பாடல் #1179

பாடல் #1179: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தாரமும் மாகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகுங் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

விளக்கம்:

பாடல் #1178 இல் உள்ளபடி இறைவனோடு துணையாக இருக்கின்ற இறைவியின் தன்மைகளை இந்த பாடலில் அறிந்து கொள்ளலாம். இறைவனுக்குத் துணையாகவும் இருக்கின்ற இறைவி அதன் அனைத்து தத்துவங்களாகவும் நிற்கின்றாள். இறைவன் உலகங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய போது அதன் காரணமாகவும் இறைவன் எண்ணியபடியே உலகங்களை படைக்கும் போது அதன் காரியமாகவும் எப்போதும் இறைவனோடு கலந்தே இருக்கின்றாள் இறைவி. இறைவனின் பரிபூரண ஜோதியாகிய ஒளி ஒருவத்தோடு கலந்து அதனுள்ளே சக்தியாக அடங்கி இருக்கின்ற ஆதியான இறைவி உலகங்கள் அனைத்தின் அளவுக்கும் பரந்து விரிந்து அதையும் தாண்டி பத்து திசைகளையும் தமக்குள் கொண்டவளாக இருக்கின்றாள்.

பாடல் #1180

பாடல் #1180: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பத்து முகமுடை யாளெம் பராசத்தி
வைத்தன ளாறங்க நாலுடன் றான்வேதம்
ஒத்தனள் ளாதார மொன்றுட னோங்கியே
நித்தமாய் நின்றாளெம் நேரிழை கூறே.

விளக்கம்:

பாடல் #1179 இல் உள்ளபடி பத்து திசைகளையும் தமக்குள் கொண்டவளான இறைவி இறைவனோடு சேர்ந்து எப்படி இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். பத்து திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்ட எமது பராசக்தியான இறைவியே உயிர்கள் உய்ய வேண்டும் என்று நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறு அங்கங்களையும் உருவாக்கி வைத்து அருளினாள். அவளே அனைத்திற்கும் ஆதாரமான இறைவனுடன் ஒன்றாகச் சேர்ந்து மிகவும் உயர்ந்த நிலையில் எல்லா காலத்திலும் எப்போதும் இறைவனுடன் சரிசமமான பாகமாக சேர்ந்தே நிற்கின்றாள்.

வேதத்தின் ஆறு அங்கங்கள்:

  1. சிட்சை – வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
  2. வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
  3. சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
  4. சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
  5. நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
  6. கல்பம் – வேதத்தின் செயல் முறைகளை உரைப்பது.

பாடல் #1181

பாடல் #1181: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை யமுத பயோதரி
பேருயி ராளி பிறிவுஅறுத் தாளே.

விளக்கம்:

பாடல் #1180 இல் உள்ளபடி இறைவனோடு பல விதங்களில் கலந்து இருக்கும் இறைவியானவள் அவனோடு உத்தமமான உயிர்களையும் சேர்த்து அருளுவதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். எம்மால் புகழ்ந்து கூறப்படுகின்ற என்றும் இளமை பொருந்திய இறைவியானவள் வளைந்த புருவங்களோடு சீரும் சிறப்பும் கொண்டவளாக ஏழு உலகங்களிலும் திகழ்ந்து இருக்கின்றாள். வேதங்களாகவே இருக்கின்ற என்றும் இளமையான இறைவி உயிர்களுக்கு உண்மை ஞானத்தைக் கொடுக்கின்ற அமிழ்தப் பாலைக் கொண்ட தனங்களை உடையவள். தகுதியான உயிர்களுக்கு உண்மை ஞானத்தைக் கொடுக்கின்ற அமிழ்தப் பாலை அளித்து ஆட்கொண்டு இறைவன் வேறு ஆன்மா வேறு என்று பிரிந்து இருக்கும் அவர்களின் தன்மையை நீக்கி இறைவனோடு ஒன்றாகச் சேர்த்து அருளுகின்றாள்.

பாடல் #1182

பாடல் #1182: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றன ளாருயி ருள்ளே.

விளக்கம்:

பாடல் #1181 இல் உள்ளபடி இறைவன் வேறு ஆன்மா வேறு என்று பிரிந்து இருக்கும் தன்மையை நீக்கி இறைவனோடு ஒன்றாக சேர்வதற்கு அருளுகின்ற இறைவியானவள் ஆரம்ப நிலையில் சாதகரின் ஆன்மாவை பெரும் கருணையோடு காத்து நின்று இறைவனை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற அவரின் எண்ணங்களோடு சேர்ந்து நின்று கொம்பின் உயரத்திற்கு ஏற்ப வளர்கின்ற பூங்கொடியைப் போல சாதகரின் எண்ணங்களுக்கு ஏற்ப அருள் புரிகின்ற அழகிய பூங்கொடியாக இருக்கின்றாள். இறைவனை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற சாதகரின் மனதை அதற்கு ஏற்ப பக்குவப்படுத்தி அதனோடு ஒன்றாக சேர்ந்து நின்று அவருக்கு இறைவனை அடைவதற்கு வேண்டிய உண்மை ஞானத்தை அருளி அந்த ஞானத்தோடு கலந்து ஒன்றாக சாதகரின் உயிருக்குள் நிற்கின்றாள்.

