பாடல் #1433: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)
பூரணந் தன்னிலே வைத்தற்ற வப்போத
மாரண மந்த மதித்தானந் தத்தோடு
நேரென வீராறு நீதிநெடும் போகங்
காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பூரணந தனனிலெ வைததறற வபபொத
மாரண மநத மதிததானந தததொடு
நெரென வீராறு நீதிநெடும போகங
காரண மாஞசுதத சைவரககுக காடசியெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பூரணம் தன்னிலே வைத்து அற்ற அப்போதம்
ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தத்தோடு
நேர் என ஈர் ஆறு நீதி நெடும் போகம்
காரணம் ஆம் சுத்த சைவர்க்கு காட்சியே.
பதப்பொருள்:
பூரணம் (தனக்குள்ளேயே பரிபூரணமாக ஆராய்ந்து) தன்னிலே (தமக்குள்) வைத்து (ஆதியிலிருந்தே சேர்த்து வைத்து இருக்கும் மும்மலங்களும்) அற்ற (நீக்குகின்ற) அப் (இறைவன் அருளிய) போதம் (போதனைகளால்)
ஆரணம் (வேதத்திற்கு) அந்தம் (எல்லையாக இருக்கின்ற இறைவனை) மதித்து (தொழுது வணங்கி) ஆனந்தத்தோடு (இறையருளால் தனக்குள் பெற்ற பேரின்பத்தில்)
நேர் (சீராக) என (இருக்கும் படி) ஈர் (இரண்டும்) ஆறு (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் 12 அங்குலங்கள் [கழுத்துக்கு கீழே எட்டு அங்குலம் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம்] மூச்சுக்காற்றை) நீதி (மந்திரங்களோடு சேர்த்து சுவாசிக்கும் முறைப்படி சுவாசித்து) நெடும் (நீண்ட காலம்) போகம் (சாதனை செய்கின்ற சாதகங்களுக்கு)
காரணம் (காரணமாக) ஆம் (இருப்பது) சுத்த (மார்க்க சைவ முறைப்படி நடக்கும் சுத்தமான) சைவர்க்கு (சைவர்கள் தமக்குள் பரிபூரணமாக ஆராய்ந்து பெற்ற) காட்சியே (இறை காட்சியே ஆகும்).
விளக்கம்:
பாடல் #1432 இல் உள்ள அனைத்து தத்துவங்களையும் முறைப்படி தமக்குள் பரிபூரணமாக ஆராய்ந்து உணர்ந்து ஆதியிலிருந்தே சேர்த்து வைத்து இருக்கும் மும்மலங்களங்களையும் நீக்குகின்ற இறைவன் அருளிய போதனைகளால் வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற இறைவனை தொழுது வணங்கி இறையருளால் தனக்குள் பெற்ற பேரின்பத்தில் சீராக இருக்கும் படி மொத்தம் 12 அங்குலமும் (கழுத்துக்கு கீழே எட்டு அங்குலம் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம்) மூச்சுக்காற்றை மந்திரங்களோடு சேர்த்து சுவாசிக்கும் முறைப்படி சுவாசித்து நீண்ட காலம் சாதனை செய்கின்ற சாதகங்களுக்கு காரணமாக இருப்பது மார்க்க சைவ முறைப்படி நடக்கும் சுத்தமான சைவர்கள் தமக்குள் பரிபூரணமாக ஆராய்ந்து பெற்ற இறை காட்சியே ஆகும்.