பாடல் #742

பாடல் #742: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே.

விளக்கம்:

உயிர்களின் வாழ்நாளில் அழியக்கூடிய நான்கு பகுதிகள் இருக்கின்றன. முதலாவது எதற்கும் பயனின்றி அழிகின்ற பகுதி பதிமூன்று வயது வரையான குழந்தை பருவம். இரண்டாவது பலராலும் சொல்லப்படுகின்ற அளவிற்கு வாழ்ந்து முடியும் பகுதி முப்பத்து மூன்று வயது வரையான வாலிப பருவம். மூன்றாவது பலருக்கும் பயனுள்ளதாக வாழ்ந்து முடியும் பகுதி அறுபத்தி இரண்டு வயது வரையான முதிர்வு பருவம். நான்காவது முழுவதும் வாழ்ந்து பரிபூரணம் என்று சொல்லப்படுகின்ற நிலையில் முடியும் பகுதி நூறு வயது வரையான வயோதிக பருவம். பதிமூன்று வயதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் இறைவனை அடையக்கூடிய வழிகளில் முயன்று இறைவனை உணர்ந்து விட்டால் எல்லைகள் இல்லாமல் எண்ணிலடங்காத ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கலாம்

கருத்து: உயிர்களின் வாழ்நாளில் நான்கு விதமான பகுதிகள் இருகின்றன. இந்தக் பகுதிகளுக்குள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதும் அதைத் தாண்டி இறையருளால் யோகப் பயிற்சிகள் செய்து நீண்ட காலம் வாழ்வதும் ஒவ்வொரு உயிரின் நோக்கத்தைப் பொறுத்தது.

பாடல் #741

பாடல் #741: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்
கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியாது அழிகின்ற வாறே.

விளக்கம்:

முதல் நிலையில் ஐந்து புலன்களைச் சார்ந்து இருக்கும் உணர்வுகளில் பெற்ற ஐந்து அறிவுகளும் இரண்டாவது நிலையில் ஐந்தறிவோடு நன்மை தீமையை உணரும் பகுத்தறிவு சேர்ந்து பெற்ற ஆறு அறிவுகளும் மூன்றாவது நிலையில் பகுத்தறிவோடு மனம் சேர்ந்து பெற்ற ஏழு அறிவுகளும் நான்காவது நிலையில் மனதோடு கல்வி சேர்ந்து பெற்ற எட்டு அறிவுகளும் ஐந்தாவது நிலையில் கல்வியோடு அனுபவம் சேர்ந்து பெற்ற ஒன்பது அறிவுகளும் ஆறாவது நிலையில் அனைத்தும் இறையருளாலே என்பதை உணர்ந்து அவனது திருவடிகளை விடாமல் பற்றிக்கொண்டு பெற்ற பத்து அறிவுகளைக் கொண்டு அழிந்து போகும் உடலை விட்டு அழியாத ஞானத்தைப் பெறுவது எப்படி என்பதை அறியாமலேயே பல உயிர்கள் வீணாக அழிந்து போகின்றன.

கருத்து: உயிர்களின் வளர்ச்சியில் ஆறு வகை அறிவு நிலைகளையும் அறிந்து அதன்மூலம் இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு காலச் சுழற்சியாகிய பிறவியிலிருந்து நீங்கும் வழியை அறியாமலேயே பல உயிர்கள் வீணாகிவிடுகின்றன.

பாடல் #740

பாடல் #740: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

மதிவட்ட மாக வரையைந்து நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே.

விளக்கம்:

பூமியை நிலா சுற்றி வருகின்ற ஒரு நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு ஐந்து ஐந்து நாளாக சூரியனின் வட்டத்திலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் பெற்று பெளர்ணமியாகும் விதமும் பின்பு ஐந்து ஐந்து நாளாக சூரியனின் வட்டத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் இழந்து பின்பு அமாவாசையாகும் விதமும் சந்திரன் சூரியனின் வட்டத்தில் இருக்கும் பன்னிரண்டு இராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் அமர்ந்து பின் அடுத்த ராசிக்கு மாறுகின்ற விதமும் இவை அனைத்தும் இறைவனின் திருவருளாலே உயிர்களின் கர்ம வினைகளுக்கேற்ப காத்து அருளுகின்ற விதமும் உடலை விட்டு உயிர் பிரியும்போது அதனை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற விதமும் ஆராய்ந்து அருளுகின்றேன்.

