பாடல் #1705

பாடல் #1705: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஈராறு நாதத்தி லீரெட்டா மந்தத்தில்
மேதாதி நாதாந்த மீதாம் பாராசத்தி
போதா லயாந்த விகாரந் தனிற்போத
மேதாரி வாதார மீதானமுண் மையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஈராறு நாதததி லீரெடடா மநதததில
மெதாதி நாதாநத மீதாம பராசததி
பொதா லயாநத விகாரந தனிறபொத
மெதாரி வாதார மீதானமுண மையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம் அந்தத்தில்
மேத ஆதி நாத அந்த மீது ஆம் பரா சத்தி
போத ஆலய அந்த விகாரம் தனில் போத
மேத ஆர் இவ் ஆதாரம் ஈது ஆனம் உண்மையே.

பதப்பொருள்:

ஈர் (இரண்டும்) ஆறு (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் பன்னிரண்டு சூரிய கலைகளாகிய) நாதத்தில் (ஓசை மயத்திலும்) ஈர் (இரண்டும்) எட்டாம் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு சந்திர கலைகளாகிய) அந்தத்தில் (அனைத்தும் ஓடுங்குகின்ற மயத்திலும்)
மேத (தலை உச்சியில்) ஆதி (அனைத்திற்கும் முதலாகவும்) நாத (ஓசையின்) அந்த (எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின்) மீது (மீது) ஆம் (வீற்றிருப்பது) பரா (அசையும்) சத்தி (சக்தியாகிய பரம்பொருள் ஆகும்)
போத (அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி) ஆலய (வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு) அந்த (உள்ளே) விகாரம் (இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின்) தனில் (ஆன்மாவிற்குள்) போத (ஞானமாகவும்)
மேத (அக்னியாகவும்) ஆர் (முழுவதும் நிறைந்து) இவ் (இந்த உடலுக்குள் இருக்கின்ற) ஆதாரம் (ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது) ஈது (அந்த இறை சக்தியே) ஆனம் (என்று யாம் உரைப்பது) உண்மையே (உண்மையே ஆகும்).

விளக்கம்:

பன்னிரண்டு சூரிய கலைகளாகிய ஓசை மயத்திலும், பதினாறு சந்திர கலைகளாகிய அனைத்தும் ஓடுங்குகின்ற மயத்திலும், தலை உச்சியில் அனைத்திற்கும் முதலாகவும், ஓசையின் எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின் மீது வீற்றிருப்பது அசையும் சக்தியாகிய பரம்பொருள் ஆகும். அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு உள்ளே இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின் ஆன்மாவிற்குள் ஞானமாகவும், அக்னியாகவும் முழுவதும் நிறைந்து இந்த உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது அந்த இறை சக்தியே என்று யாம் உரைப்பது உண்மையே ஆகும்.

பாடல் #1704

பாடல் #1704: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

நாலு மிருமூன்று மீரைந்து மீராறுங்
கோலின் மேல்நின்ற குறிகள் பதினாறு
மூலங் கண்டாங்கே முடிந்த முதலிரண்
டுங்காலங் கண்டானடி காணலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாலு மிருமூனறு மீரைநது மீராறுங
கொலின மெலநினற குறிகள பதினாறு
மூலங கணடாஙகெ முடிநத முதலிரண
டுஙகாலங கணடானடி காணலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாலும் இரு மூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும்
கோலின் மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்த முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே.

பதப்பொருள்:

நாலும் (நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும்) இரு (இரண்டும்) மூன்றும் (மூன்றும் பெருக்கி வரும் மொத்தம் ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும்) ஈர் (இரண்டும்) ஐந்தும் (ஐந்தும் பெருக்கி வரும் மொத்தம் பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும்) ஈர் (இரண்டும்) ஆறும் (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும்)
கோலின் (சுழுமுனை நாடியின்) மேல் (மேல்) நின்ற (நிற்கின்ற) குறிகள் (இந்த சக்கரங்களாகிய குறிகளோடு) பதினாறும் (பதினாறு இதழ்கள் கொண்ட விசுக்தியும் தாண்டி)
மூலம் (இறைவனின் திருவடிகளை காண்பதற்கு மூலமாக இருக்கின்ற) கண்டு (நீல நிற ஜோதியை கண்டு) ஆங்கே (நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில்) முடிந்த (வினைகள் முடிவதற்கு) முதல் (முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில்) இரண்டும் (பிறவிக்கு காரணமாகிய நல் வினை தீ வினை ஆகிய இரண்டும் நீங்கி விட)
காலம் (காலத்தை படைத்தவனும்) கண்டான் (இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின்) அடி (திருவடிகளை) காணலும் (தரிசிக்கவும்) ஆமே (முடியும்).

விளக்கம்:

நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும், ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும், பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும், சுழுமுனை நாடியின் மேல் நிற்கின்ற இந்த சக்கரங்களாகிய குறிகளோடு பதினாறு இதழ்கள் கொண்ட விசுக்தியும் தாண்டி, இறைவனின் திருவடிகளை காண்பதற்கு மூலமாக இருக்கின்ற நீல நிற ஜோதியை கண்டு, நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில் வினைகள் முடிவதற்கு முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில் பிறவிக்கு காரணமாகிய நல் வினை தீ வினை ஆகிய இரண்டும் நீங்கி விட, காலத்தை படைத்தவனும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை தரிசிக்கவும் முடியும்.