பாடல் #703

பாடல் #703: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

விளக்கம்:

உயிரின் உடலாகிய தேருக்கு ஆறு ஆதாரச் சக்கரங்கள் இருக்கின்றன. இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களின் வழியே சக்தியூட்டப்பட்ட வாயு ஏழாவது ஆதாரமான சகஸ்ரதளத்திற்கு சென்று அங்கிருக்கும் இறைசக்தியோடு கலந்தபின் உருவாகின்ற அமிர்தம் அங்கிருந்து கீழிறங்கி எட்டாவது இடமாகிய உள் நாக்கிற்கு மேலே வந்து விழுகின்றது. இவ்வாறு விழுகின்ற அமிர்தத்தைப் பருகிக்கொண்டே பேரின்பத்தில் திளைத்திருக்கும் போது மாபெரும் நிலம் போன்ற உடலின் ஒன்பது துவாரங்களும் மூச்சுக்காற்றோடு இணைந்து இருக்கின்றது.

கருத்து: அமிர்தத்தைப் பருகி வாழ்பவர்களுக்கு உணவோ தண்ணீரோ தேவைப்படுவதில்லை. அவர்கள் அமிர்தத்தை மட்டுமே பருகிக்கொண்டு ஒன்பது துவாரங்களின் வழியாக வெளிக்காற்றோடு இணைந்திருக்கின்றார்கள்.

பாடல் #704

பாடல் #704: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே.

விளக்கம்:

சந்திரகலையாகிய இடகலை நாடியின் வழியே செல்லும் மூச்சுக்காற்றும் சூரியகலையாகிய பிங்கலை நாடியின் வழியே செல்லும் மூச்சுக்காற்றும் சுழுமுனை நாடி வழியே மேலே சென்று சிவபெருமான் இருக்கும் சகஸ்ரதளத்தில் இணைவதை புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் பார்த்து அதிலேயே லயித்து தன்னுடல் மேலும் இந்த உலகத்தின் மேலும் உள்ள பற்றுக்களை அறுத்து பேரொளியாகிய இறைவனையே நினைத்து சமாதி நிலையில் இருப்பவர்கள் சிவ யோகியர்கள் ஆவார்கள்.

கருத்து: தனக்குள்ளே இறைவனை தரிசித்து இறை நினைப்போடு பற்றுக்களை அறுத்து சமாதி நிலையில் இருப்பவர்கள் சிவ யோகியர்கள்.

பாடல் #705

பாடல் #705: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல் கால்வேகம் நுந்தலே.

விளக்கம்:

உற்றார் உறவினர் சுற்றத்தார் ஆகியோரை விட்டு நீங்கி இருப்பதும் பணிவை தருகின்ற உண்மையான கல்வியால் வருகின்ற ஞானத்தை அதிகமாகக் கொண்டிருப்பதும் எதையும் முணுமுணுக்காமல் உண்மையான மெளனத்தோடு அடங்கிக் கிடக்கும் சித்தர்கள் எண்ணத்தால் போதித்தவற்றை தமக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருப்பதும், உலக விஷயங்களில் அலைபாயாமல் ஒருமுகப்பட்ட மனதைக் கொண்டு எப்போதும் மூச்சுக்காற்றை தமக்குள்ளேயே வேகமாக ஏற்றி இறக்கி தியானத்தில் இருப்பதும் சித்தர்களின் செயல்களாகும்.

கருத்து: உலக விஷயங்களில் எதிலும் தலையிடாமல் எதனாலும் பாதிக்காத மனதுடன் குரு போதித்ததை தமக்குள்ளேயே உணர்ந்து மெளனமாய் இருப்பதும் தியானம் செய்து மூச்சுக்காற்றை கவனித்துக்கொண்டு இருப்பவர்களே சித்தர்கள்.

பாடல் #706

பாடல் #706: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரணன் திருவுரு வாதன்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.

விளக்கம்:

பாடல் #705 ல் கூறியுள்ள ஆறு தகுதிகளுடன் முதுமை அடையாமல் மரணம் இல்லாத தன்மையைப் பெறுதலும் எங்கிருந்தாலும் எப்போதும் அருள் வெளியோடு கலந்திருத்தலும் இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு பலவித நற்செயல்கள் செய்து பெற்ற பலன்களை பித்ருக்களுக்கு சமர்ப்பணமாக அளித்தலும் சிவபெருமானை உணர்ந்து அவனது திருவுருவமாகவே மாறுவதும் ஆகிய மொத்தம் பத்து வித தகுதிகளை பலவித யோகங்கள் மூலமாக கற்று தமது கையில் இருக்கும் பொருள் போலத் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.

கருத்து: யோகமுறைகளை முறையாகக் கற்று உணர்ந்து பத்துவிதமான தகுதிகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.