பாடல் #5

பாடல் #5: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

விளக்கம்:

சிவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு எங்கு தேடினாலும் வேறு எந்த தெய்வமும் கிடையாது. அவன் ஈடுஇணை இல்லாதவன். அனைத்து தெய்வங்களுக்கும் மேலானவன். அவனோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு வேறு யாருமே இந்த உலகத்தில் இல்லை. இந்த உலகத்தையும் தாண்டிய பரவெளியில் சூரியனைப் போன்ற ஒளியுடன் பிரகாசித்துக்கொண்டும் சூரியனின் ஒளிக்கற்றைகள் போல மின்னும் சடையைக் கொண்டும் அவன் ஆயிரம் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்றான்.

பாடல் #6

பாடல் #6: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அவனை ஓழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.

விளக்கம்:

சிவத்தைத் தவிர பிறப்பு இறப்பு இல்லாத அமரர்கள் யாரும் இல்லை. சிவத்தை நோக்கி செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. சிவமுடைய அருள் இல்லாமல் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் தெய்வங்களால் எதுவும் செய்ய இயலாது. சிவமில்லாமல் முக்தி அடையும் வேறு எந்த வழியையும் நான் அறியவில்லை.

பாடல் #7

பாடல் #7: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.

விளக்கம்:

ஆதியிலிருந்து இருக்கும் மூன்று தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் மூத்தவன் சதாசிவமூர்த்தி. தனக்கு ஈடுஇணை இல்லாத தலைவன் அவன். அவனை அப்பா என்று அழைத்தால் உயிர்களுக்கு அப்பாவாகவே தோன்றுவான் (அவனை என்ன சொல்லி அழைத்தாலும் அதுவாகவே உயிர்களுக்குத் தோன்றி அருள்பாலிப்பான்). பொன் போன்ற அறிவு ஒளியைத் தரும் பல உபதேசங்களை குருவாக நின்று வழங்குபவனும் அவனே. பொன்னைப் போன்ற பேரொளியாக இருப்பவன் வேதங்களை தனக்குள்ளே கொண்டவன் அவன்.

பாடல் #8

பாடல் #8: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

விளக்கம்:

உயிர்கள் இறைவனை அடைவதற்காக அவர்களின் கர்மாக்களை அழிக்கும் போது இறைவன் தீயைவிடவும் அதிக வெப்பமானவானாக இருக்கின்றான். உயிர்கள் இறைவனை நாடும் போது தண்ணீரைவிடவும் குளிர்ந்தவனாக இருக்கின்றான். விருப்பு வெறுப்பின்றி தன்னலம் இல்லாத குழந்தையைவிட இறைவன் நல்லவன். காதுகளில் குண்டலங்களை அணிந்துகொண்டும் நீண்ட சடையைக் கொண்டவனுமான இறைவன் தன்னை நாடும் அன்பர்களுக்குத் பெற்ற தாயைவிடவும் மிகவும் அன்பு செலுத்துபவனாகத் திகழ்கின்றான். இருந்தும், அவனுடைய திருவருளை அறிந்தவர்கள் யாரும் இல்லை.

பாடல் #9

பாடல் #9: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

விளக்கம்:

பொன்னாலே பின்னப்பட்ட சடையை பின்னால் உடைய எம்மால் வணங்கப்படுகின்ற இறைவன் பெயர் நந்தி என்கின்ற சிவபெருமான் அவனால் வணங்கப்படுகின்றவர் இந்த உலகில் இல்லை.

பாடல் #10

பாடல் #10: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.

விளக்கம்:

சதாசிவமூர்த்தியாகிய இறைவனே மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டு வகையான உலகங்களையும் அண்ட சராசரங்களில் விரிந்திருக்கும் ஆகாயமாகவும் உயிர்களுக்கு வெப்பத்தை தருகின்ற நெருப்பாகவும் உலகத்திற்கு ஒளியையும் சக்தியையும் தருகின்ற சூரியனாகவும் இரவில் குளிர்ச்சியான ஒளியைத் தருகின்ற நிலவாகவும் மழையைப் பொழிய வைக்கின்ற மேகங்களாகவும் உலகம் முழுவதும் விரிந்து பரந்திருக்கும் மலைகளாகவும், குளிர்ந்த நீரைக் கொண்டிருக்கும் கடல்களாகவும் இருக்கின்றான்.

பாடல் #11

பாடல் #11: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் ஆதியாகிய சதாசிவமூர்த்தியை எண்ணினால் அவருக்கு நிகரான பெருந்தெய்வத்தை தூரத்திலும் அருகிலும் பார்க்க முடியவில்லை. நம்முடைய முயற்சியும் அவனே. நம் முயற்சியின் பயனும் அவனே .மழை பொழிகின்ற மேகமும் அவனே. அவன் பெயர் நந்தி ஆகும்.

பாடல் #12

பாடல் #12: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

விளக்கம்:

சிவபெருமான் நெற்றிக் கண்ணால் அருள் கொடுத்து நின்ற போது எண்ணில் அடங்காத தேவர்கள் அழிவில்லாத அமர வாழ்வைப் பெற்றார்கள். மண்ணில் வாழ்பவர்களும் விண்ணில் வாழ்பவர்களும் சிவபெருமானின் அருளைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் அவருடைய நெற்றிக் கண்ணால் நிறைய பேர் இறந்து விட்டதாக அறியாமையால் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்.

பாடல் #13

பாடல் #13: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

விளக்கம்:

மூவுலகையும் மூன்று அடிகளால் அளந்த திருமால் தாமரை மலரில் அமர்ந்த பிரம்மன் முதலிய அனைத்துத் தேவர்களும் இன்னமும் தங்களின் எண்ணத்தால் கூட அளக்க முடியாத சதாசிவமூர்த்தியின் பெருமையைப் பற்றி எண்ணாமல் இருக்கின்றார்கள். அடிமுடி காண முடியாத சதாசிவமூர்த்தியை அளந்து பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. கண் பார்க்கக்கூடிய எதையும் கடந்து அளவிட முடியாமல் அனைத்தையும் தனக்குள் உள்ளடக்கி நிற்கின்றான்.

பாடல் #14

பாடல் #14: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

விளக்கம்:

தாமரை மீது அமர்ந்து கொண்டு முதலாவதாகிய படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. உயிர்களைக் காப்பாற்றும் தொழிலைச் செய்யும் நீல வண்ணனாகிய திருமாலையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. இவர்கள் இருவருக்கும் அப்புறம் உயிர்களின் மாயையை அழிக்கும் ஈசுவரனையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. இவ்வாறு மூவரையும் கடந்து அனைத்திற்கும் இறைவனாக இருக்கின்ற சதாசிவமூர்த்தியை யாம் காணும் இடமெல்லாம் கண்டு நின்றோம்.