பாடல் #734

பாடல் #734: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே.

விளக்கம்:

பாடல் #732 இல் உள்ளபடி மூச்சுக்காற்றை புருவ மத்தியில் நிறுத்திய பிறகு நடு நெற்றியில் தோன்றும் நீல நிறத்தில் ஜோதிமயமாக இருக்கும் சக்தியிலேயே சிந்தனையை நிரந்தரமாக வைத்து சரணாகதியில் இருப்பவர்களுக்கு உலகத்தவர்கள் அனைவரும் பார்க்கும்படி நரை முடியும் தோல் சுருக்கங்களும் நீங்கி வயது குறைந்து இளைஞனைப் போல இருப்பார்கள் என்பது பரம்பொருளாகிய குருநாதரின் ஆணையாகும்.

கருத்து: தியானத்தில் எப்போதும் நீல நிற சக்தியோடு இணைந்திருப்பவர்களின் உடல் முதுமை மாறி எப்போதும் இளமையோடு இருக்கும்.

பாடல் #735

பாடல் #735: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கருத்தநற் கபாலியு மாமே.

விளக்கம்:

உயிர்கள் உணவை குறைப்பதினால் உடல் எடை குறைந்து சுருங்கினாலும் பாடல் #734 ல் உள்ளபடி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதி அழியாது. உணவை குறைத்து உடலை சுருக்கி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியில் சிந்தனையை நிரந்தரமாக வைத்து சரணாகதியில் இருப்பவர்களுக்கு மூச்சுக்காற்று அங்கேயே நிரந்தரமாக நிலைபெறும். உணவை குறைத்து உடலை சுருக்கி பாதுகாத்தால் இறைவனை அடையும் வழிகள் பல உள்ளன. இதனை செய்யும் சாதகன் கருமை நிறமுடைய கழுத்தைக் கொண்ட நண்மையே உருவான இறைவனைப் போல் ஆகிவிடுவார்கள்.

கருத்து: உணவை குறைத்து உடலை சுருக்கி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியில் சிந்தனையை நிரந்தரமக வைத்து சரணாகதியில் இருக்கும் சாதகனுக்கு மூச்சுக்காற்று நெற்றியில் நிலைபெற்று கருமை நிறமுடைய கழுத்தைக் கொண்ட நன்மையே உருவான இறைவனைப் போல் ஆகிவிடுவார்கள்.

பாடல் #728

பாடல் #728: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்கவே உடலழி யாதே.

விளக்கம்:

மூன்று வளைவுகளை உடைய இடகலை பிங்கலை எனும் நாடிகளாக இரண்டு பாம்புகள் எட்டு அங்குல நீளத்திற்கு இருக்கின்றன. இயல்பான சுவாசமானது நாசியிலிருந்து இந்த இரண்டு நாடிகளின் வழியே கீழ் நோக்கி எட்டு அங்குல அளவு செல்லும். இந்த இரண்டு நாடிகளின் அடியிலிருந்து தலை உச்சி வரை செல்லும் பன்னிரண்டு அங்குல அளவிற்கு சுழுமுனை நாடி இருக்கிறது. முதுகெலும்பு ஆரம்பிக்கும் கழுத்து அது முடியும் இடுப்பு ஆகிய இரண்டு மூட்டுக்களையும் நேராக வைத்து இரண்டு கால்களையும் மடக்கி உடம்பை நேராக வைத்து அசையாமல் அமர்ந்து மூச்சுக்காற்றாகிய இயந்திரத்தை இடகலை பிங்கலை வழியாக எட்டு அங்குலம் கீழ் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் தொடங்கும் சுழுமுனை நாடி வழியே திசை மாற்றி பன்னிரண்டு அங்குலம் மேல் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் தாமரை இதழ்களோடு கலக்க வைக்கும் சுழற்சியான அகயோகத்தை எப்போதும் செய்து கொண்டு இருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

கருத்து:

கழுத்தையும் இடுப்பையும் வளைக்காமல் நேராக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரதளத்தோடு கலந்து மறுபடியும் உடல் முழுவதும் பரவும் சுழற்சியை செய்து கொண்டிருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

பாடல் #736

பாடல் #736: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடின்
வண்டுஇச் சிக்கும் மலர்க்குழல் மாதரார்
கண்டுஇச் சிக்கும்நல்ல காயமு மாமே.

