பாடல் #1660: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)
பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேட மெய்வேடம் போதவே பூணினு
முய்வேட மாகுமு ணர்ந்தறிந் தோர்க்கே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பொயவெடம பூணபர பொசிததல பயனாக
மெயவெடம பூணபொர மிகுபிசசை கைககொளவர
பொயவெட மெயவெடம பொதவெ பூணினு
முயவெட மாகுமு ணரநதறிந தொரககெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கை கொள்வர்
பொய் வேடம் மெய் வேடம் போதவே பூணினும்
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே.
பதப்பொருள்:
பொய் (உண்மையான தவசிகளைப் போல பொய்யாக) வேடம் (வேடம்) பூண்பர் (அணிந்து கொள்பவர்கள்) பொசித்தல் (சும்மா இருந்து மற்றவர்கள் தானமாக தருகின்ற உணவை வைத்து தமது பசியை தீர்த்துக் கொள்கின்ற) பயன் (பயனை) ஆக (எண்ணியே ஆகும்)
மெய் (உண்மையான) வேடம் (வேடத்தை) பூண்போர் (அணிந்த தவசிகள்) மிகு (மேன்மையான) பிச்சை (உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு யாசிக்கின்ற பிச்சை என்கின்ற) கை (கொள்கையை) கொள்வர் (மேற் கொண்டவர்கள்)
பொய் (பொய்யான) வேடம் (வேடமாக இருந்தாலும்) மெய் (உண்மையான) வேடம் (வேடமாக இருந்தாலும்) போதவே (அவர்களின் ஆசைகளோ கொள்கைகளுக்கோ ஏற்றபடி) பூணினும் (அணிந்து கொண்டாலும்)
உய் (இறைவனை அடைவதற்கு) வேடம் (அந்த வேடம்) ஆகும் (பயன்படுவது) உணர்ந்து (அந்த வேடத்தின் உள்ளே இருக்கின்ற உண்மையான தத்துவத்தை உணர்ந்து) அறிந்தோர்க்கே (அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே ஆகும்).
விளக்கம்:
உண்மையான தவசிகளைப் போல பொய்யாக வேடம் அணிந்து கொள்பவர்கள் சும்மா இருந்து மற்றவர்கள் தானமாக தருகின்ற உணவை வைத்து தமது பசியை தீர்த்துக் கொள்கின்ற பயனை எண்ணியே அப்படி வேடம் போடுகின்றார்கள். உண்மையான வேடத்தை அணிந்த தவசிகள் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு யாசிக்கின்ற பிச்சை என்கின்ற மேன்மையான கொள்கையை மேற் கொண்டவர்கள் ஆவார்கள். பொய்யான வேடமாக இருந்தாலும் உண்மையான வேடமாக இருந்தாலும் அவர்களின் ஆசைகளோ கொள்கைகளுக்கோ ஏற்றபடி அணிந்து கொண்டாலும், இறைவனை அடைவதற்கு அந்த வேடம் பயன்படுவது அந்த வேடத்தின் உள்ளே இருக்கின்ற உண்மையான தத்துவத்தை உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே ஆகும்.
கருத்து:
பொய்யான வேடம் அணிந்தாலும் உண்மையான வேடம் அணிந்தாலும் தவ வேடத்தின் உட்பொருளாகிய எதை செய்தாலும் ஆசைகள் இல்லாமல் யாசித்து செய்கின்ற தத்துவத்தை உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கே அது இறைவனை அடைவதற்கு வழிகாட்டும்.