கருத்து: சந்திரன் பூமியைச் சுற்றும்போது சூரியவட்டத்தில் வரும் பன்னிரண்டு இராசிகளிலும் 30 நாட்களில் அமர்ந்து மாறும்போது இறையருளால் உயிர்களைக் காக்கின்ற தன்மையையும் பின்பு உயிர் உடலை விட்டுப் பிரியும் விதமும் ஆராய்ந்து இந்தத் தலைப்பிலுள்ள பாடல்கள் அருளப்பட்டுள்ளன.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #83

23-9-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சிறியவன் சிறியவனாக இருக்க பெரும் அருள் உண்டு. சிறியது பின்பு பெரியதாகும் திறன் உண்டு. நாம் சின்னவன் (நாம் கீழான இடத்தில் இருக்கின்றோம் மற்றவர்கள் மேலான இடத்தில் இருக்கின்றார்கள்) என்ற எண்ணத்தை தவிர்ப்பீர்களாக. இன்று சின்னது என்பது நாளை பெரிதாகும். குறுகிய மனப்பான்மை இங்கு பலருக்கும் உண்டு. பயத்தை மனதிலிருந்து நீக்கி விடுங்கள். பின்பு அனைத்தும் சீராகும். பூஜைகளில் இறைவனிடம் மனம் விட்டு கூறியும் மனம் விட்டு கேட்கவும் வேண்டும் இவ்விதம் செய்திட நல்முடிவுகள் உண்டு.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #82

26-8-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆனமிக நிலையை வைத்து இன்றைய இளைஞர்களிடம் குழப்பங்கள் அதிகமாக உள்ளது ஏன்?

குழப்பத்திற்கு அடிப்படையே முதல் காரணமாகும் முதலில் இறைவன் வெளியே இல்லாதவன் என்று உணர வேண்டும். இரண்டாவதாக அவன் நமக்குள் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். மூன்றாவதாக அவன் நம்மை விட்டு பிரியாமல் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். நான்காவதாக அவன் தேவையற்றவன் என்பதை உணர வேண்டும். அன்புடன் அவனை பார்த்தால் அன்பு அது பக்தியாய் மாறி பக்தியது பெரும் வெள்ளமாய் பெருகி அந்த பரவசத்தில் நாமும் அமர இறைவனை உறுதியாக காண முடியும். அடிப்படையில் இறைவனை வெளியில் பார்ப்பதை விட வேண்டும் என்பது விதியாகும். ஏனெனில் இறைவன் நம்மை விட்டு பிரிந்ததில்லை இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை நாம் உணர்வதில்லை. இதனை அப்அப்பொழுது சிந்தனையில் வைக்க வேண்டும். ரூபம் இல்லாத இறைவன் நம்முடைய இயலாமையால் ரூபத்தை கொடுக்கின்றான். ரூபமாய் இருக்கும் இறைவனை சிறிது தூரத்தில் பார்த்து நாம் வேறு இறைவன் வேறு என தவறாகப் புரிந்து நமக்கும் இறைவனுக்கும் உள்ள தூரத்தை அதிகரித்ததால் இக்காலத்தில் வேதனை காண்கின்றோம் என்பதே உண்மையான நிலை இதை தவிர்க்க வேண்டும் என்றால் எமக்குள் இருக்கும் இறைவா என்கின்ற வாக்கியத்தை எப்பொழுதும் உங்கள் வழிபாட்டில் சேர்த்துக் கொண்டால் இது நாளடைவில் பெருகி உண்மையாக மாறி அந்த உண்மையை உணரச்செய்யும். இன்று முழுமையாக தவம் செய்தோம் இறைவனை காணவில்லை என எண்ண வேண்டாம். ஏனெனில் நீங்கள் தியானம் செய்தது வெளியில் இருக்கும் இறைவனை உள்ளிருக்கும் இறைவனை அல்ல. உள் சென்று ஹிருதய ஸ்தானத்தில் இறைவன் இருப்பதாக எண்ணி அந்த இடத்தை சுத்தமாக வைத்து இறைனுக்கு பாத நமஸ்காரங்கள் செய்வது ஒன்றே போதுமானது. இங்கு இறைவனுக்கு ரூபம் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஜோதி ஸ்வருபனை ஜோதி ஸ்வருபமாக காண்பீர்களாக இவ்விதம் செய்திட குறையின்றி இறையருள் கைகூடும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #81

