் இல்லை நுனியும் இல்லை.

பாடல் # 824

பாடல் # 824 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே.

விளக்கம் :

உடலில் கொப்புழில் இருந்து பன்னிரண்டு விரல் கீழே வேதத்தில் கூறியது போல் பகல் போல் ஓளி இருக்கிறது. கேசரியோகத்தின் மூலம் அந்த ஓளிப் பிழம்பிலிருந்து வெளிப்பட்டு எழுந்து வரும் ஓங்காரத்தை இடைவிடாது சிந்தித்தால் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாக இவ்வுடல் அமையும்.