பாடல் #1430: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)
சுத்த மசுத்தந் துரியங்க ளோரேழுஞ்
சத்த மசத்துந் தணந்த பராபரை
யுய்த்த பராபரை யுள்ளாம் பராபரை
யத்த னருட்சத்தி யாயெங்கு மாயே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சுதத மசுததந துரியஙக ளொரெழுஞ
சதத மசததுந தணநத பராபரை
யுயதத பராபரை யுளளாம பராபரை
யதத னருடசததி யாயெஙகு மாயெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள் ஆம் பராபரை
அத்தன் அருள் சத்தி ஆய் எங்கும் ஆயே.
பதப்பொருள்:
சுத்தம் (சுத்த மாயையில் இருக்கும் நனவு, கனவு ஆகிய நிலைகளும்) அசுத்தம் (அசுத்த மாயையில் இருக்கும் நனவு, கனவு, உறக்கம் ஆகிய நிலைகளும்) துரியங்கள் (துரியம் துரியாதீதம் ஆகிய நிலைகளும் சேர்ந்து) ஓர் (இருக்கின்ற ஒரு) ஏழும் (ஏழு நிலைகளையும் அனுபவிக்கும்)
சத்தும் (நிலையாக இருக்கின்ற ஆன்மாவும்) அசத்தும் (நிலையற்றதாக இருக்கின்ற உடலும்) தணந்த (கடந்து இருக்கின்ற) பராபரை (இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற பரம்பொருளே)
உய்த்த (அனைத்தையும் இயக்கி மேல் நிலைக்கு கொண்டு செல்கின்ற) பராபரை (பரம்பொருளாகவும்) உள் (அனைத்திற்கு உள்ளே) ஆம் (இருக்கின்றதும் ஆகிய) பராபரை (பரம்பொருளாகும்)
அத்தன் (அதுவே அப்பனாகவும்) அருள் (அருள் மயமாகிய) சத்தி (சக்தியாகவும்) ஆய் (ஆகி) எங்கும் (அனைத்துமாகவும்) ஆயே (ஆகி இருக்கின்றது).
விளக்கம்:
சுத்த மாயையில் இருக்கும் நனவு, கனவு ஆகிய இரண்டு நிலைகளும் அசுத்த மாயையில் இருக்கும் நனவு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளும் துரியம் துரியாதீதம் ஆகிய இரண்டு நிலைகளும் கூட்டி மொத்தம் ஏழு விதமான நிலைகளையும் அனுபவிக்கும் நிலையாக இருக்கின்ற ஆன்மாவையும் நிலையற்றதாக இருக்கின்ற உடலையும் கடந்து இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற பரம்பொருளே அனைத்திற்கும் உள்ளே இருந்து இயக்கி அவற்றை மேல் நிலைக்கு கொண்டு செல்கின்ற பரம்பொருளாகும். அதுவே அப்பனாகவும் அருள் மயமாகிய சக்தியாகவும் ஆகி அனைத்துமாகவும் ஆகி இருக்கின்றது.
ஏழுவிதமான நிலைகள்:
- சுத்த மாயை – நனவு – இறைவன் இருக்கின்றான் என்கிற நினைவுடன் இறைவனோடு இருக்கின்ற நிலை.
- சுத்த மாயை – கனவு – இறைவனுடன் தாமும் சேர்ந்து இருக்கின்றோம் என்ற எண்ணத்தில் இருக்கின்ற நிலை.
- அசுத்த மாயை – நனவு – உலகத்தில் பார்க்கின்ற அனைத்தையும் உண்மை என்று நினைத்து இருக்கின்ற நிலை.
- அசுத்த மாயை – கனவு – உலகத்தில் பார்க்காத விஷயங்களையும் உண்மை என்று நினைத்து இருக்கின்ற நிலை.
- அசுத்த மாயை – உறக்கம் – உலகத்தில் சுய நினைவின்றி மாயையில் மயங்கி இருக்கின்ற நிலை.
- துரியம் – பேருறக்கம் – இறைவனை மட்டுமே எண்ணிக்கொண்டு உயிர்ப்புடன் செயல் அற்று இருக்கின்ற சமாதி நிலை.
- துரியாதீதம் – உயிர்ப்படங்கல் – எந்த எண்ணங்களும் செயல்களும் இன்றி உயிரும் அடங்கி இருக்கின்ற சமாதி நிலை.