பாடல் #1183

பாடல் #1183: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.

விளக்கம்:

பாடல் #1182 இல் உள்ளபடி உண்மை ஞானத்தோடு கலந்து ஒன்றாக சாதகரின் உயிருக்குள் நிற்கின்ற இறைவியானவள் அவருக்கு எவ்வாறு அருள் புரிகிறாள் என்பதை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். சாதகரின் உள்ளத்திற்கு உள்ளே வந்து அவருடனே சேர்ந்து நிற்கின்ற இறைவியானவள் அவரின் ஐந்து புலன்களும் இறைவனை நோக்கி செல்வதை தடுத்து ஆசைகளின் வழியே செல்ல வைக்கின்ற கள்ளத் தனத்தை (வஞ்சகத் தன்மையை) அகற்றி அவருடன் ஒன்றாகக் கலந்து நின்று அவரை தம்மோடு அணைத்துக் கொண்டு அவர் கொண்ட தவத்தின் வழிப்படியே செல்வதில் இருந்து தவறிவிடாமல் காப்பாற்றி அவர் செய்கின்ற தவம் கைகூடும் காலத்தில் பேரின்பத்தை அளித்து அதிலேயே அவர் லயித்து இருக்குமாறு அருளுகின்ற பெருங்கருணை கொண்ட வள்ளல் தலைவியாக இருக்கின்றாள்.

பாடல் #1184

பாடல் #1184: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற வின்ப மறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்
திருந்த விலக்கி லினிதிருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1183 இல் உள்ளபடி பேரின்பத்தைக் கொடுத்து அருளுகின்ற பெரும் கருணை வள்ளலாக இருக்கின்ற இறைவியானவள் சாதகருடன் எவ்வாறு சேர்ந்து இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். சாதகருக்கு அருள் புரிந்து பேரின்பத்தைக் கொடுக்கின்ற மாபெரும் சக்தியாகிய இறைவி சாதகருக்குள் வீற்றிருந்து தமது அருளினால் புரிகின்ற பேரின்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் சில சாதகர்கள் இருக்கின்றனர். பேரின்பத்தை அறிந்து கொண்ட சாதகர்களுக்குள் அண்டத்தில் இருக்கும் பராசக்தியின் ஒரு துளியாக வீற்றிருக்கும் இறைவியானவள் பூவும் நிறமும் போல சாதகரும் தாமும் ஒன்றாகக் கலந்து வீற்றிருக்கின்றாள். இப்படி இறைவியோடு தாமும் கலந்து வீற்றிருக்கின்ற நிலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வீற்றிருக்கின்ற சாதகர்களோடு அவளும் இன்பமாக வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1185

பாடல் #1185: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

இருந்தன ளேந்திழை யென்னுள்ள மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நீர்திசை யோடு
பொருந்த விலக்கிற் புணர்ச்சி யதுவே.

விளக்கம்:

பாடல் #1184 இல் உள்ளபடி சாதகர்களோடு கலந்து இன்பமாக வீற்றிருக்கின்ற இறைவியானவள் எவ்வாறு கலந்து இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். இறைவியானவள் பேரழகுடன் ஆபரணங்களை அணிந்து கொண்டு எமது உள்ளதிற்குள் புகுந்து வீற்றிருந்து எம்மோடு கலந்து இருப்பதில் மேல் நிலை பெற்றதை யாம் பரிபூரணமாக எமக்குள் உணர்ந்து அதையே எப்போதும் மனதிற்குள் எண்ணிக்கொண்டு இறைவியோடு இருப்பதே என்றும் நிரந்தரம் என்கிற உணர்வோடு பத்து திசைகளிலும் வீற்றிருக்கின்ற இறைவியோடு யாமும் சேர்ந்து இருப்பதையே குறிக்கோளாக வைத்து இருப்பது இறைவியோடு உண்மையாகக் கலந்து இருக்கும் நிலையாகும்.

கருத்து: இறைவி தமக்குள் கலந்து இருப்பதை உணர்ந்திருப்பதைப் போலவே தம்மைச் சுற்றி இருக்கும் பத்து திசைகளிலும் இருக்கும் இறைவியோடு தாமும் கலந்து இருப்பதே இறைவியோடு உண்மையாகக் கலந்து இருக்கும் நிலையாகும்.

பாடல் #1186

பாடல் #1186: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

அதுவிது வென்னு மவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே.

விளக்கம்:

உலகப் பற்றுக்களில் அது வேண்டும் இது வேண்டும் என்று அலைகின்ற ஆசைகளை அகற்றி விட்டு இறைவியைப் போற்றி வணங்கி தியானத்தில் இருந்து சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை செலுத்தி மூச்சுக் காற்றையும் இறப்பையும் வென்று என்றும் இறவாமல் இருக்கும் வழி என்று சந்திர மண்டலத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் இறைவியானவள் எம்மிடம் எடுத்துக் கூறிய மண்டலங்கள் மூன்றாகும்.

