பாடல் #531

பாடல் #531: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.

விளக்கம்:

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை சீடனுக்கு உணர்த்திய குருவின் பெருமை குலையும்படி தவறாகப் பேசுகின்ற சீடர்கள் ஊர் சுற்றித் திரியும் நோயுள்ள நாயாகப் பிறந்து பின்னர் ஒரு யுகத்திற்குப் பூமியில் புழுவாக கிடப்பார்கள்.

பாடல் #530

பாடல் #530: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

விளக்கம்:

ஞானத்தை அறிந்த பெரியோர்களை மதிக்காத கீழான எண்ணமுடையவர்கள் அப்பெரியோர்களின் உடனிருப்பவர்களையும் வருந்தும்படி கீழ்மையாக பேசுபவர்கள் ஆகிய இவர்கள் ஞானமில்லாமல் கல்வியை மட்டுமே அறிந்தவர்களின் வழியில் சென்று ஞானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஞானத்தை அடைய முயற்சிப்பார்கள். ஞானத்தை அறிந்த பெரியோர்களால் கிடைக்காத ஞானம் வேறு யாரிடம் கிடைக்கும்?

பாடல் #529

பாடல் #529: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

போகமும் மாதர் புலவி யதுநினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலில்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.

விளக்கம்:

மாதருடன் கூடியும் ஊடியும் அச்சிறிய இன்பத்தையே நினைத்து அந்த வேட்கையை உள்ளத்தில் வைத்திருப்பவர்கள் வேதம் கற்று அறிந்த வேதியர்களாக இருந்தாலும் தாமே இன்னொரு உயிரை உருவாக்குகின்றோம் என்கின்ற தவறான எண்ணத்தில் சிவபெருமானைப் பற்றிய எண்ணங்களை மறந்து விடுவார்கள்.

உள்விளக்கம்: மாதர் இன்பத்தை நினைத்து இறைவனை மறப்பதும் சிவநிந்தையே ஆகும்.

பாடல் #528

பாடல் #528: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

விளக்கம்:

அறியாமையால் வரும் அகங்காரத்தினால் தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானுடன் பகைமை கொண்டு விரைவில் அழிந்து போனார்கள். சிவபெருமானுடன் எந்த வகையான பகைமை கொண்டாலும் அவரை அடைய முடியாது. அது பொய்யான பகையாக இருந்தாலும் அதனால் வரும் தீமை ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகி அழிக்கும்.

பாடல் #527

பாடல் #527: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.

விளக்கம்:

ஆசையால் அனுபவித்து வாடிப்போன தேகத்தை உடையவர்கள், தேவர்கள் அசுரர்கள் ஆகியவர்கள் உண்மை ஞானத்தை உணரவில்லையென்றால் இறந்தவர்களைப் போலானவர்களே. அன்பினால் கசிந்து அமுதம்போல் சுரக்கும் ஆதியாகிய சிவபெருமானைத் தன் உள்ளக் கோவிலில் வைத்து வழிபடுபவர்களால் மட்டுமே உண்மையான ஞானத்தைப் பெற இயலும்.

பாடல் #526

பாடல் #526: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வாரம ராபதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே.

விளக்கம்:

தெளிந்த ஞானம் உள்ளவர்கள் சிந்தனை செய்து தமக்குள்ளே இருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானை உணர்ந்து அவருடைய அருளைப் பெறுவார்கள். தெளிந்த ஞானமில்லாத கீழான மக்கள் அச்சிவபெருமானை சிறுதெய்வமாக எண்ணி இகழ்ந்து புறக்கணித்தால் அவர்களின் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளிபோல ஆகும்.

பாடல் #525

பாடல் #525: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே.

விளக்கம்:

அதோமுகம் பெரிய தாமரை மலராக மாறிய அதிசயத்தைக் கேளுங்கள். பாடல் 523 ல் உள்ளபடி குண்டலினி சக்தி உயிர்களின் தலையின் உச்சியிலுள்ள சகஸ்ரர தளத்தை அடைந்து நூற்றுக்கணக்கான இதழ்களைக் கொண்ட தாமரை மலராக விரிந்தவுடன் அழிவில்லாத சக்தியாகி அந்த சிவபெருமானே அதோமுகமாகி அமர்ந்திருக்கின்றார்.

பாடல் #524

பாடல் #524: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலுஞ்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

விளக்கம்:

ஆதியான அதோமுகம் கொண்ட சிவபெருமான் தனது அதோமுகத் தத்துவத்தில் தனக்குக் கீழே உள்ள அண்டம் முழுவதும் எங்கும் வியாபித்திருக்கின்றார். அவரே ஓம் எனும் பிரணவ ஒலியை மாலையாக அணிந்துகொண்டு அழித்தலின் தலைவனாகவும் நின்று அருள் புரிகின்றார்.

பாடல் #523

பாடல் #523: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துட் சிவனென நிற்கும்
முந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே.

விளக்கம்:

குண்டலினிசக்தி முதலாவது சக்கரமான மூலாதாரத்திலிருந்து சுழுமுனை (முதுகெலும்பு) வழியாக மேலே ஏறிச்சென்று சிரசிலுள்ள (தலை உச்சி) சகஸ்ரர தளத்தில் உள்ள செஞ்சிவப்பு நிற ஒளியுடன் கலந்து சிவமாகி நிற்கும். அவ்வாறு மேலெழுந்து நின்றவுடன் முன் வினைகள் அனைத்தையும் அழித்து உலகப்பற்றை அறுத்து உலகமும் உடலும் ஒன்றே என்ற நிலையை அடைவித்து ஆட்கொள்வது சிவபெருமானின் அதோமுகம் ஆகும்.

பாடல் #522

பாடல் #522: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைத்திடில் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

விளக்கம்:

செழுமையான கடல்களால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகத்தைப் படைத்த இறைவனுக்கு மனிதர்களில் யாரெல்லாம் தம்மீது உண்மையான பக்தி இல்லாமல் பொய்யாகப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்பது நன்றாகத் தெரியும். யாரெல்லாம் தம்மீது உண்மையான பக்தி கொண்டு போற்றி வணங்குகின்றார்களோ அவர்களை வாணுலகத்து தேவர்களும் வந்து வணங்கச்செய்வான் அதோமுகம் கொண்ட கருத்த தொண்டையை உடைய இறைவன்.