பாடல் #760

பாடல் #760: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

உயருறு வாருல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே.

விளக்கம்:

பாடல் #759 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைந்த யோகியர்கள் உலகத்தவர்களின் மேல் கொண்ட கருணையினால் அவர்கள் அறியாமலேயே அவர்களோடு கலந்து நின்று பல நல்வினைகளைப் புரிந்து பயன்பெற வைக்கின்றார்கள். உலகத்தவர்களையும் பயன்பெற வைக்கின்ற உயர்வான நிலையைப் பற்றி தெரியாத அல்லது அதில் விருப்பமில்லாதவர்கள் தங்களின் கர்மவினைகளைச் செய்துகொண்டு வீணாக வாழ்க்கையைக் கழித்து மீன்களைப் போல் எப்போதும் கண்மூடாமல் அன்பர்களுக்கு அருள்கொடுக்கும் இறை சக்தியை காணாமலேயே காலத்தை கழித்து அழிந்து போகின்றார்கள்.

கருத்து: அகயோகம் செய்து அனைத்திற்கும் மேலான உயர் நிலையை அடைந்த யோகியர்கள் உலகத்தவர் மேல் கருணை கொண்டு அவர்களுக்காக பல நல்வினைகளைப் புரிகின்றார்கள். இதை அறியாத மற்றவர்கள் தங்களின் வினைகளையே புரிந்து வீணாக காலத்தைக் கழிக்கின்றார்கள்.

பாடல் #761

பாடல் #761: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாங்
காணகி லாமலே கழிகின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #760 இல் உள்ளபடி இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராதவர்கள் தங்களின் வாழ்க்கையை வீணே வாழ்ந்து கழித்து மீண்டும் பிறக்கும்படி இறந்து போகின்றார்கள். இறை சக்தியை அடையும் வழியைக் கற்று அறிந்தவர்கள் கூட தாம் கற்ற கல்வியை உபயோகித்துப் பயன் பெறாமல் அதைப் பற்றி பலவிதமாகப் பேசுவதில் காலத்தை கழித்துக் கொண்டு தாம் கற்றதெல்லாம் பயனில்லாமல் போகின்றதென்ற நாணம் இல்லாமல் காலத்தை வீணடிக்கின்றார்கள். இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால் தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதையும் காணமலேயே இவர்களின் காலம் வீணாகக் கழிந்துவிடுகின்றது.

கருத்து: இறைவனை அடையவே சாஸ்திரங்களும் கலைகளும் இறைவனால் அருளப்பட்டன. இதை அறியாமல் கற்றவர் கல்லாதவர் ஆகிய இரண்டு வகையினருமே காலத்தை வீணடித்து இறைவனை அறியாமலேயே இறந்து போகின்றார்கள்.

பாடல் #762

பாடல் #762: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே.

விளக்கம்:

பாடல் #761 இல் உள்ளபடி இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால் தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதைக் காண முடியாதவர்கள் தாம் பெரிதாக எண்ணியிருந்த உலகச் செல்வங்கள் அனைத்தும் தம் கண் முன்பே அழிந்து போவதைக் காண்கிறார்கள். அழிகின்ற உடலுக்குள்ளும் செல்வத்துக்குள்ளும் என்ன இருக்கின்றதேன்று ஆராய்ந்து பார்த்தால் அழிகின்ற அனைத்து பொருட்களுக்குள்ளும் என்றும் அழியாத பெரும் செல்வமான இறைவன் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

கருத்து: தமக்குள் ஆழ்ந்து தேடி இறைவனை உணர்ந்தவர்களால் மட்டுமே அழிகின்ற அனைத்திலும் என்றும் அழியாத இறை சக்தி இருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.

பாடல் #763

பாடல் #763: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.

விளக்கம்:

மூன்று கண்களுடைய பிறப்பில்லாத இறைவனை தனது எண்ணங்கள் அனைத்திலும் காணக்கூடிய சாதகனின் உள்ளே குருவாய் அமர்ந்து அனைத்திற்கும் ஒருவனாகவும் எதிலும் உறுதியாக நிலைத்து இருப்பவனுமான இறைவனின் திருவடிகள் தனக்குள்ளே உறுதியுடன் தேடி சரணாகதியாய் இருப்பவர்களுக்கே கிடைக்கும்.

