பாடல் #373

பாடல் #373: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

ஆமே ழுலகுற நின்றஎம் அண்ணலும்
தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறு மாமணி கண்டனை
நானே அறிந்தேன் அவனாண்மையி னாலே.

விளக்கம்:

பிரம்மனும் திருமாலும் அடியையோ உச்சியையோ காண முடியாத அளவிற்கு ஈரேழு பதினான்கு உலகங்களையும் கடந்து நிற்கின்றான் எம்பெருமான் சதாசிவமூர்த்தி. அவன் தாமாகவே ஏழுலகிற்கும் தீப்பிழம்பாக நிற்கின்றான். ஏழுலகமும் வியாபித்திருக்கும் வானத்திலும் மாபெரும் ஒளிப்பிழம்பாக ஊடுருவி நிற்பவன் நீலநிறமடைந்த கழுத்தை உடைய சிவபெருமான். இறைவன் என்னை ஆட்கொண்ட இறைதன்மையாலே நானும் இதை அறிந்தேன்.

Related image

பாடல் #374

பாடல் #374: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னம்
சேணாய்வா னோங்கி திருவுரு வாய்அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண்மதி யுங்கடந்
தாண்முழுது அண்டமு மாகிநின் றானே.

விளக்கம்:

சதாசிவமூர்த்தியாகிய இறைவன் ஒருவனே அனைத்து உயிர்களின் உடம்பாகவும் உயிராகவும் உணர்வாகவும் உள்ளிருக்கும் நெருப்பாகவும் மண்ணுக்கும் விண்ணுக்கும் ஓங்கி நின்ற தீப்பிழம்பு உருவமாகவும் அண்டங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் தூணாகவும் சூரியனாகவும் குளிர்ந்த சந்திரனாகவும் பரவி இருக்கின்ற அண்டங்கள் மொத்தமும் தாமாகவும் நிற்கின்றான்.

பாடல் #375

பாடல் #375: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றுஆங் கழலடி நாடஒண் ணாதே.

விளக்கம்:

மண்ணுலகிலிருந்து அண்டங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு விண்ணுலகமும் தாண்டி நீண்டு வளர்ந்த தீப்பிழம்பாக நின்றான் சதாசிவமூர்த்தி. அவனது அக்னி உருவத்தை ஆராய முற்பட்டு பிரம்மன் இறைவனின் திருமுடியைக் காணவும் திருமால் இறைவனின் திருவடியைக் காணவும் சென்றனர். பிரம்மன் மேல் செல்ல செல்ல இறைவனின் திருமுடி மேலே வளர்ந்து கொண்டே இருக்க திருமால் கீழே செல்ல செல்ல நன்மையை அருளும் இறைவனின் கழல்கள் அணிந்த திருவடி கீழே வளர்ந்து கொண்டே இருந்து இருவருக்கும் எதையும் காண இயலவில்லை.

உள்விளக்கம்: இறைவனை உணர்ந்தால் இறைவன் எந்த ரூபத்தில் இருந்தாலும் இறைவனை அறியலாம். இறைவனை ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள முயன்றால் அவரை அறிய இயலாது.

பாடல் #376

பாடல் #376: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்புஎய்து மாறே.

விளக்கம்:

இறைவனின் சிவந்த திருவடிகளை போற்றி வணங்கும் பலகோடி தேவர்களும், மாபலியிடம் மூன்று அடி நிலம் தா என்று கேட்டு வென்ற திருமாலும் இறைவனிடம் அருள் வேண்டி தவமிருக்கும் முனிவர்களும் இறைவன் வகுத்துக்கொடுத்த வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கும் பிரம்மனும் எவ்வளவு தூரம் தான் அலைந்து தேடினாலும் இறைவனின் திருவடிகளையோ திருமுடியையோ காண இயலாது.

உள்விளக்கம்: தேவர்கள், முனிவர்கள், திருமால், பிரம்மா என்று எவ்வளவு உயர்ந்த இறைநிலையில் இருந்தாலும் நானே செய்கிறேன் என்ற எண்ணத்துடன் இறைவனை தனக்குள் உணராமல் வெளியில் தேடினால் இறைவனை காண இயலாது.

பாடல் #377

பாடல் #377: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்கட லூழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் தன்மையது ஆமே.

விளக்கம்:

நான்கு முகங்களோடு தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருக்கும் பிரம்மனும் கருமையான நிறத்தோடு பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டு படுத்திருக்கும் திருமாலும் ஊழிக்காலத்தில் அழிவின் தலைவனாக இருக்கும் உருத்திரனும், உயிர்களின் உடலாகவும் உயிராகவும் உயிரின் உணர்வாகவும் உயிர்களுடனே கலந்து இருக்கும் மாபெரும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் தன்மையை ஒத்தவர்கள் ஆக முடியாது.

