பாடல் #206: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)
இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரவிரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.
விளக்கம்:
பெண் யானையின் இயல்பை கொண்டு கர்ம வினைகளால் இயல்பாகவே அமைந்த வாழ்க்கையில் சிக்கி இருக்கின்ற இளமையான பொது மகளிர் தாங்கள் விரும்பும் செல்வத்திற்காக புயல் காற்றில் சிக்கிய புல்லானது காற்று இழுக்கும் திசையில் வளைந்து சாய்ந்து கொடுப்பது போலவே ஆசை படுகின்ற ஆடவருக்கு ஏற்றபடி அவரோடு இணைந்து கொள்பவர்களாக இருந்தாலும் தம் மீது காதல் வயப்பட்டு தேடி வந்து சேருகின்ற ஆடவர்களின் செல்வத்தில் மயங்கி தேவர்களைப் போல இருக்கின்ற நீங்கள் எம்மோடு எப்போதும் சேர்ந்தே இருங்கள் என்று வேண்டுவார்கள். ஆயினும் வேறு ஒரு செல்வமுள்ள ஆடவர் ஆசைப் பட்டு வந்தால் அவரோடு இணைந்து கொண்டு அன்பாக பேசி இதுவரை சேர்ந்து இருந்த ஆடவரிடமிருந்து விலகி போய் விடுவார்கள்.
