பாடல் #1813: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
விளையும் பரவிந்து தானே வியாபி
விளையுந் தனிமாயை மிக்க மாமாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேத
மளவொன் றிலாவண்டமாங் கொடி யாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
விளையும பரவிநது தானெ வியாபி
விளையுந தனிமாயை மிகக மாமாயை
கிளையொனறு தெவர கிளரமனு வெத
மளவொன றிலாவணடமாங கொடி யாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
விளையும் பர விந்து தானே வியாபி
விளையும் தனி மாயை மிக்க மா மாயை
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம்
அளவு ஒன்று இலா அண்டமாம் கொடியாளே.
பதப்பொருள்:
விளையும் (அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களிலும் வாழுகின்ற உயிர்களாக விளைந்து இருக்கின்ற) பர (பரம்பொருளாகிய) விந்து (பேரறிவாகிய வெளிச்சம்) தானே (தாமே) வியாபி (அண்ட சராசரங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்றது)
விளையும் (அனைத்துமாக விளைந்து நிற்கின்ற) தனி (தனிப் பொருளாகிய) மாயை (மாயையிலும்) மிக்க (அதனை விட மேன்மையான) மா (மாபெரும்) மாயை (மாயையிலும்)
கிளை (வானவர் இனத்தில்) ஒன்று (ஒன்றாக இருக்கின்ற) தேவர் (தேவர்கள்) கிளர் (உயிர்களின் உலக செயல்களுக்காக தமக்குள் இருந்து இறையருளால் கிளர்ந்து எழுகின்ற) மனு (மந்திரங்களாகிய) வேதம் (வேதத்திலும்)
அளவு (இவ்வளவு அளவு என்று) ஒன்று (ஒன்றும்) இலா (இல்லாத அளவிற்கு மிகப் பெரியதாகிய) அண்டமாம் (அண்டங்களிலும்) கொடியாளே (படர்ந்து விரிந்து இருக்கின்ற பேரருள் சக்தியாகவும் அதுவே இருக்கின்றது).
விளக்கம்:
பாடல் #1812 இல் உள்ளபடி அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களிலும் வாழுகின்ற உயிர்களாக விளைந்து இருக்கின்ற பரம்பொருளாகிய பேரறிவு வெளிச்சமே அண்ட சராசரங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்றது. அந்த பரம்பொருளாகிய இறை சக்தியே தனிப் பொருளாகிய மாயையிலும், அதனை விட மேன்மையான மாமாயையிலும், வானவர் இனத்தில் ஒன்றாக இருக்கின்ற தேவர்கள் உயிர்களில் உலக செயல்களுக்காக தமக்குள் இருந்து இறையருளால் கிளர்ந்து எழுகின்ற மந்திரங்களாகிய வேதத்திலும், அளவில்லாத மிகப் பெரியதாகிய அண்டங்களிலும் படர்ந்து விரிந்து இருக்கின்றது.