Related image

பாடல் #378

பாடல் #378: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்டு
ஆலிங் கனஞ்செய் துலகம் வலம்வரும்
கோலிங்கு அமைஞ்சருள் கூடலு மாமே.

விளக்கம்:

அண்டங்கள் அனைத்தலும் இரண்டறக்கலந்து எழுந்து நின்ற மாபெரும் தீப்பிழம்பான பரம்பொருள் உயிர்கள் தம்மை நாடி வந்து சேர பெருங்கருணை கொண்டு உண்மையான வழிமுறைகளை கொடுத்து உலகத்துப்பொருட்கள் எல்லாவற்றிலும் கலந்து உலா வருகிறது. இறைவனை அடையவேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் அந்த உண்மையான வழிமுறைகளை பின்பற்றினால் எல்லாவற்றிலும் கலந்திருக்கும் அடிமுடி காண முடியாத பரம்பொருள் இறைவனை உணரலாம்.

உட்கருத்து: அடிமுடி காண முடியாத அளவு மிகப்பெரும் மகோன்னதம் மிக்கவனாக இறைவன் காட்டிய நெறி வழிகளைப் பின்பற்றி சென்றால் எல்லாவற்றிலும் கலந்திருக்கும் அடிமுடி காண முடியாத பரம்பொருள் இறைவனை உணரலாம்.

பாடல் #379

பாடல் #379: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பமுங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானதடி சாரகி லாரே.

விளக்கம்:

ஒளிபொருந்திய உடலைக் கொடுத்த இறைவனை வழிபடுகின்ற தேவர்கள் எம்மைப் போல இறைவனிடம் தம்மையே ஒப்படைத்தாலும் இறைவனின் தன்மையை அறிய மாட்டார்கள். இறைவனிடம் தன்னைக் கொடுத்தால் இறைவனை அறியலாம். தன்னைக் கொடுத்தவர்க்கு இறைவனும் தன்னையும் தந்து பேரின்பத்தையும் தருவான். அந்த இன்பத்திலேயே மூழ்கித் தம்மை மறந்துவிடாதபடி வலிமை பெறும் பொருட்டு தம் திருவடியையும் தருகிறான் இறைவன். ஆனால் தேவர்கள் யாம் இறைவனின் திருவடியை சார்ந்திருப்பதைப்போல தேவர்கள் இறைவனின் திருவடியைச் சார்ந்திருக்கவில்லை.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #13

22-3-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: வானம் போல் தியானம் செய் என்று கூறுகின்றனர் அதன் பொருள் என்ன?

பொதுவாக மானிடன் வழிபடும் போது வானத்தை நோக்கி கை கூப்புகின்றான். இதற்குக் காரணம் என்ன என அறிதல் வேண்டும். மற்ற மதத்தோர் வானகத் தந்தை என்றும் அழைக்கின்றனர். இறைவன் வானத்திலிருந்து இறங்கி வருகின்றவனா என்றெல்லாம் குழப்பம் காண்பது நியாயமே. இதற்கு யோக நெறியில் விளக்கம் கண்டால் எளிதாகப் புரியும் என்று கூறுகின்றோம். மனித உடல் எனக் கண்டு கொண்டால் வானமானது சகஸ்ரரத்தின் மேலாகும். எப்பொழுது மனிதனின் எண்ணங்கள் அச்சகஸ்ரர நிலையை எட்டுகின்றதோ அன்று அவன் இறைவனை அடைந்தான் எனக் கூற இயலும். இத்தகைய நிலையில் வானத்தில் இறைவன் இருக்கின்றான் என்றும் அவ்வானத்தை நோக்கி மக்கள் வழிபடுகின்றனர் என்றும் எடுத்துரைத்தோம். இதற்கு மற்றொரு காரணம் உண்டாம் ஆதி காலங்களில் வெளிச்சம் தரும் சூரியனே தெய்வம் என்று மக்கள் எண்ணிட மேல் நோக்கியே வணங்கினர். இச்சம்பிரதாயமானது இக்காலத்தில் தொடங்கியது என்றும் கூறுகின்றோமே. இன்று யாம் இதை மட்டும் கூறுவோம். இருப்பினும் இங்கு கூடியுள்ளோர் இதற்கு மேலான விளக்கங்களை சிந்தித்தல் வேண்டும் என்றென ஆர்வமாக இருக்கின்றோம்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #12

26-1-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: கர்ம வினை என்று சொல்கிறார்கள். கர்மம் என்றால் செயல். செயலுக்கு உண்டான வினை அதற்குரிய விளைவு உடனடியாக இருக்கிறது இந்தக் கலிகாலத்தில். இருந்த போதிலும் வேதங்கள் சொல்லுவதாவது நீங்கள் போன ஜென்மத்தில் செய்தது தான் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுகிறீர்கள் என்று அது ஏன்? வேதம் சொல்வது சரியா? அல்லது நாம் பார்ப்பது சரியா?

