பாடல் #530

பாடல் #530: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

விளக்கம்:

ஞானத்தை அறிந்த பெரியோர்களை மதிக்காத கீழான எண்ணமுடையவர்கள் அப்பெரியோர்களின் உடனிருப்பவர்களையும் வருந்தும்படி கீழ்மையாக பேசுபவர்கள் ஆகிய இவர்கள் ஞானமில்லாமல் கல்வியை மட்டுமே அறிந்தவர்களின் வழியில் சென்று ஞானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஞானத்தை அடைய முயற்சிப்பார்கள். ஞானத்தை அறிந்த பெரியோர்களால் கிடைக்காத ஞானம் வேறு யாரிடம் கிடைக்கும்?

பாடல் #531

பாடல் #531: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.

விளக்கம்:

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை சீடனுக்கு உணர்த்திய குருவின் பெருமை குலையும்படி தவறாகப் பேசுகின்ற சீடர்கள் ஊர் சுற்றித் திரியும் நோயுள்ள நாயாகப் பிறந்து பின்னர் ஒரு யுகத்திற்குப் பூமியில் புழுவாக கிடப்பார்கள்.

பாடல் #532

பாடல் #532: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடுஞ்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

விளக்கம்:

இல்லறத்தில் இருக்கும் ஞானிகள் மற்றும் இறை தத்துவத்தை உணர்ந்த ஞானிகளை அவர்களுடைய மனம் வருந்தும்படி தீங்கு செய்தவர்களின் சொத்துக்களும் உயிரும் ஒரே ஆண்டில் அழிந்துவிடும் இது உண்மை இதுவே சதாசிவத்தின் ஆணை.

பாடல் #533

பாடல் #533: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

மந்திரம் ஓரெழுத் துரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

விளக்கம்:

ஓம் என்ற பிரணவ மந்திரத்தில் பெரிய தவங்களைச் செய்தவர்களின் மனம் வருந்தும்படி தீமைகள் செய்தவர்கள் பசியால் வருந்தி அலைகின்ற நாயாகப் பிறந்து பின்னர் மனிதப் பிறவி எடுத்தாலும் எண்ணில் அடங்காத தாழ்ந்த பிறப்பு எடுத்து இறப்பார்கள்.

பாடல் #534

பாடல் #534: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

ஈச னடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடுஞ் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாகுமே நந்நந்தி யாணையே.

விளக்கம்:

சிவனடியார்கள் மனம் வருந்தினால் அவர்களிருக்கும் நாடும் அது தேடும் பெருமைகளும் அழிந்துபோகும். அதுமட்டுமில்லாமல் இந்திரனது ஆட்சியும் பேரரசர்களுடைய ஆட்சியும் அதற்குப் பொறுப்பாகி அழிந்துவிடும் என்பது சிவபெருமானின் ஆணையாகும்.

பாடல் #535

பாடல் #535: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.

விளக்கம்:

உண்மையான ஞான வழியைக் கூறிய குருவின் முன்பாகப் பொய் பேசினால் இருக்கும் நல்லொழுக்கம் குறைந்து போவது மட்டுமன்றி அவர் கொடுத்த ஞானமும் அழிந்துவிடும். தொன்றுதொட்டு (பழங்காலத்திலிருந்து) வருகின்ற ஞானத்தை அடையும் வழிகளும் மறந்துபோய் ஆத்ம வளர்ச்சிக்கான பிற வழிகளும் அழிந்து போய் வறுமையும் உண்டாகும்.

பாடல் #536

பாடல் #536: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞானிக் கொப்பே.

விளக்கம்:

ஞானத்தைப் பெற்ற குரு இருக்கும் போது அவரை விட்டுவிட்டு கர்மத்தின் வழியில் நடப்பவரை குருவாக ஏற்பது கையில் இருக்கும் மாணிக்கத்தைத் தவற விட்டுவிட்டு காலில் பட்ட கல்லை எடுத்துச் சுமப்பவரின் விதியைப் போன்றதாகும். அதுமட்டுமின்றி கையில் இருக்கும் நெய், பால், தயிரை விட்டுவிட்டு தனக்கு நன்மை தராத உணவை சாப்பிடுவது போன்றதாகும்.

பாடல் #526

பாடல் #526: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வாரம ராபதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே.

விளக்கம்:

தெளிந்த ஞானம் உள்ளவர்கள் சிந்தனை செய்து தமக்குள்ளே இருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானை உணர்ந்து அவருடைய அருளைப் பெறுவார்கள். தெளிந்த ஞானமில்லாத கீழான மக்கள் அச்சிவபெருமானை சிறுதெய்வமாக எண்ணி இகழ்ந்து புறக்கணித்தால் அவர்களின் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளிபோல ஆகும்.

பாடல் #527

பாடல் #527: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.

விளக்கம்:

ஆசையால் அனுபவித்து வாடிப்போன தேகத்தை உடையவர்கள், தேவர்கள் அசுரர்கள் ஆகியவர்கள் உண்மை ஞானத்தை உணரவில்லையென்றால் இறந்தவர்களைப் போலானவர்களே. அன்பினால் கசிந்து அமுதம்போல் சுரக்கும் ஆதியாகிய சிவபெருமானைத் தன் உள்ளக் கோவிலில் வைத்து வழிபடுபவர்களால் மட்டுமே உண்மையான ஞானத்தைப் பெற இயலும்.

பாடல் #528

பாடல் #528: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

விளக்கம்:

அறியாமையால் வரும் அகங்காரத்தினால் தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானுடன் பகைமை கொண்டு விரைவில் அழிந்து போனார்கள். சிவபெருமானுடன் எந்த வகையான பகைமை கொண்டாலும் அவரை அடைய முடியாது. அது பொய்யான பகையாக இருந்தாலும் அதனால் வரும் தீமை ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகி அழிக்கும்.