பாடல் #194: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை
இன்புறு வண்டங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்தினுள்நில் லானே.
விளக்கம்:
இனிமையான தேனைச் சுவைக்க ஆசைகொண்ட வண்டுகள் அந்த இனிமையான தேனைத் தன் மகரந்தத்திற்குள் வைத்திருக்கும் தேன் இன மலர்களை அவற்றின் வாசனையின் மூலம் கண்டு பிடித்து அவற்றின் மேல் போய் உட்கார்ந்து அதன் மகரந்தத்திற்கு உள்ளிருக்கும் தேனை உறிஞ்சிக் குடித்து இன்பம் அடையும். அதுபோலவே உடலுக்குள் உயிராக நிற்கும் இறைவனை அறிய விரும்பாமல் உலகத்து ஆசைகளை அனுபவிக்க ஆசைப்படும் உயிர்கள் அந்த ஆசைகளை அனுபவிக்கும் வழிகளைத் தேடிச் சென்று வினைக் காரியங்களை செய்து அனுபவித்து சிற்றின்பம் அடையும். பகலில் காட்சிகளைக் காட்டும் சூரிய ஒளியாகவும் இரவில் காட்சிகளைக் காட்டும் சந்திர ஒளியாகவும் பகலிலும் இரவிலும் காட்சிகளைக் காணும் கண்ணின் ஒளியாகவும் இருக்கின்ற இறைவன், உலக இன்பத்தில் திளைத்திருக்க விரும்பும் உயிர்கள் காணும் காட்சியில் இருப்பானே தவிர அவர்களின் உணர்வுகளில் இருக்க மாட்டான்.