பாடல் #1388: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
அன்றிரு கையி லளந்த பொருண்முறை
யின்றிரு கையி லெடுத்த வெண்குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டங் கிருந்த வக்காரணி காணுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அனறிரு கையி லளநத பொருணமுறை
யினறிரு கையி லெடுதத வெணகுணடிகை
மனறது காணும வழியது வாகவெ
கணடங கிருநத வககாரணி காணுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அன்று இரு கையில் அளந்த பொருள் முறை
இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை
மன்று அது காணும் வழி அது ஆகவே
கண்டு அங்கு இருந்த அக் காரணி காணுமே.
பதப்பொருள்:
அன்று (ஆதியில் உயிர்களைப் படைக்கும் போதே) இரு (தனது இரண்டு) கையில் (திருக்கரங்களாலும்) அளந்த (அவரவர்களின் அளந்து கொடுத்த) பொருள் (இன்பமும் துன்பமுமாகிய போகங்களை) முறை (வினைகளுக்கு ஏற்ற முறைப்படி கொடுத்து உயிர்கள் அதை அனுபவிக்க அருளினாள்)
இன்று (இப்போது நவாக்கிரி சக்கர சாதகத்தை செய்யும் சாதகர்களுக்கு) இரு (தனது இரண்டு) கையில் (திருக்கரங்களிலும்) எடுத்த (எடுத்துக் கொண்ட) வெண் (மாயை முதலிய மல அழுக்குகளை நீக்கி தூய்மையாக்கி பேரறிவு ஞானத்தைக் கொடுத்து) குண்டிகை (கமண்டலத்திலிருக்கும் நீரினால் பாவங்களை நீக்கி இனிமேல் வரும் பிறவிகளையும் அழித்து)
மன்று (இறைவன் ஆடுகின்ற அம்பலத்தை) அது (தனக்குள்ளே) காணும் (தரிசிக்கும்) வழி (வழியாகவே) அது (இவைகளை இறைவி அருளுகின்றாள்) ஆகவே (என்பதை சாதகர்)
கண்டு (கண்டு கொண்டு) அங்கு (அதையே எண்ணிக்கொண்டு) இருந்த (தியானத்தில் இருந்து) அக் (இறைவனை அடைவதற்கு) காரணி (காரணமாக) காணுமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற இறைவியே இருக்கின்றாள் என்பதை தமக்குள் கண்டு அறிந்து கொள்வார்).
விளக்கம்:
ஆதியில் உயிர்களைப் படைக்கும் போதே தனது இரண்டு திருக்கரங்களாலும் அவரவர்களின் வினைகளுக்கு ஏற்ற முறைப்படி இன்பமும் துன்பமுமாகிய போகங்களை அளந்து கொடுத்து உயிர்கள் அதை அனுபவிக்க அருளினாள். இப்போது நவாக்கிரி சக்கர சாதகத்தை செய்யும் சாதகர்களுக்கு தனது இரண்டு திருக்கரங்களாலும் சாதகரிடமிருந்து மாயை முதலிய மல அழுக்குகளை நீக்கி தூய்மையாக்கி பேரறிவு ஞானத்தைக் கொடுத்து கமண்டலத்திலிருக்கும் நீரினால் பாவங்களை நீக்கி இனிமேல் வரும் பிறவிகளையும் அழித்து அருளுகின்றாள். இறைவன் ஆடுகின்ற அம்பலத்தை தனக்குள்ளே தரிசிக்கும் வழியாகவே இவைகளை இறைவி அருளுகின்றாள் என்பதை சாதகர் கண்டு கொண்டு அதையே எண்ணிக்கொண்டு தியானத்தில் இருந்து தாம் இறைவனை அடைவதற்கு நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற இறைவியே காரணமாக இருக்கின்றாள் என்பதை தமக்குள் கண்டு அறிந்து கொள்வார்.