பாடல் #680

பாடல் #680: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அது சகஸ்ரதளத்தோடு கலந்து ஜோதியானதை அகக் கண்ணால் கண்டபின் கரிமா எனும் சித்தி கிடைக்கும். அதன்பின் வரும் காலங்கள் நமது ஆயுள் காலத்தை அழிப்பது இல்லை. அவ்வாறு கரிமா எனும் சித்தியால் காலத்தை வெல்பவர்கள் மலைபோல அசைக்கமுடியாமல் இருப்பார்கள்.

கருத்து: சகஸ்ரதளத்தில் ஜோதி தரிசனம் கண்டபின் கரிமா எனும் சித்தி கைவரப்பெற்று காலத்தால் அசைக்கமுடியாமல் இருக்கலாம்.

பாடல் #679

பாடல் #679: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.

விளக்கம்:

நம்மைக் கட்டுப்படுத்தும் பஞ்ச பூதங்கள் முதலான பல்வேறு தத்துவங்களை உணர்ந்து அனைத்திற்கும் தலைவியான அருள் சக்தியுடன் மனதை ஒருமுகப்படுத்தி வைத்து அதிலேயே லயித்து யோகப் பயிற்சியில் ஒரு வருடம் இருந்தால் அந்தத் தத்துவங்களை வெல்லலாம். அவ்வாறு அனைத்து தத்துவங்களையும் வென்றவருக்கு பிராத்தி எனும் சித்தி கிடைக்கும்.

கருத்து: உலகத் தத்துவங்களிலிருந்து விலகி ஒரு வருடம் யோகப் பயிற்சி செய்தால் பிராத்தி எனும் சித்தி கிடைக்கும். பிராப்தி என்பது தூரத்திலிருப்பதை இருக்கும் இடத்திலேயே பார்க்கவும் மனதினால் நினைத்தவை யாவையும் அடையவும் பெறும் ஆற்றல்.

பாடல் #678

பாடல் #678: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தன்வழி யாகத் தழைத்திடு ஞானமுந்
தன்வழி யாகத் தழைத்திடு வையகந்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்
தன்வழி தன்னரு ளாகிநின் றானே.

விளக்கம்:

தான் என்னும் அகங்காரத்தை விட்டு தானே சிவம் என்பதை உணர்ந்தவன் மூலம் உலகத்தார் ஞானம் செழித்து ஓங்கும். உலகமும் செழிப்புற்று விளங்கும். அவன் வழியால் செழித்த பொருட்களெல்லாம் அவன் வசப்பட்டு நிற்கும். உலகத்தைவிட பெரியவனாக அவன் இருப்பதால் மகிமா எனும் சித்தியைக் குறிக்கின்றது.

கருத்து: மகிமா சித்தி கைவரப் பெற்றவரின் அருளால் உலகத்தில் ஞானமும் வளங்களும் செழித்து இருக்கும்.

பாடல் #677

பாடல் #677: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றபின்
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அது சகஸ்ரதளத்தோடு கலந்து ஜோதியானதை அகக் கண்ணால் கண்டபின் மகிமா எனும் சித்தி கிடைக்கும். அதன்பின் வரும் காலங்கள் நமது ஆயுள் காலத்தை அழிப்பது இல்லை. உலகத்திலுள்ள அனைத்தையும் விட பெரியதாகிய காலத்தை மகிமா எனும் சித்தியால் வென்று காலத்தால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அவ்வாறு இருக்கும் காலங்களை நமது எண்ணப்படி அமைக்கலாம்.

கருத்து: சகஸ்ரதளத்தில் ஜோதி தரிசனம் கண்டபின் மகிமா எனும் சித்தி கைவரப்பெற்று காலத்தை வெல்லலாம்.