ஒரே நேரத்தில் மூன்று விதைகள் விதைக்கின்றோம். ஒன்று கீரை இரண்டாவது நெல் மூன்றாவது பனை. மூன்றும் ஒரே நேரத்தில் தான் விதைக்கின்றோம். கீரையானது பதினைந்து நாட்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. நெல்லானது அதனுடைய பலனை ஆறு மாதத்தில் கொடுக்கிறது. ஆனால் பனையானது மூன்று தலைமுறைகள் கழித்துத் தான் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. அதனால் நாம் என்ன வினையைச் செய்கின்றோமோ அதனைப் பொறுத்துத்தான் அதனுடைய விளைவுகள் இருக்கும். ஆதலால் இந்த ஜென்மத்தில் செய்வது உடனடியாக கிடைக்கின்றது. ஜென்மாந்திரமாக வருவது பெரிய வினை. இக்காலத்தில் கிடைப்பது உடனடியாக மாற்றக்கூடிய வினைகள். இதை வைத்துத்தான் அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று வினையை வைத்துப் பொதுவாகச் சொல்லியிருக்கின்றார்கள். பெரும் வினையென்றால் தாமதித்துத்தான் விளைவுகள் இருக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #11

30-12-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

கேள்வி: நமக்குள் இறைவன் குடிகொண்டிருக்கிறான் எனில் நாம் எதற்கு ஆலயங்களிலிலும் உருவங்களிலிலும் இறைவனை நாட வேண்டும்?

இறைவன் அனைவருக்குள்ளும் உள்ளான் என்பது உறுதியானது. எந்த அளவிற்கு உள்ளான் என்பதே வினாவாகும். இதனை யாம் நன்கு ஆராய்ந்த பின் இவ்விடையையும் இங்கு அளிக்க சித்தம் கண்டோம். தூய்மை வேண்டும் நல்வழியில் பல ரூபங்கள் வேண்டும் என்கிறது மானிடனின் நிலை. ஏனெனில் அகக்கண் திறக்கும் வரை புறக்கண்ணே மேலானது என்கின்ற நிலைதான். தமது கண்களில் காண்பதே உண்மை என எண்ணுகின்றான் மானிடன். இவ்விதமே வேள்விகள் ஹோமங்கள் என்பதெல்லாம் துவங்கின. கண்ணால் காணும் சூரிய பகவானைத் தெய்வமாகக் கண்டு அவன் உண்ணும் வகைகளை அவனுக்கும் படைத்தான். சிறிது நேரம் சென்ற பின் பார்க்கும் போது படைத்தது அங்கேயே இருக்கக்கண்டு திகைத்தனர். அச்சூரிய பகவானின் அனல் தரும் வடிவத்திற்கு இங்கு ஈடானது அக்னி எனக் கண்டு அக்கினியை வளர்த்து அதில் படைத்ததை இட்டனர். இதன் வழியாக தெய்வம் ஏற்றுக் கொண்டது என ஓர் கணக்கு கண்டு வேள்விகள் துவங்கின. இதுவே உண்மை நிலையாகும். இதற்குப் பிறகு பலப்பல வடிவங்கள் மனதில் தோன்ற அவ்வித வடிவங்களை உருவாக்கிப் பிரதிஷ்டை என்கின்ற ஒரு சக்தியையும் அளித்து வணங்கத் துவங்கினர். இவ்விதம் இருக்க மனதில் பலப்பல உருவங்களைக் குறைத்து ஒன்று அல்லது இரு உருவமாக்கிப் பின் அதுவும் மறைந்து மனிதன் தனக்குள் சென்று அவன் ஆத்மாவுடன் கலந்து ஆனந்தம் காணுதல் வேண்டும். இதுவே இறைநிலை என்பது உண்மை நிலையாகும். அந்த உண்மை நிலை வர பல காலங்கள் பல ஜென்மங்கள் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. அக்காலம் வரும் வரை உறுதியாக மனிதனும் மூர்த்திகளை வணங்கிப் படிப்படியாக அம்மூர்த்திகளை விட்டு விலகுதல் வேண்டும்.

