பாடல் #1578: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)
சுத்த சிவன்குரு வாய்வந்த துய்மைசெய்
தத்தனை நல்லருள் காணா வதிமூடர்
பொய்யத்தகு கண்ணா னமரென்பர் புண்ணி
யரத்த னிவனென் றடிபணி வாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சுதத சிவனகுரு வாயவநத துயமைசெய
தததனை நலலருள காணா வதிமூடர
பொயயததகு கணணா னமரெனபர புணணி
யரதத னிவனென றடிபணி வாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சுத்த சிவன் குருவாய் வந்தது உய்மை செய்து
அத்தனை நல் அருள் காணா அதி மூடர்
பொய்ய தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர்
அத்தன் இவன் என்று அடி பணிவாரே.
பதப்பொருள்:
சுத்த (பரிசுத்தமான) சிவன் (சிவப் பரம்பொருளே) குருவாய் (குருவாக) வந்தது (வந்தது) உய்மை (அனைத்து உயிர்களும் மேல் நிலைக்கு செல்ல வேண்டும்) செய்து (என்கின்ற மாபெரும் கருணை செய்து)
அத்தனை (அனைவருக்கும் தந்தையாக இருந்து) நல் (நன்மையான) அருள் (அருளை வழங்குதற்காகவே ஆகும்) காணா (இதை கண்டு உணராத) அதி (மிகவும் குருடர்களான) மூடர் (மூடர்களே)
பொய்ய (தங்களின் பொய்யான எண்ணங்களுக்கு) தகு (தகுந்தது போல) கண்ணான் (மூன்றாவது கண்ணைக் கொண்டு எரித்து அழிக்கும் இவன்) நமர் (எமனே) என்பர் (என்று அறிவின்மையால் கூறுவார்கள்) புண்ணியர் (ஆனால் இதை கண்டு உணர்ந்த புண்ணியர்களாகிய அடியவர்களோ)
அத்தன் (அனைவருக்கும் தந்தையாக இருப்பவன்) இவன் (இவனே) என்று (என்று) அடி (குருவாக வந்த இறைவனின் திருவடிகளை) பணிவாரே (தொழுது வணங்குவார்கள்).
விளக்கம்:
பரிசுத்தமான சிவப் பரம்பொருளே குருவாக வந்தது அனைத்து உயிர்களும் மேல் நிலைக்கு செல்ல வேண்டும் என்கின்ற மாபெரும் கருணை செய்து அனைவருக்கும் தந்தையாக இருந்து நன்மையான அருளை வழங்குதற்காகவே ஆகும். இதை கண்டு உணராத மிகவும் குருடர்களான மூடர்களே தங்களின் பொய்யான எண்ணங்களுக்கு தகுந்தது போல மூன்றாவது கண்ணைக் கொண்டு எரித்து அழிக்கும் இவன் எமனே என்று அறிவின்மையால் கூறுவார்கள். ஆனால் இதை கண்டு உணர்ந்த புண்ணியர்களாகிய அடியவர்களோ அனைவருக்கும் தந்தையாக இருப்பவன் இவனே என்று குருவாக வந்த இறைவனின் திருவடிகளை தொழுது வணங்குவார்கள்.