கருந்து: காலங்கள் அனைத்திலும் இறைவனை தமக்குள் உறுதியாக தேடி சரணாகதியாய் இருப்பவர்களுக்கு இறைவனின் திருவடி கிடைக்கும்.

பாடல் #764

பாடல் #764: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்களுக்குக் கூறலு மாமே.

விளக்கம்:

பாடல் #763 இல் உள்ளபடி தமக்குள் உறுதியுடன் இறைவனைத் தேடி அடையக்கூடியவர்களுக்கு இறப்பு இல்லை. இவ்வுலகத்தில் எந்தக் குறையும் இன்றி உயிர்களுக்குத் தலைவனாக இருப்பார்கள். இறைவனைத் தமக்குள்ளே தேடி அடைந்தவர்களுக்குத் தெரிந்த பொருள் இதுவாகும். அவர்கள் அறிந்த இறைவனை அடையும் வழியைக் காட்டும்படி கேட்பவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு தான் அறிந்ததை எடுத்துக் கூறுவார்கள்.

கருத்து: இறைவனைத் தமக்குள்ளே தேடி அடைந்தவர்கள் என்றும் இறப்பு இல்லாமல் தம்மை நாடி வருபவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு தாம் அறிந்தவற்றை எடுத்துக் கூறுவார்கள்.

பாடல் #765

பாடல் #765: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திருக்கும் அண்ணலு மாமே.

விளக்கம்:

பாடல் #764 ல் உள்ளபடி தம்மை நாடி வருபவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு கூறும் பொருளானது ஓங்கார மந்திரத்தின் அகார உகார விளக்கமாகும். அகார உகார மகார எழுத்துக்கள் (அ, உ, ம்) சேர்ந்ததே ஓம் எனும் மந்திரம். அதில் அகாரம் சிவத்தையும் உகாரம் சக்தியையும் மகாரம் உயிரையும் குறிக்கும். குருவானவர் கூறிய ஓம் எனும் மந்திரத்தை தமது சிந்தனையுள் எப்போது நினைத்துக் கொண்டே இருக்கும் சாதகர்களுக்கு ஓம் என்னும் மந்திரத்தின் பொருள் உயிர்கள் தமக்குள் ஒளிந்திருக்கும் குண்டலினி சக்தியே என்பதை உணர்ந்து அதை மூலாதாரத்திலிருந்து எழுப்பி சுழுமுனை நாடி வழியே தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைசக்தியோடு சேர்த்துவிட்டால் அவர்களுக்குள் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களிலும் சக்திமயமாக அமர்ந்து இருக்கும் இறைசக்தியும் தாமே என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

கருத்து: ஓம் என்னும் மந்திரத்தில் இருக்கும் பொருளை குருவானவரிடம் கேட்டுத் தமக்குள் அதை உணர்ந்த சாதகர்கள் மகாரமாகிய தங்களின் உயிர்சக்தியை அகாரமாகிய சிவத்தோடும் உகாரமாகிய சக்தியோடும் கலந்துவிட்டால் அவர்கள் இறைவனாக ஆகிவிடுவார்கள்.

பாடல் #766

பாடல் #766: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவனிவ னாகுமே.

விளக்கம்:

இறைவன் இருக்கின்ற இடத்தை யாரும் அறிவதில்லை. பாடல் #765 இல் உள்ளபடி இறைவனை அறிந்தவர் மூலம் கேட்டு தமக்குள் ஆராய்ந்து உறுதியுடன் தேடினால் இறைவன் தமக்குள்ளேயே வீற்றிருப்பதை அறிந்து கொள்ளலாம். தமக்குள் இறைவன் வீற்றிருப்பதை அறிந்து கொண்டவர்களுக்கு இறைவன் பேரறிவாய் நின்று அவர்களுக்குள்ளேயே அழியாமல் அமர்ந்திருப்பான். பேரறிவாய் அமர்ந்திருக்கும் இறைவனையே எப்போதும் தரிசித்துக் கொண்டு இருப்பவர்கள் தாமும் அந்த இறைவனாகவே ஆகிவிடுவார்கள்.