இது பாசம் கொடுத்து பின்பு பாசத்தை அறுத்தல் வேண்டும் என்கின்ற தத்துவமாகின்றது. அதாவது மனிதன் பிறக்கும் பொழுதே சிறு நாட்களிலேயே பாசமதன் உணர்வை அறிகின்றான். பிறவியில் அன்னையின் நாமத்தைக் கூறுகின்றான் பின்பு அன்னையுடன் ஒட்டுகின்றான் பின்பு பெற்றவரை அறிகின்றான் பின்பு சகோதரர்கள் பெற்றவர்களின் தாய் தந்தையர் என அனைவரையும் அறிந்து அப்பாசத்தில் தழுவுகின்றான். சிறிது காலம் செல்ல தெய்வம் என்கின்ற ஓர் நிலையை அறிந்து தெய்வத்துடன் பாசத்தைக் காட்டுகின்றான். இப்பாசமதை அறுத்து வெளி பூசைகள் அனைத்தையும் அகற்றி உள் செல்லுதல் வேண்டும் என்பது எளிதான காரியம் அல்ல. அந்நிலை அடைந்தோர்க்கு சீராகும் அனைத்தும். அந்நிலை அடையும் வரை வெளி பூஜைகள் அவசியம் என்றும் இங்கு செப்புவோம். ஆலயங்கள் என்பது முன்பு கூறியது போல் குருடர்களுக்கு உள்ள கொம்பைப் போல ஆன்மீகத்தில் சில குருடு நிலை உள்ளோர்க்கு ஆலயங்கள் அவசியம் என்றும் இங்கு யாம் உறுதியாகக் கூறிக் கொண்டோமே.

மேலாக முன்பு ஒன்று கூறியுள்ளோம் ஆலயங்கள் ஆகமவிதியில் கட்டப்படுவதால் அங்கு சில விசேஷமான கதிர் ஒளிகள் பரவும் இதில் அமர்ந்தால் பல வகையில் நமக்கு ரோக மாற்றங்கள் மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றது. இதை மறுக்க இயலாது. இதன் காரணமாகவே கிராமத்தில் அனைவரும் ஆலயத்தில் சிறிது நேரம் போய் அமர்ந்து கொண்டு வருவது உண்டு. இக்காலத்தில் இதை யாம் காணவில்லை இருப்பினும் விசித்திரமாக இக்கால இளைஞர்கள் படிப்படியாக மீண்டும் இறைவனை நாடத் துவங்கி உள்ளனர். இவர்களுக்கு யாம் கூறுவது மெதுவாக படிப்படியாக முதலில் ஓர் மூர்த்தி என்கின்றதை அடையச் செய்து அதனை ஆராதனை புரிந்து அதற்குரியதை அளித்துச் சிறப்பாக பூசித்து வர நன்மைகள் உண்டாகும் என்றும் இங்கு விளக்கினோம். அதனை விட்டு விட்டு இது ஏன்? எதற்கு? என வினா கேட்டுக் கொண்டிருந்தால் காலங்கள் செல்லுமே தவிர ஞானம் கிட்டாது என்கின்ற ஓர் நிலையும் உண்டு.

சாஸ்திரங்கள் கூறுவது போல ரூபத்திலிருந்து அரூபம் செல்லுதல் வேண்டும். ஸ்தூலத்தை முதலில் அறிந்து பின்பு சூட்சுமத்தை அறிதல் வேண்டும். முதலில் உன் உடலை அறிந்து பின்பு உள்ளிருக்கும் இறைவனை அறிதல் வேண்டும். மண்ணை அறிந்து அதனுள் உள்ள சத்தை அறிதல் வேண்டும். இந்த தத்துவம் விளக்கிடவே மசானம் என்பது நம் புராணங்களிலும் இக்காலத்திலும் மகத்துவம் காண்கிறது. மண்ணால் படைக்கப்பட்டது மீண்டும் மண்ணாகிறது என்கின்றது ஒரு தத்துவம். இதில் எதுவும் நித்யம் இல்லை. அவ்விதம் இருக்கும் போது அம் மண் கல் என்கின்றதால் தீட்டப்பட்ட மூர்த்திகள் எவ்விதம் நித்யமாக இருத்தல் கூடும்? மனிதன் பூசிக்கும் வரை நித்யம் பின்பு அநித்யம். இதை நிரூபிக்கும் வகையில் பல பாழடைந்த ஆலயங்கள் நம் நாட்டில் உள்ளன. இது இத்தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது. இந்நிலையில் யாம் கூறும் பூஜைகள் வீணாகுவதில்லை இவை அனைத்தும் நம் மனம் ஒருநிலைப்படுத்த உபயோகிக்கப்படும் பல வழிகள் முழுமையான நம்பிக்கையுடன் செய்தவர்களுக்கு எவ்வித குறைகளும் நேரிடாது நன்மைகள் பெரிதாகும் என்றும் இங்கு எடுத்துரைத்தோம்.