பாடல் #323

பாடல் #323: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடுவு ஆகிநின் றாரே.

விளக்கம்:

அண்டசராசரங்கள் அனைத்திலும் தோன்றிய அனைத்தையும் அழிப்பவன் சதாசிவமூர்த்தி ஒருவனே அவன் இல்லாமல் வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து ஈசன் திருவடிகளை பற்றி மும்மூர்த்திகளுக்கும் முதன்மையானவனாகிய சதாசிவமூர்த்தியின் திருநாமமாகிய நமசிவாய மந்திரத்தை சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் நடுநிலையுடன் இருக்கும் ஞானியாகி விடுவார்கள்.

பாடல் #322

பாடல் #322: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

விளக்கம்:

பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருப்பவர்களில் சிலர் சிறந்த ஞானிகளாகி தேவர்களாகி சிவமாகவே ஆகின்றார்கள், யாமும் நடுநிலையுடன் இருப்பவர்களுடன் கலந்து இருக்கின்றேன்.

பாடல் #321

பாடல் #321: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை ஓதி
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனும் ஆமே.

விளக்கம்:

பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருந்து ஞானம் அடைந்தவர்களே பின்பு உலகத்தைக் காக்கும் திருமால் உயிர்களைப் படைக்கும் பிரம்மனாகவும் மாறுவார்கள். சிலர் சிறந்த ஞானியாகி சிவமாகவே மாறிவிடுவார்கள்.

பாடல் #320

பாடல் #320: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

விளக்கம்:

தனக்கோ உற்றார் உறவினர் மற்ற உயிர்கள் வாழும் உலகத்திற்கோ என்ன நடந்தாலும் இன்பம் துன்பம் என எது வந்தாலும் எல்லாம் இறை செயல் என்று எதனாலும் பாதிக்காத விருப்பு வெறுப்பு இல்லாமல் தான் செல்லும் இறை வழியிலிருந்து சிறிதும் மாறாமல் நடுநிலையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை. அப்படி இருப்பவர்களுக்கு நரகமும் இல்லை. அப்படி இருக்கக்கூடியவர்களே நல்ல தேவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நின்ற நெறியிலேயே யானும் நிற்கின்றேன்.

பாடல் #319

பாடல் #319: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோமென்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வுஅறி யாரே.

விளக்கம்:

பிறப்பு இறப்பு இல்லாத தேவர்களுக்கு இறைவனாகவும் அண்டங்கள் முழுவதும் பரவி ஜோதியாக ஆதியிலிருந்தே இருக்கும் இறைவனை உணர்ந்த அடியவர்கள் இறைவன் கூறிய வழியிலையே தொடர்ந்து சென்று இறுதியில் அடையும் பெருந்தெய்வமாக இருக்கும் இறைவனை உலகக் கல்வியை படித்து உணர்ந்து விடமுடியும் என்று கூறுபவர்கள் தமக்குள் ஜோதி வடிவாக நின்றுகொண்டு தம்மை வழி நடத்துபவனும் உயிரை உடலோடு தொடர்ந்து வைத்திருப்பவனும் அவனே எனும் உண்மை அறியாதவர்கள் ஆவார்கள்.

பாடல் #318

பாடல் #318: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் திரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

விளக்கம்:

அற நூல்களையும் வேதங்களையும் கற்று சிவஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத தீயகுணமுடையவர்கள் தமது ஐம்புலன்கள் வழியாக உள்ள ஆசைகளையும் உலக வாழ்க்கையையும் பற்றிக்கொண்டு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களால் வரும் மாசையும் அகற்றாத மூடர்கள் மற்றும் பல திசைகளிலும் உள்ள கற்றறிந்து உண்மை ஞானம் அடைந்தவர்களை உணரும் அறிவில்லாதவர்கள் இறைவனை அடையும் வழி தெரியாதவர்களே. அற நூல்களையும், வேதங்களையும் கற்று அதன் வழியில் இறைவனின் மேல் அன்போடு இருப்பவர்களே இறைவனை அடையும் வழி தெரிந்தவர்கள்.

பாடல் #317

பாடல் #317: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்துஅறி யாரே.

விளக்கம்:

உண்மையான ஞானத்தைக் கற்று அறியாத மூடர்களை சென்று பார்ப்பது நமக்கு நல்லது இல்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்டே ஆகவேண்டும் என்கிற கடமையும் நமக்கு இல்லை. உண்மையான ஞானத்தை கற்று அறியாத மூடர்களுக்கு தம்மைப் போலவே கற்று அறியாத மற்ற மூடர்களை நல்லவர்கள் என்று சொல்வார்கள். கல்லாத மூடர்க்கு எந்த கருத்தையும் அறிந்து கொள்ளும் திறன் கிடையாது.

பாடல் #316

பாடல் #316: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கணக்கறிந் தார்க்கன்றிக் காணஒண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

விளக்கம்:

இறைவனை அடையும் வழிகளை நன்றாக அறிந்து அதனை செயல் படுத்துபவர்களைத் தவிர வேறு யாருக்கும் இறைவனது திருக்காட்சியை காணமுடியாது உணரமுடியாது. இறைவனை அடையும் வழிகளை நன்றாக அறிந்து அதனை செயல் படுத்தி இறைவனது திருக்காட்சியை பார்த்து உணர்ந்தவர்களே உண்மை ஞானத்தைக் கற்று அறிந்தவர்கள் ஆவார்கள்.

குறிப்பு : கணக்கு அறிந்தவர்கள் என்றால் கணக்கை இப்படி போட்டால் பதில் கிடைத்து விடும் என்று எண்ணுபவர்கள் மட்டும் இல்லை. அந்த கணக்கை எழுதி சரியான பதிலை தருபவர்களே கணக்கை அறிந்தவர்கள் ஆவார்கள். அது போல இறைவனை அடையும் வழிகளை தெரிந்தவர்கள் மட்டும் ஞானம் அடைந்தவர்கள் இல்லை. அந்த வழிகளை பயன்படுத்தி இறைவனை கண்டு உணர்ந்தவர்களே ஞானம் அடைந்தவர்கள் ஆவார்கள்.

பாடல் #315

பாடல் #315: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணிலி எழுதி இளைத்துவிட் டாரே.

விளக்கம்:

வானவெளியில் உள்ளே இருந்து உயிர்களுக்கு அருள் செய்யும் இறைவன் அவர்களின் கண்களுக்குள்ளும் இருந்து காட்சியைக் காட்டுபவனாகவும் கலந்து அருள் செய்கின்றான். அந்த இறைவனை வழிபட்டு பேரின்பத்தை அனுபவிக்காமல் உலக வாழ்க்கையையே பெரிதானது என்று மதித்துக்கொண்டு இறைவனைப்பற்றி வீண் விளக்கங்கள் எழுதி வீண் பொழுதை கழிக்கின்றனர்.

பாடல் #314

பாடல் #314: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

நில்லாது சீவன் நிலையன்றுஎன் றெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லாத வினைத்துயர் போகஞ்செய் வாரே.

விளக்கம்:

உண்மையான ஞானத்தை கற்றவர்கள் உயிரோடு கூடிய உடல் என்றும் நிலையானது இல்லை என்று உணர்ந்து தம்மால் முடிந்த அளவு அற வழியிலும் தவ வழியிலும் சென்று இறைவனை அடைய முயற்சிக்கின்றனர். உண்மையான ஞானத்தை கற்றுக்கொள்ளாத உயிரோடு கூடிய உடல் உலக வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டு கொடுமையான வினையின் பயனால் வரும் துன்பங்களையே அனுபவித்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்குகின்றனர்.