பாடல் #911

பாடல் #911: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

மேனி யிரண்டும் விலங்காமன் மேற்கொள்ள
மேனி யிரண்டு மிகாரவி காரியா
மேனி யிரண்டுமூ வாயியே யோவென்று
மேனி யிரண்டுமீ யோவூவா வேகூத்தே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியா
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்று
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்தே.

விளக்கம்:

இறைவனது சொரூபமும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றை விட்டு ஒன்று விலகிவிடாமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபிக்கும் போது இறைவனது சொரூபமும் சாதகருடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றுக்கு ஒன்று அளவில் மாறுபடாமலும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமலும் இருக்கும். இறைவனது சொரூபமானது ஊ ஆ ஈ ஏ ஓ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமானது ஈ ஓ ஊ ஆ ஏ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் இருக்கின்றது. சாதகர்கள் இந்த மந்திரங்களை உச்சரிக்காமல் ஜெபிக்கும் போது இரண்டு சொரூபமும் ஒன்றாக கலப்பதே திருக்கூத்து ஆகும்.

குறிப்பு: இறைவனது சொரூபம் அனைத்திலும் கலந்திருக்கும் பேரொளியாகும். ஆன்ம சொரூபம் என்பது ஒவ்வொரு உயிர்களுடைய சிறிய ஒளி உருவமாகும். இறைவனது பேரொளியும் ஆன்மாவின் சிறிய ஒளியும் ஒன்றாக பாவித்து சாதகம் செய்யும் போது இறையருளால் ஆன்ம ஒளியானது பேரொளியால் காந்தம் போல் கவர்ந்திழுக்கப்பட்டு ஒன்றாக கலப்பதே திருக்கூத்தாகும்.

பாடல் #912

பாடல் #912: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

கூத்தே சிவாய நமமசி வாயிடுங்
கூத்தே யாயீயூ யேயோ நமசிவாய வாயிடுங்
கூத்தே யோவாவீ யூயே யநமசிவா வாயிடுங்
கூத்தே யேயோவா யீயூவா யநமசி கோளொன்றுமாறே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கூத்தே சிவாயநம மசிவா ஆயிடும்
கூத்தே ஆ ஈ ஊ ஏ ஓம் நமசிவாய ஆயிடும்
கூத்தே ஓம் ஆ ஈ ஊ ஏ யநமசிவா ஆயிடும்
கூத்தே ஏ ஓம் ஆ ஈ ஊ வாயநமசி கோளொன்றும் ஆறே.

விளக்கம்:

இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே சிவாயநம என்னும் மந்திரமாக இருக்கின்றது. இந்த மந்திரத்திற்கான ஆதார எழுத்துக்கள் ஊ ஏ ஓம் ஆ ஈ எனும் ஐந்து எழுத்து வடிவங்களாக இருக்கின்றது. இதை பாடல் 904 இல் உள்ளபடி மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் இடமிருந்து வலமாக ஆறு கோடுகளும் வரைந்து எழுத்துக்களை மாற்றி மாற்றி அமைத்தால் வரும் திருவம்பலத்தை சக்கரமாக வடிவமைத்தால் அதில் ஒன்பது கோள்களும் அடங்கி இருக்கும்.

குறிப்பு: பாடலில் உள்ளபடி சக்கரம் அமைத்து ஆதார மந்திரங்களை உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் சாதகர்களுக்கு ஒன்பது கோள்களும் இறையருளால் வசப்படும்.

பாடல் #913

பாடல் #913: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஒன்றி லிரண்டாட வோரொன் றுடமாட
வொன்றினின் மூன்றாட வோரேழு மொத்தாட
வொன்றினி னாலாட வோரொன் பதுமாட
மன்றினி லாடினான் மாணிக்கத்து கூத்தே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றில் இரண்டு ஆட ஓர் ஒன்று உடன் ஆட
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட
ஒன்றினிர் நால் ஆட ஓர் ஒன்பதும் ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்கத்து கூத்தே.

விளக்கம்:

அசையா சக்தியாக இருக்கின்ற இறைவன் அசையும் சக்தியோடு சிவசக்தியாக ஆடுகின்ற போது அவரோடு சேர்ந்து அண்டசராசரங்கள் அனைத்தும் ஆடுகின்றன. அசபை மூலம் சாதகம் செய்யும் சாதகர்களின் ஆன்மாவும் சிவசக்தியோடு சேர்ந்து ஆட அவர்களின் உடலிலுள்ள ஏழு சக்கரங்களும் அந்த சக்திகளோடு சேர்ந்து ஒன்றாக இணைந்து ஆடுகின்றது. நான்கு திசைகளும் ஒன்பது கோள்களும் சேர்ந்து இறைவன் அண்டசராசரத்தில் ஆடுகின்ற திருக்கூத்தே சாதகரின் உடலாகிய பிண்டத்தில் இறையருள் நிறைந்து மாணிக்க ஜோதியாக திருக்கூத்தாடும்.