30-7-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: மன சக்தியால் எதையும் சாதிக்க இயலுமா? பின்பு ஏன் பல காரியங்கள் தோல்வி அடைகின்றது?

உறுதியாக மன சக்தியால் அனைத்தையும் சாதிக்க இயலும். பின்பு காரியங்கள் நடைபெறவில்லை என்றால் அதற்கு காரணம் மனஉறுதி குறைவாக உள்ளதை ஆகும். மனதில் ஒன்றை வைத்து ஒன்று என்றால் ஒன்றை மட்டும் வைத்து மாற்றாமல் அசைக்காமல் அது நடைபெறும் என எண்ணம் கொண்டால் உறுதியாக நடைபெறும் என அனுபவரீதியாகவும் யாம் கண்டதும் அனைவரும் கண்டதாகும். தவறு எங்கிருக்கிறது என்றால் என்ன வேண்டும் என்பதில் முதலில் உறுதியில்லை. இரண்டாவதாக அப்படம்தனை மனதில் வைத்து மாற்றி மாற்றி கலர் கலராகவும் பல விதங்களாகவும் மாற்றிக் காண ஓர் புதுமையான படம் மனதில் காணும் நிலை உண்டாகும். பின்பு வெற்றி எவ்வாறு உண்டாகும். இதன் அடைப்படை என்னவென்றால் முதலில் என்ன வேண்டும் என்பதை முழுமையாக அறிய வேண்டும். இரண்டு அது எவ்விதம் வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இதற்கு பின்பே மனதில் வைக்க வேண்டும். உதாரணமாக நான்கு சக்கர வாகனம் ஒன்று வேண்டும் என்றால் அது எந்த வாகனம்? அதன் பெயர் என்ன? அதன் கலர் என்ன? அதை எங்கு வைக்க வேண்டும்? என்பதில் முதலில் தெளிவு வேண்டும். இது தான் விதி மாறாக இன்று ஓர் விதமான வாகனமும் நாளை வேறு வாகனம் கலர் வேறு நிறுத்தும் இடம் வேறு என மாற்றிக் கொண்டிருந்தால் உறுதியாக அக்காரியம் நடைபெறாது. ஆங்கிலத்தில் POWER OF THOUGHT (எண்ணகளின் சக்தி) என்பதை கடைபிடித்தால் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #80

5-6-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஒன்று செய் அதை நன்றாக செய் என்பது இக்கலியுகத்தில் குறையாக உள்ளது. பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யும் முயற்சியில் அனைத்து காரியங்களும் முக்கால்வாசி பலனே தருகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு காரியம் முடிந்தபின் மற்றொரு காரியத்திற்குச் செல்வதே சிறந்ததாகும். முயற்சித்தால் இதுவும் கைகூடும். ஒரு வேளை செய்யும் பணி இன்று முடியாமல் அதற்குள் வேறொரு முக்கியமான பணி வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். அப்பணியை மறுநாள் முழுமையாகத் தொடருதல் வேண்டும். அப்பணியை முடித்தப் பிறகே புதிதாக வரும் பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்தையும் தொடர்கதையாகச் செய்வது சரியாகாது. இதைக் கூறுவதற்குக் காரணமும் உண்டு. பலர் இங்கு இஷ்ட தெய்வத்தை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இது பலன் அளிக்காது. இஷ்ட தெய்வம் என்பது ஓர் ஆடையல்ல அடிக்கடி மாற்றிக்கொள்வதற்கு. முழுமையான பலன் வேண்டுமெனில் ஒன்றில் நிற்கக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அந்த ஒன்றிலிருந்து விலக விலக மன சஞ்சலங்களே மிஞ்சும். ஒன்றில் நின்று வெல்வாய் என்பதே எமது அறிவுரையாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #79

