பாடல் #1795

பாடல் #1795: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

தேர்ந்தறி யாமையின் காலங்கள் போயின
பேர்ந்தறி வானெங்கள் பிஞ்ஞக னெம்மிறை
யார்ந்தறி வாரறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெரநதறி யாமையின காலஙகள பொயின
பெரநதறி வானெஙகள பிஞஞக னெமமிறை
யாரநதறி வாரறி வெதுணை யாமெனச
சாரநதறி வானபெருந தனமைவல லானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தேர்ந்து அறியாமை இன் காலங்கள் போயின
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை
ஆர்ந்து அறிவார் அறிவே துணை ஆம் என
சார்ந்து அறிவான் பெரும் தன்மை வல்லானே.

பதப்பொருள்:

தேர்ந்து (தமக்குள்ளே இருக்கின்ற இறைவனின் திருவருளால் பிறவி இல்லாத நிலையை அடைய முடியும்) அறியாமை (என்பதை அறிந்து கொள்ளாத) இன் (தன்மையினால்) காலங்கள் (உயிர்களின் ஒரு பிறவியின் காலங்கள்) போயின (வீணாக கழிந்து போகின்றது)
பேர்ந்து (இப்படி வீணாக வாழ்நாளை கழிக்காமல் இறைவனை தேடுகின்ற உயிர்கள் எது என்பதை பிரித்து) அறிவான் (அறிகின்றவன்) எங்கள் (எங்களின் தலைவனாகிய) பிஞ்ஞகன் (பிறை நிலாவையும் கங்கையையும் தலையில் சடையாகச் சூடிக்கொண்டு பிறவி இல்லாத நிலையை அருளும்) எம் (எமது) இறை (இறைவன் ஆவான்)
ஆர்ந்து (அவனை தமக்குள்ளே ஆராய்ந்து) அறிவார் (அறிகின்றவர்களுக்கு) அறிவே (உண்மை அறிவாக) துணை (எப்போதும் துணை) ஆம் (ஆக) என (இருப்பான்)
சார்ந்து (அந்த இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவுத் துணையை எப்போதும் சார்ந்து இருந்து) அறிவான் (அனைத்தையும் அறிந்து கொள்ளுகின்ற அடியவர்கள்) பெரும் (மிகப் பெரிய) தன்மை (தன்மைகளை) வல்லானே (அடையும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்).

விளக்கம்:

தமக்குள்ளே இருக்கின்ற இறைவனின் திருவருளால் பிறவி இல்லாத நிலையை அடைய முடியும் என்பதை அறிந்து கொள்ளாத தன்மையினால் உயிர்களின் ஒரு பிறவியின் காலங்கள் வீணாக கழிந்து போகின்றது. இப்படி வீணாக வாழ்நாளை கழிக்காமல் இறைவனை தேடுகின்ற உயிர்கள் எது என்பதை பிரித்து அறிகின்றவன் பிறை நிலாவையும் கங்கையையும் தலையில் சடையாகச் சூடிக்கொண்டு பிறவி இல்லாத நிலையை அருளும் எமது தலைவனாகிய இறைவன் ஆவான். அவனை தமக்குள்ளே ஆராய்ந்து அறிகின்றவர்களுக்கு உண்மை அறிவாக எப்போதும் துணையாக இருப்பான். அந்த இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவுத் துணையை எப்போதும் சார்ந்து இருந்து அனைத்தையும் அறிந்து கொள்ளுகின்ற அடியவர்கள் மிகப் பெரிய தன்மைகளை அடையும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.