பாடல் #129

பாடல் #129: முதல் தந்திரம் – 1. உபதேசம்

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வது எவ்வாறே.

விளக்கம்:

பாடல் #128 ல் உள்ளபடி சமாதி நிலையில் இருக்கும் சித்தர்கள் அனைத்து உலகங்களும் சிவமாய் இருப்பதை தமக்குள்ளே தரிசித்துக்கொண்டார்கள். அப்படியே இருந்துதான் சிவனை விட்டுப் பிரியாது சிவனோடு கலந்து நிற்கும் சிவயோகமும் தம்முள்ளே கண்டார்கள் அப்படியே இருந்துதான் சிவபோகமான பேரானந்த நிலையையும் தமக்குள்ளே கண்டார்கள். அப்படி அவர்கள் இருக்கும் நிலையை யாம் வெறும் வார்த்தைகளால் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? அதை அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே அறிய முடியும்.

பாடல் #130

பாடல் #130: முதல் தந்திரம் – 1. உபதேசம்

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருட்செய்வன் ஆதி பரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய் செழுஞ்சுடர் மாணிக்கமே.

விளக்கம்:

பாடல் # 129 ல் கூறியபடி பேரின்பத்தில் இருக்கும் சித்தர்கள் எந்த அளவு பேரறிவு ஞானத்தைப் பெற்று இருக்கின்றார்களோ அந்த அளவு அவர்களுக்கு தன் அருளை வழங்குபவன் ஆதியிலிருந்து இருக்கின்ற பரம்பொருளான சதாசிவமூர்த்தி. அவனே ஈடு இணை சொல்லமுடியாத தில்லையம்பலத்தில் உமாதேவியார் கண்டு களிக்க திருநடனம் ஆடுகின்ற போது மாலை நேரத்தில் சூரியன் மறையும் போது சிவந்து தெரியும் வானத்தையும் விட சிவப்பான சுடர்களுடைய பேரொளியைத் தரும் மாணிக்கம் போல இருப்பவன்.

பாடல் #131

பாடல் #131: முதல் தந்திரம் – 1. உபதேசம்

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதுஎன்ன பேறு பெற்றாரே.

விளக்கம்:

பாடல் #130ல் உள்ளபடி பேரொளியாய் இருக்கும் மாணிக்கத்தின் (சிவன் – செந்நிறம்) உள்ளிருந்து மரகதஜோதியாய் (சக்தி – பச்சை) சக்தியே சிவனுக்கு திருமேனியாக இருவரும் இணைந்து தில்லையின் பொன்னம்பலத்தில் ஆடும் திருநடனத்தைத் தம்முள் தரிசித்த சிவயோகியர் என்ன பேறு பெற்றார்களோ என்று வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவு பெரிய பேறு பெற்றார்கள்.

பாடல் #132

பாடல் #132: முதல் தந்திரம் – 1. உபதேசம்

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாய் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

விளக்கம்:

பாடல் 131 ல் உள்ளபடி சிவ சக்தியின் திருநடனத்தைத் தம்முள்ளே கண்ட சிவயோகியர் இந்த உலகத்திலிருந்து என்றும் பிரிந்துவிடாத (இறவாத) பெரும் வழியையும் இந்த உலகத்தில் மீண்டும் பிறக்காத (இறப்பில்லையேல் மீண்டும் பிறப்பும் இல்லை) பெரும் பயனையும் தில்லை பொன்னம்பலத்தில் தாம் தரிசித்த சிவசக்தியர் தம்மை என்றும் பிரியாமல் அவர்களுடனே பேரானந்தத்தில் என்றும் நிலைத்து இருக்கும் பெரும் பேறும் பேரானந்தத்தில் நிலைத்திருக்கும் நிலையில் உலகோடு எந்த செயலும் கொள்ளாமல் தனித்து தமக்குள்ளே தியானித்து இருக்கும் பெருமையும் ஆகிய அனைத்தையும் பெற்றார்கள்.

பாடல் #133

பாடல் #133: முதல் தந்திரம் – 1. உபதேசம்

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.

விளக்கம்:

பெரியது எதுவோ அதைவிடவும் பெரியதாக இருக்கும் பெருமையையும் சிறியது எதுவோ அதைவிடவும் சிறியதாக இருக்கும் சிறுமையையும் அறிந்து கொண்டு அருமையையான எம்பெருமான் சதாசிவமூர்த்தியைப் போல அடியவர்களுக்கு அடியவராய் அருளும் எளிமையையும் முழுவதும் அறிந்தவர்கள் யார்? ஆபத்தில் தனது நான்கு கால்கள் ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஒரு ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்ளும் ஆமையைப் போலவே சிவத்தை நோக்கித் தமது ஐம்புலன்களையும் அடக்கித் தியானித்திருக்கும் சிவயோகியர்கள் இறப்பு பிறப்பு இல்லாமல் எப்போதும் இறைவனின் பேரின்பத்திலேயே திளைத்து செயலும் உணர்வும் இல்லாமல் இறைவனின் தன்மைகளை முழுமையாக அறிந்துகொள்வார்கள்.