கருத்து: தமக்குள்ளேயே வீற்றிருக்கின்ற இறைவனைக் கண்டு உணர்ந்தவர்கள் இறைவனாகவும் ஆகிவிடுவார்கள்.

பாடல் #767

பாடல் #767: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

அவனிவ னாகும் பரிசறி வார்இல்
அவனிவ னாகும் பரிசது கேள்நீ
அவனிவ னோசை ஒளியினுள் ஒன்றி
அவனிவன் வட்டம தாகிநின் றானே.

விளக்கம்:

தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனை அறிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனைப் பற்றிக் கேட்டுக்கொள்ளுங்கள். பாடல் #765 இல் உள்ளபடி ஓங்கார மந்திரத்தில் அகாரம் எனும் ஒலியாக இருப்பவன் சிவம். உகாரம் எனும் ஒளியாக இருப்பவள் சக்தி. மகாரம் எனும் குண்டலினியாக இருப்பது உயிர்கள். உயிர்களின் உடலுக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களில் சக்திமயமாகவும் ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் ஒளியாகவும் எட்டாவது இடமான துவாதசாந்த வெளியில் ஒலியாகவும் இருக்கின்ற இறைவனே பிரணவ மந்திரத்திலுள்ள மூன்று எழுத்துக்களின் தத்துவம் என்பதை உணர்ந்து அந்த இடங்களோடு தமது உயிர்சக்தியைக் கலந்து நிற்கின்றவனே இறைவனாக ஆகிவிடுகின்றான்.

கருத்து: பிரணவ மந்திரத்தின் தத்துவம் ஒலியாகிய சிவமும், ஒளியாகிய சக்தியும், உயிராகிய ஆன்மாக்களும் ஒன்றாகக் கலந்து ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இருப்பதே ஆகும். இதை உணர்ந்து அறிந்து கொண்டவர்கள் இறைவனாக ஆகிவிடுகிறார்கள்.

பாடல் #768

பாடல் #768: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி யிருப்பிடங் காணலு மாகுமே.

விளக்கம்:

உயிர்களின் உடலுக்குள்ளேயே தாமரை மலர்கள் போல மலர்ந்து இருக்கின்ற ஏழு சக்கரங்களிலும் தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியிலும் இருக்கின்ற சக்திமயங்களே இறைவன் என்பதை அறிந்துகொண்டு அந்த இடங்களோடு தம் உயிர்சக்தியை ஒன்றாகச் சேர்த்து வைத்து இருக்கும் வழிமுறையை உயிர்கள் அறிந்து கொள்வதில்லை. அப்படி இருக்கும் வழிமுறையை பாடல் #765 ல் உள்ளபடி குருவானவர் மூலம் அறிந்து தமக்குள் இருக்கும் இறைசக்தியோடு ஒன்றாகக் கூடியிருந்து உணர்ந்துவிட்டால் கருப்பங்கட்டி போல இனிக்கின்ற அமிர்தமான இறைவனை கண்டுகொள்ளலாம்.

கருத்து: பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவன் இருக்குமிடத்தை அடையும் வழிமுறையை உயிர்கள் குருவானவர் மூலம் அறிந்து தமக்குள் உணர்ந்துவிட்டால் இறைவனை கண்டுவிடலாம்.

பாடல் #769

பாடல் #769: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.

விளக்கம்:

பாடல் #768 ல் உள்ளபடி தமக்குள் இறைவனை உணர்ந்து கண்டுகொண்ட யோகியர்கள் அந்த இறைவனே படைக்கின்ற பிரம்மனாகவும், காக்கின்ற திருமாலாகவும், கருநீலக் கறையுடைய தொண்டையைக் கொண்டு மாயையை அழிக்கின்ற உருத்திரனாகவும், மாயையால் மறைக்கின்ற மகேசுவரனாகவும், அருளுகின்ற சதாசிவனாகவும் உயிர்களின் உடலோடு கலந்து நிற்கின்ற சக்திமயங்களாகவும் இருப்பதை கண்டுகொள்வார்கள்.

கருத்து: யோகியர்கள் தமக்குள் உணர்ந்த இறைவனே அனைத்து சக்தியாகவும் இருப்பதை கண்டுகொள்வார்கள்.