கருத்து:

இறைவனை அடைய விரும்பி உலக ஆசைகளை விட்டுவிட்டு இறைவியைப் போற்றி வணங்கி சாதகம் செய்பவர்களுக்கு இறைவி காட்டிய வழியில் பாடல் #612 இல் உள்ளபடி மூலாதார சக்கரத்தில் இருக்கும் அக்னி மண்டலம் ஆக்ஞா சக்கரத்தில் இருக்கும் சந்திர மண்டலம் சகஸ்ரதளத்தில் இருக்கும் சூரிய மண்டலம் ஆகியவற்றுக்கு மூச்சுக் காற்றை சுழுமுனை நாடி வழியே செலுத்தினால் மூச்சுக் காற்றை தம் வசப்படுத்தி என்றும் இறப்பு இல்லாத நிலையை அடையலாம்.

பாடல் #1187

பாடல் #1187: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மூன்றுள மண்டல மோகினி சேர்விடம்
ஏன்றுள வீரா றெழுகலை யுச்சியில்
தோன்று மிலக்குற வாகுதன் மாமாயை
ஏன்றன ளேழிரண் டிந்துவோடு ஈறே.

விளக்கம்:

பாடல் #1186 இல் உள்ளபடி இறைவி கூறியபடி சாதகருக்குள் மூலாதாரத்தில் இருக்கின்ற அக்னி ஆக்ஞையில் இருக்கின்ற சந்திரன் சகஸ்ரதளத்தில் இருக்கின்ற சூரியன் ஆகிய மூன்று மண்டலங்களிலும் இறைவி மாயையின் தலைவியாக சேர்ந்து இருக்கின்றாள். அந்த மாயை நீங்கி இறைவியை அடைவதற்கு பாடல் #1186 இல் இறைவி அருளியபடி சாதகம் செய்து மூச்சுக் காற்றை சுழுமுனை நாடி வழியே அந்த மூன்று மண்டலங்களுக்கும் செலுத்திச் சென்றால் அவளை அடைவதற்கு ஏற்ற விதத்தில் தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குல தூரத்தில் சுத்த மாயையின் இருப்பிடமாக இருக்கின்ற பரவெளியில் இறைவி வீற்றிருக்கின்றாள். பாடல் #871 இல் உள்ளபடி சாதகரின் உடலுக்குள் இருக்கும் ஏழு சக்கரங்களைக் கடந்து எட்டாவதாக இருக்கும் துவாதசாந்த வெளியைத் தாண்டிய ஒன்பதாவது பரவெளியில் இருக்கும் சந்திர மண்டலத்தை தமது இறுதியான இடமாகக் கொண்டு இறைவி வீற்றிருக்கின்றாள்.

கருத்து:

இறைவனை அடைய வேண்டும் என்று இறைவி கூறிய வழியில் சாதகம் செய்யும் சாதகர்கள் முதலில் தமது மாயையை நீங்கி தலை உச்சியில் இருக்கும் ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தைத் தாண்டி எட்டாவதான துவாதசாந்த வெளியில் மாமாயையில் இருக்கும் இறைவியை அறிந்து கொள்வார்கள். இந்த சாதகத்தைத் தொடர்ந்து செய்தால் மாமாயை நீங்கி அதன்பிறகு ஒன்பதாவதாக இருக்கும் சந்திர மண்டலத்தில் வீற்றிருக்கும் இறைவியை உணர்ந்து கொள்வார்கள்.

பாடல் #1188

பாடல் #1188: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

இந்துவி னின்றெழு நாத மிரவிபோல்
வந்தபின் நாக்கின் மதித்தெழுங் கண்டத்தில்
உந்திய சோதி இதயத் தெழுமொலி
இந்துவின் மேலுற்ற ஈறுஅது தானே.

விளக்கம்:

பாடல் #1187 இல் உள்ளபடி சந்திர மண்டலத்தில் வீற்றிருக்கின்ற இறைவியை சாதகர்கள் உணர்ந்த பிறகு அங்கிருந்து எழுகின்ற நாத (ஒலி) சக்தி சூரியனின் கதிர்களைப் போலத் திரும்பி கீழ் நோக்கி வந்து அந்நாக்கில் அடியில் சோதியாக உருவாகி அந்த சோதியை தொண்டைக்குள்ளிருந்து இதயத்திற்குள் உந்தித் தள்ளுகிறது. இதயத்திற்குள் வந்த சோதி ஒலியாக மாறி ஒலிக்கின்றது. இப்படி சந்திர மண்டலத்தில் எழுகின்ற நாத (ஒலி) சக்தி சூரிய கதிர்களைப் போல தொண்டைக்குள் சோதியாகிப் பின் இதயத்திற்குள் ஒலியாக மாறுகின்ற அனைத்தும் சென்று அடைகின்ற இறுதியான இடமாக சந்திர மண்டலத்தில் வீற்றிருக்கும் இறைவி இருக்கின்றாள்.