பாடல் #833

பாடல் #833: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே.

விளக்கம் :

பரியங்க யோகம் செய்வதற்கு ஏற்ற வயது பெண்ணுக்கு இருபதும் ஆணுக்கு முப்பதும் ஆகும். இந்த யோகம் கைவந்தவர்கள் இருவருக்கும் ஆனந்தம் உண்டாகும். பெண்ணின் ஐம் பொறிகளும் இன்பத்தில் மலர்ந்திடும். ஆணுக்கு சுக்கில நீக்கம் ஏற்படாது.

பாடல் #832

பாடல் #832: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மென்றெண்ணி இருந்தான் இருந்ததே.

விளக்கம்:

அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாத மிகவும் கடினமான பரியங்க யோகத்தை செய்து இறைவனைத் தமக்குள் உணர்ந்தவர்கள் யார் என்றால் விண்ணுலகிலிருந்து வலிமையோடு பொழியும் கங்கையைத் தமது தலையின் சடையில் தாங்கிக் கொண்டு நஞ்சாக இருந்தாலும் அதை உலக நன்மைக்காக ஏற்றுக்கொள்பவனாகிய இறைவனைப் போன்றவர்கள். ஏனெனில் அவர்கள் இனிக்கின்ற சிற்றின்பம் வேண்டாமென்று ஐந்து நாழிகைக்குள் இறைவனை மட்டுமே நினைத்து யோகத்தில் இருந்தவர்கள்.

பாடல் #831

பாடல் #831: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் யோகம் அடைந்தார்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே.

விளக்கம்:

ஐந்து நாழிகைகள் மன உறுதியோடு இறைவனை நினைத்துக் கொண்டே மிகவும் கடினமான பரியங்க யோகத்தை செய்தவர்களுக்கு மட்டுமே இறைவனை தமக்குள் உணரும் பெரும்பேறு கிடைக்கும். மற்றவர்கள் விரக தாபத்தில் கையிலிருக்கும் வளையல்கள் நழுவும் அளவிற்கு மெலிந்த தேகத்துடன் சந்தனம் போன்ற வாசனையும் மிருதுவும் உடைய கொங்கைகளை கொண்ட மாதர்களைத் தழுவிப் பெறும் சிற்றின்பத்திலேயே மூழ்கி இருப்பார்கள்.

பாடல் #830

பாடல் #830: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சு தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே.

விளக்கம் :

பரியங்க யோகம் ஐந்து நாழிகைப் பொழுது மட்டுமே செய்ய வேண்டும். அதற்கு மேலும் பயின்றால் ஆறாவது நாழிகையில் துணைவி துணைவன்பால் கொள்ளும் போகம் அதிகமாகி நெஞ்சம் பூரித்து சிற்றின்பத்தில் ஆழ்ந்துவிடுவார். ஐந்து நாழிகைப் பொழுது போகத்தில் யோகம் செய்வது மட்டுமே பரியாங்க யோகமாகும்.

பாடல் #829

பாடல் #829: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.

விளக்கம் :

பாடல் #828 ல் உள்ளபடி வெற்றி பெற்ற தலைவன் தன் ஆன்மாவை அறிந்தவன் ஆவான். அவனைச் சிவயோகம் தானே வந்தடையும். தன்னைத் தானே வசப்படுத்தி ஆளும் திறமை அவனுக்கு வரும். ஐந்து பூதங்களும் அவன் வசமாகி அவன் விருப்பப்படி நடக்கும்.

பாடல் #828

பாடல் #828: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.

விளக்கம் :

போகத்தின் போது உடலிலிருந்து நீரின் தன்மை கொண்ட சுக்கிலம் வெளியே செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் யோகத்தால் பாதுகாத்து வெற்றி கொண்டவன் யோகிகளுக்குத் தலைவனாய் இருப்பான்.

பாடல் #827

பாடல் #827: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே.

விளக்கம் :

பாடல்# 801 ல் உள்ள படி ஒரு தலைவனும் தலைவியும் யோகத்தில் போகம் செய்யும் போது வலது இடது நாசிகளின் வழியே ஏறி இறங்கும் மூச்சுக்காற்றின் வழியே மேலே சென்று தலையின் மேலே சஸ்ரதளத்தில் உள்ள ஒலி ஓளிகளை கைவருமாறு செய்தால் முதுகுத்தண்டு எப்போதும் தளராது. தளராததாகவே உடலுக்கும் அழிவில்லை.

பாடல் #826

பாடல் #826: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மேகத்த வெள்ளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே.

விளக்கம் :

பாடல்#825 ல் கூறியபடி தலை உச்சியில் சகஸ்ரதளத்தில் பேரறிவு பொருந்திய சிவனை எண்ணியபடி ஓர் ஆடவன் போகத்தில் ஈடுபட்டால் அவனது காம வாயு விரைவாக அதன் வேலையை செய்யாமல் நீரின் தன்மை கொண்ட அவன் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தில் கலக்காது. மயக்கும் சூதாடும் கருவியைப் போன்ற ஸ்தனங்கள் உடைய பெண்ணும் உடல் என்னும் தேரைச் செலுத்தும் ஆடவனும் செய்த இந்தக் கூட்டுறவால் வெளிப்பட்ட சுக்கிலமும் சுரோணிதமும் ஒளியாய் மாறித் தலையில் சென்று தன் தலையில் நாதமாகிய சிவனும் ஒலியான சக்தியும் விளங்குவதைக் காண்பான்.

பாடல் #825

பாடல் #825: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழலில் மாலையுஞ் சாத்திக்
காயக் குழலி கலவியொ டுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே.

விளக்கம்:

உடம்பில் பூசுவதற்கு ஏதுவான வாசனை திரவியங்களையெல்லாம் பூசிக்கொண்டு நீராடி காயவைத்த நறுமணம் கமழும் கூந்தலில் வாசனையுள்ள மலர்களையும் மாலையாகச் சூடிக்கொண்டு மனதை மயக்குகின்ற மங்கையோடு கலவியில் ஒன்றாகக் கலந்து இருக்கின்ற போதும் ஊசியில் நூல் கோர்ப்பது போல நெற்றிக்கு நடுவில் உள்ள சுழுமுனை நாடியின் உச்சித்துளை வழியே மூச்சுக்காற்றை செலுத்திக் கொண்டே இருக்கின்ற யோகியர்களுக்கு போகம் எப்போதும் அழியாது.

குறிப்பு: ஆணும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர் போகத்தில் இருக்கும் போது அதை யோகமாக எப்படி மாற்றுவது என்பதை விளக்குவதே பரியாங்க யோகமாகும்.

பாடல் # 824

பாடல் # 824 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே.

விளக்கம் :

உடலில் கொப்புழில் இருந்து பன்னிரண்டு விரல் கீழே வேதத்தில் கூறியது போல் பகல் போல் ஓளி இருக்கிறது. கேசரியோகத்தின் மூலம் அந்த ஓளிப் பிழம்பிலிருந்து வெளிப்பட்டு எழுந்து வரும் ஓங்காரத்தை இடைவிடாது சிந்தித்தால் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாக இவ்வுடல் அமையும்.