விளக்கம்:

உயிர்களின் உடலுக்குள் மலத்துவாரத்திற்கும் பிறவிக்குறிக்கும் நடுவிலுள்ள மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியின் மேல் சிந்தனையை வைத்துக்கொண்டே சுழுமுனை நாடியின் வழியாக ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களாக மேல் நோக்கி எடுத்து வந்து தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் சேர்த்துவிட்டால் வண்டுகள் தேனை விரும்பி சுற்றும் அழகிய மலர்களை தலையில் அணிந்திருக்கும் பெண்கள் கூட இப்படிப்பட்ட உடல் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் அளவிற்கு சாதகரின் உடல் அழகாகிவிடும்.

கருத்து: மூலாதாரத்திலுள்ள குண்டலினியை எழுப்பி ஆறு சக்கரங்களுக்கும் சக்தியூட்டி ஏழாவதான சகஸ்ரதளத்தில் சேர்ப்பவர்களின் உடல் அழகாகிவிடும்.

பாடல் #737

பாடல் #737: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடிக் காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே.

விளக்கம்:

சுழன்று அடிக்கின்ற சூறாவளிக் காற்றின் நடுவில் சிக்கி தேர் அலைந்து திரிவது போல இறப்பு பிறப்பு எனும் சுழற்சியில் சிக்கிக்கொண்ட உயிர்கள் பிறவித் துன்பத்தில் கிடந்து அலைகின்றன. இந்தப் பிறவிச் சுழற்சியிலிருந்து உயிர்களை விடுவிக்கும் இறைவன் உயிர்களின் உடலுக்குள்ளேயே பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் தோன்றும் நீல நிற ஜோதியில் ஒளியுருவமாக வீற்றிருக்கின்றான். அகயோகம் செய்து நீல நிற ஜோதியின் நடுவில் இறைவனின் ஒளியுருவத்தைத் தரிசித்து அவனது திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்பின் ஓசையும் கேட்டு அதிலேயே சிந்தனையை வைத்திருக்கும் சாதகர்கள் இறப்பு பிறப்பு என்கிற பிறவிச் சுழற்சி நீங்கி எப்போதும் பேரின்பத்தில் இறைவனின் திருவடி நிழலிலேயே வீற்றிருப்பார்கள்.

கருத்து: அகயோகம் செய்து இறைவனின் திருவடியை நெற்றிக்குள் தரிசிக்க பிறவி எனும் பெருந்துன்பம் தீர்ந்து இறப்பும் பிறப்பும் இன்றி எப்போதும் இறைவனது திருவடியிலேயே இருக்கலாம்.

பாடல் #738

பாடல் #738: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளருகின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #734 இல் உள்ளபடி நெற்றி நடுவில் கண்ட நீல நிற ஜோதியும் நான்கு கலைகளைக் கொண்டு ஏழு ஆதாரச் சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்ற மூச்சுக்காற்றும் உடலை முழுவதும் மூடியிருக்கும் தோலும் தமக்குள் உணர்ந்த உண்மை ஞானமாகிய மெய்யுணர்வானது உடலுக்கு சிறந்த மருந்தாகி மான் குட்டி கீரையைத் தின்று வளர்வது முதிர்ச்சி அடைவது போல மெய்யுணர்வைத் தின்று ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடைகிறது.

கருத்து: அகயோகத்தை முறையாக செய்தால் மெய்யுணர்வை பெற்று ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடையும்.

பாடல் #739

பாடல் #739: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற
நீர்கொள நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தான்கொண்டு ஒடுங்கே.

விளக்கம்:

ஒரு நெல்லை பயிர் செய்தால் அதிலிருந்து பல நெல் வரும் அந்த பல நெல்லை மீண்டும் பயிர் செய்தால் பல ஆயிரம் வரும் அதனையும் பயிர் செய்தால் பல கோடி வரும். அது போல பாடல் #737 ல் உள்ளபடி சரீர நெற்றியில் இருக்கும் நீலநிற ஜோதியில் இருக்கும் வெப்பத்தில் இருந்து வரும் மந்திரமான ஒலியை மீண்டும் மீண்டும் சரீரத்திற்குள்ளேயே எந்தவித எதிர்பார்ப்பின்றி மனனம் செய்யும் சாதகனின் உடல் அழியாமல் இருந்து ஒரு மந்திரம் பல மந்திரமாக பெருகி வேதமந்திரமாக இருக்கும் இறைவனுடனேயே ஒடுங்கிவிடுவார்.

கருத்து: சரீரத்திற்குள்ளேயே எந்தவித எதிர்பார்ப்பின்றி மனனம் செய்யும் சாதகனின் உடல் அழியாமல் இருந்து வேதமந்திரமாக இருக்கும் இறைவனுடனேயே ஒடுங்கிவிடுவார்.