பாடல் #1436: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)
விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிக
ளெண்ணினைச் சென்றணு காம லெண்ணப்படு
மண்ணலைச் சென்றணு காப்பசு பாசமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
விணணினைச செனறணு காவியன மெகஙகள
கணணினைச செனறணு காபபல காடசிக
ளெணணினைச செனறணு காம லெணணபபடு
மணணலைச செனறணு காபபசு பாசமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
விண்ணினை சென்று அணுகா வியன் மேகங்கள்
கண்ணினை சென்று அணுகா பல காட்சிகள்
எண்ணினை சென்று அணுகாமல் எண்ணப்படும்
அண்ணலை சென்று அணுகா பசு பாசமே.
பதப்பொருள்:
விண்ணினை (விண்ணுலகத்தை) சென்று (சென்று) அணுகா (சேர்வதில்லை) வியன் (பரந்து விரிந்த வானத்தில் இருக்கும்) மேகங்கள் (மேகங்கள்)
கண்ணினை (பார்க்கின்றவரின் கண்களை) சென்று (சென்று) அணுகா (சேர்வதில்லை) பல (அவர் பார்க்கின்ற பலவிதமான) காட்சிகள் (காட்சிகள் / கண்ணால் காணப்படுகிறதே தவிர கண்ணைத் தொடுவதில்லை)
எண்ணினை (உண்மையான ஞானத்தை) சென்று (சென்று) அணுகாமல் (சேராமல்) எண்ணப்படும் (உலகத்தில் அறிந்தவற்றையே எண்ணிக்கொண்டு இருக்கின்ற எண்ணங்களால்)
அண்ணலை (இறைவனை) சென்று (சென்று) அணுகா (சேராத படி) பசு (ஆன்மாவை தடுத்து வைக்கின்றது) பாசமே (பாசம்).
விளக்கம்:
பரந்து விரிந்து இருக்கின்ற வானத்தில் எவ்வளவுதான் உயரே மேகங்கள் சென்றாலும் அவை விண்ணுலகத்தை சென்று அடைவதில்லை. பல விதமான காட்சிகளைக் கண்டாலும் கண்களில் அந்தக் காட்சிகள் வந்து ஒட்டிக் கொள்வதில்லை. அது போலவே உலகத்தில் அறிந்தவற்றையே எண்ணிக் கொண்டு இருக்கின்ற எண்ணங்களால் உண்மை ஞானமாக இருக்கின்ற இறைவனை சென்று அடைய முடியாதபடி பாசமானது ஆன்மாவை தடுத்துக் கொண்டு இருக்கின்றது. ஆகவே இறைவனை அடைய வேண்டுமென்றால் மார்க்க சைவத்தின் வழியைக் கடை பிடித்து அதன் பயனால் பாசத்தளை நீங்கி உண்மை ஞானமாக இருக்கின்ற இறைவனை அடையலாம்.