பாடல் #134

பாடல் #134: முதல் தந்திரம் – 1. உபதேசம்

புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

விளக்கம்:

புரை ஊற்றப்படாத சுத்தமான பாலுக்குள்ளே நெய் கலந்து இருப்பது போலவே கடல் அலைகள் போல அலைபாய்ந்து கொண்டிருக்கும் சிந்தனைகளுக்குள்ளே ஞானகுரு சொன்ன மந்திரத்தை ஜெபித்து இறைவனின் மேல் மனம் ஒருநிலைப்பட்டு இருப்பதை உணர்ந்தவர்கள் தாம் பிறந்த இந்த உடலை விட்டுவிட்டு சூட்சும ஒளியாகி எல்லையில்லாத பேரொளியாகிய இறைவனோடு கலந்து சுத்தமான பரவெளியில் என்றுமே நிலைத்து இருப்பார்கள்.

பாடல் #135

பாடல் #135: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சத்த முதலைந்தும் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியில் சுடரில் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

விளக்கம்:

சத்தம் முதலாகிய ஐந்து புலன்களும் அவை தோன்றிய இச்சை வழியிலேயே சென்று அந்த இச்சைகளைத் தீர்த்து பின் அடங்கிவிட்டால் ஆன்மாவின் சித்தமாக இருக்கும் இறைவனின் பேரான்மாவோடு போய் சேர்வதைத் தவிர வேறு வழி இருக்கிறதா? இறைவன் இருக்கும் சுத்தமான பரவெளியில் ஆன்ம ஒளி இறைவனின் பேரொளியோடு சேர்ந்து விடும். பிறவியின் பொருள் இதுதான் என்பதை அனுபவத்தால் அறிந்து கொண்டு தெளிந்த நீரைப் போல மனம் தெளிந்து இருப்பீர்களாக.

பாடல் #136

பாடல் #136: முதல் தந்திரம் – 1. உபதேசம்

அப்பினிற் கூர்மை ஆதித்தனின் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

விளக்கம்:

கடல் நீரில் கரிப்பாக கலந்திருக்கும் உப்புச்சத்தே சூரியனின் வெப்பத்தால் ஒன்றுகூடி உப்பு எனும் பேர் பெற்ற பொருளாக உருவம் பெறும். உருவம் பெற்ற உப்பு எனும் பொருளை மறுபடியும் கடல் நீரில் சேர்த்தால் அதன் உருவம் மறைந்து மறுபடியும் கரிப்புச் சத்தாகவே மாறிக் கடலோடு ஒன்றாக கலந்துவிடும். அதுபோலவே சொல்லப்போனால் பேரான்மாவான சிவத்திடமிருந்து பிரிந்து வந்த ஆன்மாவும் இறுதியில் சிவமாகிய பேரான்மாவில் ஒன்றாகக் கலந்து அடங்கிவிடும்.

பாடல் #137

பாடல் #137: முதல் தந்திரம் – 1. உபதேசம்

அடங்குபே ரண்டத் தனுஅண்டம் சென்றங்
கிடங்கொண்ட தில்லை ஈதன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.

விளக்கம்:

அண்டங்கள் அனைத்துமே அனுக்களாகவே இருப்பதால் அவை அனுவுக்குள் அடங்குபவையாகும். அனுவானது அண்டங்களுக்குள் அடங்கும் ஒரு பொருள் இல்லை அது அண்டங்கள் முழுவதற்கும் மூலப் பொருள். அதுபோலவே உடம்பெடுத்து வந்த உயிர்கள் அனைத்துமே ஆன்மாவால் உருவானவை என்பதால் ஆன்மா உடலுக்குள் அடங்கும் ஒரு பொருள் இல்லை அது உடம்பின் உருவத்திலேயே இருக்கின்ற இறைவனின் ஒரு பகுதி. ஆகவே உடல் முடிந்தபின் உயிர் சென்று சேரும் இடம் எது என்று பார்த்தால் அது எந்த பரமாத்மாவிலிருந்து வந்ததோ அந்த பேரான்மாவாக நின்று கொண்டிருக்கும் இறைவனின் திருவடிகளில் தான்.

பாடல் #138

பாடல் #138: முதல் தந்திரம் – 1. உபதேசம்

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

விளக்கம்:

பேரான்மாவாக நின்று கொண்டிருக்கும் இறைவனின் திருவடிகளை உணர்ந்து கொண்டால் இறைவனின் திருவடியே சிவமாக இருக்கும். இறைவன் இருக்கும் சிவலோகம் எது என்று சிந்தித்தால் இறைவனின் திருவடிகளே சிவலோகமாக இருக்கின்றது. உயிர்கள் சென்று சேருகின்ற இடம் எது என்று சொன்னால் இறைவனின் திருவடிகளே சென்று சேரும் இடமாக இருக்கின்றது. தாமக்குள் இருக்கும் இறைவனை உள்ளுக்குள் உணர்ந்து தெளிபவர்களுக்கு இறைவனின் திருவடிகளே அவர்கள் எப்போதும் சென்று தஞ்சமடையும் இடமாக இருக்கின்றது.