9-5-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நமக்கு பிற உயிர்களிடம் அன்பு இல்லாமல் இருந்தாலும் அன்பாக இருப்பது போல் நடித்தல் வேண்டும். ஏனென்றால் இந்த நடிப்பு செல்ல செல்ல நாளடைவில் நிஜமான அன்பாக மாறிவிடும். ஒருவர்க்கு தானம் செய்யும் எண்ணம் இல்லையென்றால் தானம் செய்தால் புகழ் கிடைக்கும் என்ற எண்ணம் கொண்டு தானம் செய்தல் வேண்டும். இத்தானம் செய்வது பழக்கமாகி விடும் பின்பு அதன் வழியாக அகங்காரம் தோணாது. நல் குணங்கள் ஒன்றும் இல்லா போதிலும் அது இருப்பது போல் பாவனை செய்து காரியங்கள் நடத்தி விட நாட்கள் செல்ல செல்ல அத்தகைய அன்பு பாசம் தானதர்ம சீலனாக மாறி பெருமளவிற்கு முன்னேற்றம் அடைய இயலும். தானம் என்பது வெறும் பணத்தால் அன்னத்தால் மட்டுமல்ல நல்வார்த்தைகளும் நம் அறிவை பங்கிடுவதும் தானமே ஆகும். இயன்றளவிற்கு நம் கையில் வசதிகள் இல்லா போதிலும் நம் அறிவை பகிர்ந்து கொள்வதும் ஓர் பெரும் தானமாகின்றது. இதனையும் மனதில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #78

12-4-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: பலர் தமக்குள் இருக்கும் குறைகள் தெரியாத நிலையில் இருக்கின்றனர். இத்தகைய குறைகளை மூடி மறைப்பதற்காக பெருமளவில் கோபம் கொண்டு சீறி எழுகின்றனர். இது அவர்களுடைய கீழ் நிலையை மறைப்பதற்கான ஓர் முயற்சியாகும். இத்தகைய நபர்கள் எவ்வாறு இதிலிருந்து மீள்வது?

