பாடல் #1580: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனவடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சிவனெ சிவஞானி யாதலாற சுதத
சிவனெ யெனவடி செரவல லாரககு
நவமான தததுவ நனமுததி நணணும
பவமான தினறிப பரலோக மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சிவனே சிவ ஞானி ஆதலால் சுத்த
சிவனே என அடி சேர வல்லார்க்கு
நவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும்
பவம் ஆனது இன்றி பர லோகம் ஆமே.
பதப்பொருள்:
சிவனே (சிவப் பரம்பொருளே) சிவ (சிவத்தை அறிந்த) ஞானி (ஞானியாகவும்) ஆதலால் (இருப்பதால்) சுத்த (சிவத்தை அறிந்த உண்மை ஞானியாகிய குருவையே)
சிவனே (சிவப் பரம்பொருள்) என (என்று) அடி (குருவின் திருவடியை) சேர (சரணடைய) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு)
நவம் (அவர்களுக்குள் தோன்றுகின்ற புதுமையான) ஆன (அற்புதமான) தத்துவம் (ஞானத்தின் மூலம்) நல் (நன்மையைத் தரும்) முத்தி (முக்தியை) நண்ணும் (அடைந்து)
பவம் (இந்த உலக வாழ்கை) ஆனது (என்பது) இன்றி (இனி எப்போதும் இல்லாத நிலையில்) பர (இறைவன் இருக்கின்ற) லோகம் (உலகத்தை) ஆமே (அடைவார்கள்).
விளக்கம்:
சிவப் பரம்பொருளே சிவத்தை அறிந்த ஞானியாகவும் இருப்பதால், சிவத்தை அறிந்த உண்மை ஞானியாகிய குருவையே சிவப் பரம்பொருள் என்று குருவின் திருவடியை சரணடைய முடிந்தவர்களுக்கு, அவர்களுக்குள் தோன்றுகின்ற புதுமையான அற்புதமான ஞானத்தின் மூலம் நன்மையைத் தரும் முக்தியை அடைந்து இந்த உலக வாழ்கை என்பது இனி எப்போதும் இல்லாத நிலையில் இறைவன் இருக்கின்ற உலகத்தை அடைவார்கள்.