பாடல் #851

பாடல் #851: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலை போல ஏறி இறங்குமாந்
துய்யது குக்கத்துத் தூலத்த காயமே.

விளக்கம் :

எண்ணங்கள் தூல உடலில் இருந்து சூட்சும உடலுக்கு ஏறியும் சூட்சும உடலில் இருந்து தூல உடலுக்கு இறங்கியும் வரும். இது சந்திரனின் வளர்பிறை தேய்பிறை போன்று இருக்கும். சூட்சும உடல் தூய்மை அடைவதற்கு ஏற்ப தூல உடம்பும் தூய்மை அடையும்.

பாடல் # 852

பாடல் #852: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி
ஆகின்ற யோகியர் அறிந்த அறிவே.

விளக்கம்:

உயிர்களின் உடலில் இருக்கும் சந்திர மண்டலத்திற்கு (இடதுபக்க மூச்சுக்காற்று) பதினாறு கலைகள் உண்டு. சூரிய மண்டலத்திற்கு (வலது பக்க மூச்சுக்காற்று) பன்னிரண்டு கலைகள் உண்டு. அக்கினி மண்டலத்திற்கு (குண்டலினி) பத்துக் கலைகள் உள்ளன. இடது பக்க முச்சுக்காற்றையும் வலது பக்க முச்சுக்காற்றையும் உபயோகித்து அகயோகப் பயிற்சியால் நடுநாடியாகிய சுழுமுனையின் வழியே குண்டலினியை மேல்நோக்கிச் செலுத்துவது எப்படி என்பதை யோகியர்கள் நன்றாக அறிந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பு: கலைகள் என்பது என்னவெனில் மூச்சுக்காற்று எப்படி தானாக உள்ளேயும் வெளியேயும் எப்படி சென்று வருகின்றது என்பதை குறிப்பதாகும்.

பாடல் #853

பாடல் #853: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்
மாறாக் கதிர்கொள்ளு மற்றங்கி கூடவே.

விளக்கம் :

சூரியன் பன்னிரண்டு கலைகளோடு சந்திரனது பதினாறு கலைகளையும் அக்கினியோடு சேர்க்க அறிந்து கொண்டவர் உலகம் விரும்பும் பேறுகளை அடைவர்.

பாடல் #854

பாடல் #854: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திறன் நின்றமையை ஆய்ந்துகொள் வீரே.

விளக்கம்:

சூரியகலை உயர்ந்து செல்லும் அளவு பன்னிரண்டு ஆகும். சந்திரக்கலை செல்லும் அளவு பதினாறு ஆகும். சூரியகலையும் சந்திரகலையும் சேர்ந்து குண்டலினியாகிய அக்கினியை உயர்த்திச் செல்வது மொத்தம் அறுபத்து நான்கு ஆகும். இவை மூன்றையும் குருநாதரின் வழிகாட்டுதலில் யோக முறைப்படி செய்து ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

பாடல் #855

பாடல் #855: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீ தீரெட்டா மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே.

விளக்கம்:

அக்கினிக் கலைகள் அறுபது நான்கு. சூரியனின் கலைகள் பன்னிரண்டு. சந்திரனின் கலைகள் பதினாறு இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சூழ்ந்து இருந்தாலும் தனித்தனியாகவே விளங்கிக் கொண்டிருக்கும்.

பாடல் #856

பாடல் #856: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையென்ப
கட்டப் படுந்தார கைக்கதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே.

விளக்கம் :

அக்கினிக்கு அறுபத்து நான்கு சூரியனுக்குப் பன்னிரண்டு சந்திரனுக்குப் பதினாறு என கலைகள் 92 ம் சேர்ந்துள்ள மூலாதாரத்தில் நட்சத்திரக் கலை நான்கு உள்ளன. இவ்வாறு மூலாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலைகள் மொத்தம் தொண்ணூற்றாறு ஆகும்.

பாடல் #857

பாடல் #857: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடியை நண்ணிநிற் பாரே.

விளக்கம் :

சந்திர மண்டலமாகிய இடகலை மற்றும் சூரிய மண்டலமாகிய பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுக்கப்படும் எல்லா மூச்சுக்காற்றும் இயல்பாகவே கீழ் நோக்கி செல்லக்கூடியவை. அவற்றைத் தடுத்து நடுவில் இருக்கும் சுழுமுனை நாடி வழியே அவற்றை மேல் நோக்கி எடுத்துச் சென்று உச்சந்தலையில் உள்ள சகஸ்ரதளத்தில் சேர்த்து இறைவனின் மேல் எண்ணத்தை வைத்து இருக்கும் யோகியர்கள் எப்போதும் இறப்பின்றி இறைவனின் திருவடிகளையே பற்றிக்கொண்டு பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.