முதலில் தம் குறைகளை உணர வேண்டும். குறைகளை உணர்ந்த பின் அக்குறைகளை நீக்கி குறையின்றி வாழ கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திட கோபங்கள் குறைவதோடு உண்மையான நிலையை உணர்ந்து பெருமளவில் அமைதி கிடைக்கும். ஆன்மீக பாதையில் செல்கின்ற பலருக்கும் குறிப்பாக சக்தி உபாசனையில் (அம்மனை வழிபடுபவர்கள்) ஈடுபடுகின்றவர்க்கும் தன்னை விட சிறந்த பக்தர் இல்லை என்கின்ற ஆணவம் அதிகமாக வரும். இது அகங்காரத்தை வளர்க்கும். தன் குறைகளை மறைத்து கோபப்படுவார்கள். ஆத்திரம் கொண்டு அங்கும் இங்கும் ஓடுவார்கள். சம்பந்தப்படாத மற்றவர்களையும் வார்த்தையால் தாக்கி பேசுவார்கள் இதனை தவிர்த்திடவே முதலில் நாம் நமக்குள் இருக்கும் குறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்விதம் செய்தால் மட்டுமே முன்னேற்றங்கள் கிடைக்கும். குறைகளை கண்டால் என்ன செய்வது? அதை வளர விடக்கூடாது. அதை நீக்கும் வழியை தேட வேண்டும். இது ஒரு நாளில் முடியாத செயல். பல காலங்கள் செல்ல வேண்டும் என்ற விதி இருந்த போதிலும் படிப்படியாக குறைகளை நீக்குதல் வேண்டும். இல்லை என்றால் ஓர் விஷக் கொடியாக இது வளர்ந்து பின்பு இறைவனை நெருங்கும் தகுதியற்றவனாக மாற்றி விடும். ஏனெனில் அகங்காரத்திற்கும் கோபத்திற்கும் அப்பாற்பட்டவனாக நிற்கின்றான் அத்தெய்வம். பாசம் அன்பு இரண்டும் இரண்டு கால்களாக வைத்து நடமாடும் அந்த இறைவனை நாம் வணங்க வேண்டுமென்றால் பாசம் அன்பு என்ற இரண்டு தன்மைகளை நாம் வளர்த்தல் வேண்டும். அத்தன்மைகளை வளக்க வேண்டுமென்றால் அகங்காரமும் கோபமும் ஆகாது என்பதை நன்கு உணர வேண்டும். இது எவரையும் சுட்டிக்காட்டாமல் பொதுவாக ஆன்மீக பாதையில் செல்வோர்க்கு நேரிடக்கூடிய ஓர் கடினம் ஆகும். இது ஆன்மீக பருவத்தில் ஏற்படக்கூடிய ஓர் நிலை.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #77

15-3-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: மகான்களின் சமாதிகளுக்கு செல்வதின் பயன் என்ன?

மகான்களின் சமாதிக்கும் சென்று அமர்ந்து வருவதில் எவ்வித லாபமும் இல்லை. லாபம் என கணக்கிட்டால் ஆத்ம ஞானம் பெருகுதல் வேண்டுமென்றால் அங்கு அமர்ந்து செய்ய வேண்டியதை செய்தல் வேண்டும். இதற்கு தேவையானது 1. விசுவாசம் (நம்பிக்கை) 2. ஆன்மீக விருப்பம் 3. பெரும் தெய்வ சிந்தனை 4. மனஉறுதி 5. மனஒருமைப்பாடு இவை இல்லையென்றால் அங்கு அமர்ந்து அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்து என்ன எதிர்பார்க்கிறிர்கள்? பொதுவாக இக்காலத்தில் பௌர்ணமி நேரங்களில் சமாதிகளுக்கு சென்று வட்டமிட்டு அங்கு தின்பண்டங்கள் உண்டு மகிழ்வதும் கொண்டாடுவதும் இப்போது உள்ளது. இதில் ஆன்மிக ரீதியாக எவ்வித வளர்ச்சியும் இல்லை. உடல் ஆரோக்யம் சிறிது காணலாம். இறை நாட்டத்தில் எவ்வித வளர்ச்சியும் இருக்காது. இதற்கு சமாதிக்கு ஏன் செல்ல வேண்டும். வீட்டிலேயை இருந்து செய்யலாமே? அங்கு அமர்ந்து அங்கு உள்ள மகான்களை நினைத்து தியானம் செய்தல் வேண்டும். அவரிடம் அருளைக் கேட்டு பெறுதல் வேண்டும். இக்காலத்தில் பலர் மகான்களின் சமாதிக்கு சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்ற ஓர் மூடநம்பிக்கை வைத்துள்ளனர். உங்களை காப்பது அந்த மகான்கள் அல்ல. உமது விசுவாசமே என மனதில் உணர வேண்டும். மகான்கள் அனைவரும் கூறுவது உன் விசுவாசம் உன்னை காக்கும் என்பது தான். நான் உன்னை காக்கின்றேன் என்று யாரும் கூறியதில்லை. இதனை முழுமையாக மனதில் வைத்து முறையாக செயல்பட்டால் நன்மைகள் உண்டாகும் இல்லையேல் வெறும் பொழுது போக்காகும்.