பாடல் #553

பாடல் #553: மூன்றாம் தந்திரம் – 2. இயமம் (தீயவற்றிலிருந்து விலகி இருப்பது)

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

விளக்கம்:

பவளம் போல் ஜொலிக்கும் குளிர்ந்த சடையுடைய இறைவனை முழுமையாக உணர்ந்த சனகர், சதானந்தர், சனாநந்தர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வர்களுக்கும் எட்டுத்திசையிலும் சூழ்ந்து மூழ்கும் அளவிற்கு பெருமழை பெய்தாலும் செழுமையான குளிர்ந்த இயமங்களை (பாடல் #552 இல் இயமத்தின் விளக்கம் காண்க) தவறாமல் செய்யுங்கள் என்று இறைவன் கூறினார்.

பாடல் #554

பாடல் #554: மூன்றாம் தந்திரம் – 2. இயமம் (தீயவற்றிலிருந்து விலகி இருப்பது)

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லா னியமத் திடைநின் றானே.

விளக்கம்:

எவருக்கும் மனதளவிலும் தீங்கு நினைக்காதவன், பொய் கூறாதவன், களவு (திருடு) செய்யாதவன், எட்டு குணங்களை கொண்டவன் (1. அன்பு, 2. அமைதி, 3. பொறாமையின்மை, 4. சுத்தமாக இருத்தல், 5. மனதினால் சிரமப்படாமல் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளுதல், 6. ஆனந்தத்தைக் கொடுப்பது, 7. தர்ம சிந்தனை, 8. ஆசையின்மை), நன்மை மட்டுமே நினைப்பவன், பணிவுடையவன், நீதி தவறாமல் இருக்கக் கூடியவன், பகிர்ந்து கொடுத்து உண்பவன், குற்றம் இல்லாதவன், கள், காமம் இல்லாத தன்மையுடையவன், ஆகிய இவர்கள் இயம ஒழுக்கத்தின்படி இருப்பவர்கள் ஆவார்கள்.