பாடல் #457

பாடல் #457: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விரட்டானெனிற் பன்றியு மாமே.

விளக்கம்:

கரு உருவாகும் போது அதனுடன் போகின்ற எட்டுவிதமான சூட்சும உருவங்களும் பத்துவிதமான வாயுக்களும் எட்டுவிதமான குணங்களும் இவற்றில் மூழ்கி இருக்கின்ற ஆன்மாவும் அது உயிராக உடலெடுக்கும் போது உருவாகும் ஒன்பது வாயில்களும் உடலின் மூலாதாரத்தில் இருக்கும் நாகமாகிய குண்டலினியும் பன்னிரண்டு அங்குலம் (கழுத்துக்குக் கீழே எட்டு அங்குலம் மனிதர்களுக்கும் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம் யோகிகளுக்கும்) ஓடிக் கொண்டிருக்கும் மூச்சுக் காற்றும் இவை அனைத்தையும் அடக்கி ஆளும் இறைவன் தனது அருளால் பாதுகாத்து வழி நடத்தாமல் இருந்தால் கருவில் பிறக்கும் குழந்தை இழி பிறப்பாக போய் விடும்.

சூட்சும உருவங்கள் 8 – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், புத்தி, மனம், அகங்காரம்.
வாயுங்கள் 10 – பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்.
குணங்கள் 8 – காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம், துன்பம், அகங்காரம்.
உடலின் வாயில்கள் 9 – 2 கண்கள், 2 காதுகள், 2 மூக்குத் துவாரங்கள், வாய், நீர்வாய், ஆசனவாய்.

உட்கருத்து: கருவைப் பாதுகாத்து அதற்கு வேண்டிய அனைத்தையும் செயல்படுத்துபவன் இறைவன். அப்படி அவன் செயல்படுத்தாமல் விட்டுவிட்டால் பிறக்கும் குழந்தை எதற்கும் உபயோகமில்லாத சதைப் பிண்டமாகப் பிறக்கும்.

பாடல் #458

பாடல் #458: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.

விளக்கம்:

ஆணின் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தை எதிர்த்துச் சென்றால் பிறக்கும் குழந்தை உருத்திரனை ஒத்த தாமச குணம் உடையதாக இருக்கும். பெண்ணின் சுரோணிதத்தை ஆணின் சுக்கிலம் எதிர்த்து சென்றால் பிறக்கும் குழந்தை திருமாலை ஒத்த சத்துவ குணம் உடையதாக இருக்கும். ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சமமாக எதிர்த்து இணைந்தால் பிறக்கும் குழந்தை பிரம்மனை ஒத்த இராசத குணம் உடையதாக இருக்கும். ஆணும் பெண்ணும் சமமான இன்பத்தில் இணைந்திருந்தால் பிறக்கும் குழந்தை மாபெரும் அரசன் போல ஆளும் தன்மையைக் கொண்டு இருக்கும்.

குணங்களின் விளக்கம்:

தாமச குணம் (தாமசம்) – காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வது, பகட்டுக்காக செயல்கள் செய்வது.

சத்துவ குணம் (சாத்விகம்) – நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம், புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு கூச்சப்படுதல், தன்னிலேயே மகிழ்ந்திருத்தல், தானம், பணிவு மற்றும் எளிமை.

இராசத குணம் (இராட்சதம்) – ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.

பாடல் #459

பாடல் #459: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

விளக்கம்:

எத்தனையோ பிறவிகளை எடுத்து முடிந்த பின் எடுத்த இந்த பிறவியில் வினைப் பயனால் ஆண் பெண் இருவரும் சந்தித்து இன்பத்தில் கலந்து அவர்களது உருவங்களிலிருந்தும் அவர்களின் முன்னோர்களது உருவங்களிலிருந்தும் பலவிதமான அம்சங்களை எடுத்துக் கொண்டு அந்த அம்சங்களின் சாயலிலேயே உருவம் கொண்டு கரு உருவாகின்றது. ஆணும் பெண்ணும் இன்பத்தில் கலந்து பின் பெண்ணிடம் உருவான அந்தக்கரு புதிதாக உருவானதாக அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்டாலும் அந்தக் கரு உருவாகுவதற்கு முன்பே இந்த ஆணுக்கும் இந்த பெண்ணுக்கும் தான் இந்தக் கரு உருவாக வேண்டும் என்பது வினைப் பயனால் முடிவு செய்யப்பட்ட ஒன்று என்பதை உணராத ஆணும் பெண்ணும் மாயையில் ஒருவரோடு ஒருவர் கலந்து கரு உருவாகக் காரணமாகி அந்தக் கருவுக்கும் தங்களது மாயையோடு சேர்த்து தங்களது பலவித குணங்களையும் கொடுத்து விடுகின்றார்கள்.

பாடல் #460

பாடல் #460: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியம் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.

