பாடல் #1581: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)
குருவே சிவமென்னக் கூறின னந்தி
குருவே சிவமென்பது குறித் தோரார்
குருவே சிவமாகக் கோனுமாய் நிற்குங்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
குருவெ சிவமெனனக கூறின னநதி
குருவெ சிவமெனபது குறித தொரார
குருவெ சிவமாகக கொனுமாய நிறகுங
குருவெ யுரையுணர வறறதொர கொவெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
குருவே சிவம் என்ன கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவம் ஆக கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே.
பதப்பொருள்:
குருவே (தமக்கு குருவாக அமைந்தவரே) சிவம் (சிவப் பரம்பொருள்) என்ன (என்று) கூறினன் (கூறியருளினார்) நந்தி (குருநாதராகிய இறைவன்)
குருவே (ஆயினும் குருவாக இருப்பது) சிவம் (சிவப் பரம்பொருளே) என்பது (என்பதை) குறித்து (தமக்குள் சிந்தித்து) ஓரார் (ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் பலர் இருக்கின்றார்கள்)
குருவே (அவ்வாறு ஆராய்ந்து அறிந்து கொண்டால் தமது குருவே) சிவம் (அன்பையும் அருளையும் கொடுக்கும் சிவப் பரம்பொருள்) ஆக (ஆகவும்) கோனும் (வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவன்) ஆய் (ஆகவும்) நிற்கும் (நிற்கின்றதை அறிந்து கொள்ளலாம்)
குருவே (அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு தமது குரு என்பவர்) உரை (சொற்களால் விவரிக்க முடியாதவராகவும்) உணர்வு (ஐம் புல உணர்வினால் முழுமையாக) அற்றது (உணர முடியாதவராகவும்) ஓர் (இருக்கின்ற ஒரு) கோவே (இறைவனாக இருப்பார்).
விளக்கம்:
தமக்கு குருவாக அமைந்தவரே சிவப் பரம்பொருள் என்று கூறியருளினார் குருநாதராகிய இறைவன். ஆயினும் குருவாக இருப்பது சிவப் பரம்பொருளே என்பதை தமக்குள் சிந்தித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் பலர் இருக்கின்றார்கள். அவ்வாறு ஆராய்ந்து அறிந்து கொண்டால், தமது குருவே அன்பையும் அருளையும் கொடுக்கும் சிவப் பரம்பொருளாகவும், வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் நிற்கின்றதை அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு, தமது குரு என்பவர் சொற்களால் விவரிக்க முடியாதவராகவும், ஐம் புல உணர்வினால் முழுமையாக உணர முடியாதவராகவும் இருக்கின்ற ஒரு இறைவனாக இருப்பார்.