பாடல் #628

பாடல் #628: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.

விளக்கம்:

எண்ணங்களைச் சிதறவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி குண்டலினி சக்தியின் மேல் வைத்து அதை சுழுமுனை வழியே மேலேற்றிச் சென்று இந்த உலகையெல்லாம் அழகாக செதுக்கி உருவாக்கிய பேரொளியாகிய இறைவனின் பொன் போன்ற அழகிய பாதத்தை நாடி அறிவால் இறைவனை உணர்ந்து சிவமும் தாமும் இரண்டாக இல்லாமல் ஒன்றாகக் கலந்து இருத்தல் சமாதி நிலையாகும்.

பாடல் #629

பாடல் #629: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.

விளக்கம்:

மனதை ஒருமுகப்படுத்தி இறை நினைப்பிலேயே ஒன்றி சமாதி நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு தான் யார் என்பதை உணர்ந்து தனக்குள் இருக்கும் சிவமும் உலகங்களை இயக்கிக்கொண்டிருக்கும் சக்தியும் ஒன்றாக சேர்ந்து இருக்கும். மாயை நீங்கி அருள்சக்திக்கு எதிரான காமம், கோபம், அகங்காரம் அகன்றுவிடும்.

பாடல் #630

பாடல் #630: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.

விளக்கம்:

சமாதி நிலையில் நம்முடைய ஆன்மா ஈடு இணையில்லாத பேரொளியாய் விளங்கும் சிவபெருமானோடும் ஆதி சக்தியோடும் ஒன்றாகக் கலந்து விடும். அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும் கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும் ஆதிக்கடவுளான சிவபெருமானிடம் அடிபணிந்து அன்பு செலுத்துவதை நாம் உணரலாம்.

பாடல் #631

பாடல் #631: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

விளக்கம்:

சமாதி நிலையை அடைபவர்களுக்கு பலவிதமான யோகங்களோடு அறுபத்து நான்கு விதமான சித்திகளும் கிடைக்கும். இறைவனுடன் ஒன்றாகக் கலந்து தாமே சிவமாகிய பின் சமாதி நிலையே தேவையில்லை.

பாடல் #598

பாடல் #598: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகக் கூறே.

விளக்கம்:

ஆதியிலிருந்து வரும் பூதங்கள் ஐந்தும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) புலன்கள் ஐந்தும் (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல்) அந்தக் கரணங்கள் நான்கும் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) மாயை ஒன்றும் ஆத்மா ஒன்றும் ஆகிய 16 உண்மைகளையும் நினைப்பது ஆருயிர்த் தியானம் ஆகும். சாதாரண நிலையில் அறிவு புலன்களின் மேல் பற்றுகொண்டு இருக்கும். அந்த அறிவை புலன்களை விட்டு விலக்கி வைத்தால் வருவது முதல் பிரிவான அம்மை அப்பனாகிய இரண்டு சக்திகளும் பரத்தியானம் ஆகும். அறிவில் குருவாக சிவனை வைத்துவிட்டால் வருவது இரண்டாம் பிரிவான சிவத்தியானம் ஆகும். பரத்தியானம், சிவத்தியானம் ஆகிய இவையே யோகத்தின் இரண்டு பிரிவுகளாகும்.

பாடல் #599

பாடல் #599: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மையும் பிழைப்பித்த வாறே.

விளக்கம்:

கண், நாக்கு, மூக்கு, காது ஆகிய நான்கின் உணர்வுகளை உணர்த்தும் ஞானமாகிய கூட்டத்தில் ஓம் என்னும் ஒலியை உருவாக்கி நிற்கின்ற பரம்பொருள் ஒன்று உண்டு. அந்தப் பரம்பொருளை நினைத்து உடலை வருத்தி தியானம் செய்பவர்களின் உள் நாக்கின் உள்ளே அகண்ட பேரொளியைக் காட்டுவது மட்டுமன்றி அவ்வாறு உடலை வருத்தி தியானத்தை செய்தவர்களுக்கு இறப்பில்லாத நிலையையும் கொடுக்கும்.

பாடல் #600

பாடல் #600: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றதுவும் பார்க்கலு மாமே.

விளக்கம்:

இரண்டு கண்களையும் மூடி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்து ஞானக் கண்ணில் (புருவ மத்தியில்) உள்ள ஜோதியைப் பார்த்து அதிலேயே மனதை வைத்தால் தலைக்கு மேல் ஆகாய கங்கை பாய்வது போன்ற உணர்வுடன் தானே தோன்றிய சுயம்புவாகிய சிவனையும் பார்க்கலாம்.

பாடல் #601

பாடல் #601: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவையே.

விளக்கம்:

உடலோடு கலந்துள்ள உயிரை ஒரு பொழுதும் நினைக்காதவர்கள் உயிருக்கு உயிராய் இருக்கும் சிவனை ஒரு பொழுதும் நினைக்காதவர்கள் சிவனின் மேல் சிந்தனையை ஒரு பொழுதும் வைக்காதவர்கள் நெற்றிக்கு நடுவில் உள்ள சக்தியை ஒரு பொழுதும் உணர மாட்டார்கள்.

பாடல் #602

பாடல் #602: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

விளக்கம்:

தியானத்தின் மூலம் மனதில் இருக்கும் ஒளியை பிரகாசமாக மேல் நோக்கி செலுத்தி கோபமாகிய அக்கினியை வெளியே போகும்படி செய்து அனைத்தையும் அறிந்து இருக்கும் சிவ ஒளியை பற்றியிருக்கும் சுழுமுனை (முதுகுத்தண்டு) என்னும் திரியை தியானத்தின் மூலம் தூண்டிவிட மனதில் இருக்கும் சிவம் என்னும் ஓளி அணையாமல் இருக்கும்.

பாடல் #603

பாடல் #603: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடியில் உள்ளே ஒளிபெற நோக்கில்
கண்ணாடியில் போலக் கலந்துநின் றானே.

விளக்கம்:

எண்ணிலடங்காத ஆண்டுகள் யோக நிலையில் இருந்தாலும் இறைவனை வெளியே கண்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. உள்ளுக்குள் இருக்கும் சகஸ்ரதளத்திலுள்ள ஒளியின் மேல் எண்ணத்தை வைத்து தியானித்தால் கண்ணாடியில் உருவம் கலந்து இருப்பது போல உள்ளுக்குள் கலந்து இருக்கும் இறைவனை உணரலாம்.