பாடல் #1645

பாடல் #1645: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

பிரானரு ளுண்டெனி லுண்டுநற் செல்வம்
பிரானரு ளுண்டெனி லுண்டுநல் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையு முண்டு
பிரானரு ளாற்பெருந் தெய்வமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிரானரு ளுணடெனி லுணடுநற செலவம
பிரானரு ளுணடெனி லுணடுநல ஞானம
பிரானரு ளிறபெருந தனமையு முணடு
பிரானரு ளாறபெருந தெயவமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம்
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம்
பிரான் அருளில் பெரும் தன்மையும் உண்டு
பிரான் அருளால் பெரும் தெய்வமும் ஆமே.

பதப்பொருள்:

பிரான் (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின்) அருள் (திருவருள்) உண்டு (ஒருவருக்கு இருக்கின்றது) எனில் (என்றால்) உண்டு (அவருக்கு கிடைக்கும்) நல் (தருமத்தினால் வருகின்ற) செல்வம் (அனைத்து விதமான செல்வங்களும்)
பிரான் (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின்) அருள் (திருவருள்) உண்டு (ஒருவருக்கு இருக்கின்றது) எனில் (என்றால்) உண்டு (அவருக்கு கிடைக்கும்) நல் (உண்மை அறிவாகிய) ஞானம் (பேரறிவு ஞானமும்)
பிரான் (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின்) அருளில் (திருவருளில்) பெரும் (மாபெரும்) தன்மையும் (இறை தன்மையும்) உண்டு (அவருக்கு கிடைக்கும்)
பிரான் (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின்) அருளால் (திருவருளால்) பெரும் (மாபெரும்) தெய்வமும் (தெய்வமாகவே) ஆமே (அவரும் ஆகிவிடுவார்).

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் திருவருள் ஒருவருக்கு இருக்கின்றது என்றால் அவருக்கு தருமத்தினால் வருகின்ற அனைத்து விதமான செல்வங்களும், உண்மை அறிவாகிய பேரறிவு ஞானமும் கிடைக்கும். இறைவனின் திருவருளில் ஞானம் கிடைக்கப் பெற்ற அவருக்கு இந்த பிறவியிலேயே மாபெரும் இறை தன்மையை கிடைக்கப் பெற்று அதன் பிறகு பிறவி இல்லாத நிலையில் மாபெரும் இறைவனாகவே அவரும் ஆகிவிடுவார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.