விளக்கம்:

கரு உருவாகும் போது முதலில் கரு தனித்து கேவல நிலையில் இருக்கும். அதன் பிறகு மாயை அதன் தத்துவங்களை கருவோடு சேர்த்து விடும்போது அதுவரை துரிய நிலையில் உறக்கத்தில் இருந்த கரு அந்த நிலையிலிருந்து மாறி விழித்துக் கொண்டு நினைவு தோன்ற ஆரம்பிக்கும். நினைவு தோன்றிய பின் அந்தக் கருவின் முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்து வரும் வினைப் பயன்களால் வரும் கன்மத்துடன் (மும்மலங்களில் ஒன்று) மாயேயம் என்கிற அசுத்த மாயையின் ஏழுவித காரியங்களும் (காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை) சேர்ந்து மொத்தம் எட்டுவித மாயைகளை அந்தக் கரு பெற்றுவிடும். இதுவே கருவுடன் மாயைகள் சேரும் முறைமை என்று தூய்மையான வேதங்கள் சொல்லும்.

பாடல் #461

பாடல் #461: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சித் திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நண்பால் ஒருவனையே நாடுகின் றேனே.

விளக்கம்:

உயிர்கள் தாம் ஆசைப்பட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்று எலும்புகளை இணைத்து நரம்புகளால் வரிசையாகக் கட்டி வைத்து சிவந்த இரத்தத்தை வைத்து தோலால் அழகாக மூடி திருத்தமாக செய்யப்பட்ட இந்த வீடாகிய உடலுக்கு உயிர் கொடுத்த இறைவனின் கருணையை எண்ணி அவன் மீது பொங்கிய நட்பினால் அவன் ஒருவனை மட்டுமே அன்பினால் தேடி அடைகின்றேன்.

உட்கருத்து: ஆன்மா ஆசைப்பட்டுவிடும் போது அந்த ஆசையைத் தீர்க்க பிறவி கொடுத்து அருமையான உடலைக் கருவிலிருந்தே செதுக்கி அழகான வீடாக்கி அதனுள் உயிராக உலவ விட்ட இறைவனை உயிர்கள் எப்போதும் நினைத்து அவன் கருணையை எண்ணி அன்பு கொண்டு அவனைத் தமக்குள் தேடி அடைய வேண்டும்.

பாடல் #462

பாடல் #462: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதஞ்செய்யும் மாறே விதித்தொழிந் தானே.

விளக்கம்:

நிலவைப் போன்ற வெள்ளை நிறத்தில் சூரியனைப் போன்ற பிரகாசிக்கும் ஒளி உடலாக இருக்கின்ற இறைவன் தாயின் சூரிய கலை (வலது நாசி) மூச்சுக்காற்றின் மூலம் இதமான சூட்டையும் சந்திர கலை (இடது நாசி) மூச்சுக்காற்றின் மூலம் இதமான குளிர்ச்சியையும் கொண்டு கருவின் உடலோடு கலந்து எங்கும் பரவி நின்று தாயின் அடிவயிற்றில் உணவைச் செரிப்பதற்காக சூடாக உருவாகும் நெருப்பினாலும் நீராலும் கரு ஒருவித பாதிப்பும் அடையாமல் இருக்கும்படி காத்து நின்று குழந்தை எந்த விதமாக வளர வேண்டுமோ அப்படியெல்லால் வளர வைத்து குழந்தை பிறக்கும் வரை காத்து அருளுகின்றான்.

பாடல் #463

பாடல் #463: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.

விளக்கம்:

ஆன்மா தான் இருக்கும் உடலின் மூலம் அனுபவிக்க வேண்டிய வினைகளை எப்போது அனுபவித்து முடிக்கின்றதோ அப்போதே அதனது அடுத்த பிறவியை எடுக்க உதவும் பலவிதமான வழிகளை உருவாக்கி விடுகின்றான் இறைவன். ஆன்மா இருக்கும் உடல் இறந்த பின் சுற்றத்தாரால் நீராட்டப்பட்டு சுடுகாட்டிற்கு சுட்டெரிக்க எடுத்துச் செல்லும்போதே அதிலிருந்து வெளிப்பட்ட ஆன்மாவை இன்னும் அனுபவிக்க வேண்டிய பலவிதமான வினைகளான பந்த பாசத்தால் கட்டி புதிய கருவாக உருவாக்கி கர்ப்பப் பைக்குள் வைத்து அங்கே பெண்ணின் அடிவயிற்றில் இருக்கும் நெருப்பினாலும் நீராலும் பாதிக்கப் படாதபடி காப்பாற்றி அருளுகின்றான் இறைவன்.

பாடல் #464

பாடல் #464: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புகுந்து நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.

