பாடல் #484

பாடல் #484: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துஉரு வாமே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் பெண்ணின் வயிற்றில் தங்கிய கருவானது மனித உடலின் உள் நாக்கிற்கு மேலே இருக்கும் சுழு முனை நாடித் துளை வழியே தரிசிக்கும் ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகும். அந்தக் கரு குழந்தையாக மாறும் போது சூரியனைப் போன்ற தகதகக்கும் தங்க நிறத்தில் இருக்கும். பிறகு அதுவே உடலின் பல்வேறு உறுப்புகளாக வளரும் போது தந்தை தாயின் உருவத்திற்கு ஏற்ற மாதிரி குழந்தையின் உருவமும் பொருத்தமாக வளரும்.

உட்கருத்து: உடலின் ஆறு ஆதாரச் சக்கரங்களும் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியின் வழியில்தான் இருக்கின்றன. அதன் வழியே குண்டலினி சக்தியை மேலே ஏற்றினால் அது ஏழாவது இடமான தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரர தளத்தைச் சென்று சேர்ந்து அங்கே ஒளி வடிவமாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து பிறகு அங்கிருந்து கீழே வந்து உள் நாக்கிற்கு மேலே இருக்கும் துளை வழியே அமிர்தமாகப் பொழிந்தால் பிறவி இல்லாத பெரும் வாழ்வு கிடைக்கும். இந்தத் துளை வழியே இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க முடியும். அங்கே ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனின் அம்சம்தான் தந்தையின் உடலிலிருந்து குழந்தையின் உயிராகத் தாயின் வயிற்றில் சென்று சேருகின்றது. பெண்ணின் வயிற்றில் தங்கிய கரு குழந்தையாக மாறும் போது சூரியனைப் போன்ற நிறத்திலும் பிறகு எல்லா உறுப்புகளும் உருவாகும் போது தந்தை தாயின் சாயலிலேயே உருவாகும்.

பாடல் #485

பாடல் #485: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்
பருவம தாகவே பாரினில் வந்து
மருவி வளர்ந்திடும் மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.

விளக்கம்:

குழந்தையின் உருவம் பத்து மாதங்களாகத் தாயின் கர்ப்பப் பைக்குள் கருவாக வளர்ந்து பூமியில் குழந்தையாக பிறந்து இளைஞன் முதியவன் ஆகிய பலவித பருவங்களாக வளர்ந்தாலும் தனக்குள் இருக்கும் இறைவனையும் தான் யார் என்பதையும் மாயையினால் அறியாமலேயே வளரும். எப்பொழுது அந்த உயிர் இறக்கின்றதோ அப்போது அதனின் உடலை விட்டு சூட்சுமமான ஆன்மாவாகத் திரும்பி போய்விடுவதை உலகத்தவர்கள் எவரும் அறிய மாட்டார்கள். மாயையினால் கட்டுண்டு இருக்கும் உலகத்தவர்கள் உயிர் ஆன்மாவாக இருப்பதையோ ஆன்மா இறைவனின் அம்சமாக இருப்பதையோ என்றும் அறியாமலேயே பிறந்து வாழ்ந்து இறந்து போகின்றனர்.

பாடல் #486

பாடல் #486: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இட்டார் அறிந்திலர் ஏற்றவர் கண்டிலர்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன்இம் மாயையின் கீழ்மையைஇவ் வாறே.

விளக்கம்:

சுக்கிலத்தை இட்ட ஆண்களும் அது கருவாகியதா என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அந்த சுக்கிலத்தை ஏற்றுக் கொண்ட பெண்களும் அது கருவாகியதா என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். தங்கத்தை நகையாகச் செய்யும் தச்சன் போல ஆன்மாவை வினைப்படி உயிராகச் செய்யும் பிரம்மன் இதை அறிந்திருந்தாலும் அதை யாருக்கும் அவன் சொன்னதில்லை. அனைத்தும் அறிந்த இறைவனும் உயிர்களிடம் கலந்து இருந்தாலும் அவனும் யாருக்கும் ஒன்றும் சொல்வதில்லை. இதையெல்லாம் உயிர்கள் அறியாதது அவர்களின் மாயையினால் தான். இறைவனின் அருளால் யான் இறைவனை எனக்குள்ளேயே கண்டு உணர்ந்துவிட்டதால் அந்த மாயையை அழித்து இதை அறிந்து கொண்டேன்.

உட்கருத்து: மாயையினால் உயிர்கள் எதையும் அறியாமல் இருக்கின்றார்கள். உண்மையை அறிந்த பிரம்மனும் இறைவனும் உயிர்களுக்கு தாமாகவே எதையும் சொல்லுவதில்லை. இறைவனை அறிந்து தமக்குள்ளேயே உயிர்கள் உணர்ந்து விட்டால் மாயை அழித்து உண்மையை உள்ளபடியே அறிந்து கொள்ளலாம். (இதை எவ்வாறு செய்வது என்பதை அடுத்த பாடல் #487 இல் விளக்குகின்றார்)

பாடல் #487

பாடல் #487: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோற்றிய
தொன்புற நாடிநின்று ஓதலு மாமே.