விளக்கம்:

ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சிவப்பு நிற கருமுட்டையாக வளர்கிறது. இதற்காக ஆணின் சுக்கிலம் எட்டு விரற்கடை அளவும் பெண்ணின் சுரோணிதம் நான்கு விரற்கடை அளவும் பயணிக்கின்றது. இப்படி பயணிக்கின்ற அனைத்தும் கருமுட்டையாக வளர்வது இல்லை. இறைவன் அருளால் பிழைத்த ஒன்றோ அல்லது சமயத்தில் பலவும் ஒன்றாக ஒரே சமயத்தில் கருமுட்டையாக வளர்கிறது. அப்படி உருவான கருமுட்டை உடல்தான் எட்டு ஜாண் அளவிற்கு வளர்கிறது.

அறிவியல் விளக்கம்: கருவில் உருவாகும் குழந்தையிலிருந்து பிறந்து வளர்ந்து இறக்கும் மனிதன் வரை அனைவருக்குமே அவர்களது விரல்களால் அளவிட்டால் எட்டு ஜான் அளவிற்கே உடல் இருக்கும் இதைத்தான் திருமூலரும் எண் சாண் அது ஆகுமே என்று அருளுகின்றார்.

பாடல் #465

பாடல் #465: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத்தொழில்
ஓகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்குஒரு முட்டைசெய் தானே.

விளக்கம்:

ஆண் பெண் இருவரின் இன்பத்தில் உருவான கருவின் மூலமாக ஆன்மாவை உயிராக உருவாக்கும் கொடைத் தொழிலைப் புரிந்து அருளுகின்றான் புனிதனான இறைவன். கருவிற்குள் இருபத்தைந்து தத்துவங்களையும் (பாடல் #451 இல் காண்க) சேர்த்து ஆண் பெண்ணின் இன்பத்தின் விளைவாக அங்கே ஒரு சினைமுட்டையைச் செய்து அருளுகின்றான்.

உட்கருத்து: ஆணும் பெண்ணும் எத்தனை முறை இன்பம் கொண்டாலும் கரு எளிதில் உருவாகி விடுவதில்லை. அப்படி நடந்தால் பெண் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற வேண்டும். பெண்ணிடம் உருவாகும் அனைத்து கருமுட்டைகளும் சினைமுட்டையாக மாறுவதில்லை. அப்படி நடந்தால் பெண் கோடிக்கணக்கான குழந்தைகள் பெற வேண்டும். கருமுட்டை சினைமுட்டையாகிவிட்டால் மட்டும் குழந்தை உருவாகி விடுவதில்லை. அப்படி நடந்தால் கருத்தரித்த அனைத்து பெண்களும் உயிரோடு இருக்கும் குழந்தையைப் பெற்று இருக்க வேண்டும். அறிவியலின்படி பல பெண்கள் கரு கலைந்தோ அல்லது இறந்த குழந்தைகளை பெற்றெடுக்கின்றார்கள். ஆணும் பெண்ணும் இன்பமாக இருக்கும் போதே இவர்களுக்கு இப்படிப்பட்ட குழந்தைதான் பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதன்படி சினைமுட்டைகளை கருவாக்கி அதைக் குழந்தையின் உடலாக்கி இருபத்து ஐந்து தத்துவங்களையும் சேர்த்த உயிராக்கி பிறக்கும் வரை பாதுகாத்தும் அருளுகின்றான் இறைவன்.

பாடல் #466

பாடல் #466: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலனைந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத்தில் அமர்ந்திடுந் தானே.

விளக்கம்:

பெண்ணின் கருப்பைக்குள் உருவாகும் குழந்தையின் உடலினுள் மாயையால் ஒன்றும் அறியாத ஐந்துவகைப் புலன்களும் சேர்ந்து உடலோடு வளர்ந்து உடலோடு இறக்கின்றன. அதுபோலவே அண்டசராசரங்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் இறைவனின் நாதத் தத்துவத்திலிருந்து உருவாகிய ஆன்மா கருவுக்குள் உயிரோடு பிறந்து உடலோடு இறந்தபின் மீண்டும் இறைவனின் நாத தத்துவத்திலேயே சென்று அமர்ந்து இருக்கின்றது.

உட்கருத்து: அசையா சக்தியாகிய இறைவனிடமிருந்து உருவாகிய ஒளி ஓசை ஆகிய இருவகைத் தத்துவங்களாலேயே ஆன்மா உருவாகின்றது. அத்தகைய ஆன்மா வினைப் பயனால் கருவுக்குள் புகுந்து உடலோடு உயிராகி வளர்ந்து உடல் இறந்தபின் பிரிந்து மீண்டும் அந்தத் தத்துவங்களுடனே சேர்ந்து அடுத்த பிறவி வரை காத்திருத்து பிறவி எடுக்கும். எப்போது அனைத்து பிறவிக்கான வினைகளும் தீர்ந்துவிடுகின்றதோ அப்போது இறைவனுடனே சென்று இரண்டறக் கலந்துவிடும்.