விளக்கம்:

ஆண் பெண் இருவரும் சந்தித்து இன்பத்தில் உறவாடுகின்றார்கள். அவர்களின் உறவினால் துன்பத்தையே கொடுக்கும் பந்த பாசம் எனும் மாயையால் கட்டப்பட்ட கரு உருவாகி குழந்தையாக பிறந்து உயிராக வளர்கிறது. வளரும் அந்த உயிர் மாயையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால் தன்னை உயிராகப் பிறக்க வைத்த இறைவன் ஒருவன் ஆதி காலத்திலிருந்தே எப்போதும் இருக்கின்றான் என்பதை உணர்ந்து அவனைத் தேடி அடைய ஆசைப்பட்டு அவனின் திருநாமத்தை (ஓம் நமசிவாய) மந்திரமாக ஓதி தியானத்தில் இருந்து அவனைத் தமக்குள்ளே அறிந்து மாயையிலிருந்து விடுபடலாம்.

குறிப்பு: உயிர்கள் தங்களுக்கு பிடித்த தனது இஷ்ட தெய்வத்தின் நாமத்தையும் மந்திரமாக ஓதி தியானத்தில் இருந்து அவனைத் தமக்குள்ளே அறிந்து மாயையிலிருந்து விடுபடலாம்.

பாடல் #488

பாடல் #488: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

குயிற்குஞ்சு முட்டை காக்கைதன் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.

விளக்கம்:

குயில் தனது முட்டையை காக்கையின் கூட்டில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்துவிடும். காக்கைக்கு குயிலின் முட்டைக்கும் தன்னுடைய முட்டைக்கும் வித்தியாசம் தெரியாததால் அதைத் தனது குஞ்சு என்றே நினைத்துக் கொண்டு எந்தவித சந்தேகமும் இல்லாமல் அடை காத்துப் பொரித்து பிறந்து அது கூவும் வரை குயிலின் குஞ்சு என்பதை அறியாமல் வளர்க்கும். அதுபோலவே இறைவன் தாயின் கருவில் இட்ட உயிரை தாய் தனது குழந்தை என்றே எண்ணிக் கொண்டு எந்தவித சந்தேகமும் இல்லாமல் உடல் அதிர்ந்து வேலை செய்யாமல் கருவை அழிந்துவிடாமல் பாதுகாத்து அது ஏன் வந்தது எதற்கு வந்தது என்கிற எண்ணம் இல்லாமல் இறைவனின் உயிரை தனது சொந்த உயிர் என்று எண்ணி பந்தம் பாசம் என்கிற மாயையினால் நினைத்துக் கொண்டு தாய் வளர்க்கிறாள்.

உட்கருத்து: உலகத்தில் பிறக்கும் அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சமான ஆன்மாவாக இறைவனின் பிள்ளைகளாகவே பிறக்கின்றன. இதை மாயையால் அறியாத உயிர்கள் தான் பெற்ற குழந்தை என்று நினைத்துக் கொண்டு பந்த பாசத்தில் கிடந்து தவிக்கின்றார்கள்.

பாடல் #489

பாடல் #489: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாம்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.

விளக்கம்:

ஒரு விதை முதலில் முளைத்து செடியாய் வளர்ந்து பின்பு வேர் மண் மற்றும் நீருடன் வினைபுரிந்து தன்னைப்போலவே பலத்துடன் தன்னுடைய தன்மையுடன் பல செடிகளை புதர் போல் உருவாக்குகின்றது. ஒரு வகை செடி தனது வகை செடியை மட்டுமே உருவாக்கும் வேறு வகை செடியை உருவாக்காது. உலகத்தில் எத்தனை வகை தாவரங்கள் அதன் வகைகளை உருவாக்குகின்றதோ அத்தனை வகை தாவரங்களாகவும் ஆதியாய் இருக்கும் இறைவனே இருக்கின்றான்.

குறிப்பு: கர்ப்பக்கிரியை தலைப்பில் இதுவரை மனித உயிர்கள் எப்படி உருவாகின்றது என்று மட்டுமே சொல்லப்பட்டு இருந்தது. இந்த பாடலில் உலகில் உள்ள தாவரங்கள் உருவாக்கம் பற்றி அருளியிருக்கின்றார்.

பாடல் #490

பாடல் #490: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஏனோர் பெருமைய னாகினும் எம்இறை
ஊனேய் சிறுமையுள் உட்கலந் தாங்குளன்
வானோர் அறியும் அளவல்ல மாதேவன்
தானே அறியும் தவத்தினது உள்ளே.

விளக்கம்:

அனைத்து தெய்வங்களையும் விட மாபெரும் பெருமையை உடைய எமது இறைவன் வினைகள் கர்மாக்கள் மலங்கள் கொண்ட குறைகள் நிறைந்த உயிர்களின் உடல்களிலும் கலந்து இருக்கின்றான். வானுலகத்திலுள்ள தேவர்களாலும் அறிய முடியாத அளவு இருக்கும் மகாதேவனாகிய அந்த இறைவனை உயிர்கள் தனக்குள் தவம் செய்து தமக்குள்ளேயே அறியலாம்.

பாடல் #491

பாடல் #491: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பரத்திற் பதிந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டில்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்தும் பிறக்கும் திருவரு ளாலே.

விளக்கம்:

இறைவனின் பரமான்மாவோடு கலந்திருந்த நல்ல ஆன்மா உலகில் உயிராகப் பிறந்து தனது ஆசைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டால் கடல் தண்ணீர் சூரியனின் வெப்பத்தினால் திரண்டு உப்புக் கட்டிகளாக மாறுவதுபோல இறைவனது திருவருளால் பேரான்மாவோடு கலந்திருக்கும் ஆன்மா உடல் பெற்று ஒரு உயிராகப் பிறவி எடுக்கின்றது.