பாடல் #694

பாடல் #694: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்
காலது வேமண்டிக் கொண்டஇவ் வாறே.

விளக்கம்:

மூச்சுக்காற்றோடு உயிர் கலக்கும் முறை என்னவென்றால் உடம்பில் மொத்தம் உள்ளதாக யோக நூல்கள் கூறும் எழுபதாயிரம் நாடிகளில் ஐநூறு நாடிகள் சிறப்பானவை. இவற்றில் பத்து நாடிகள் மிகவும் சிறப்பானவை (பாடல் #595 இல் உள்ளபடி). அதிலும் சிறப்பானவை இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளாகும். இந்த ஐநூற்று பதிமூன்று நாடிகளும் சுழுமுனை நாடியிலிருக்கும் சிவசக்தியோடு கலந்து இருந்தால் மூச்சுக்காற்றோடு உயிர் கலந்து இருக்கும்.

கருத்து: சிறப்பான ஐநூற்றி பதிமூன்று நாடிகளும் சிவசக்தியோடு கலந்திருந்தால் மூச்சுக்காற்றோடு உயிர் கலந்து இருக்கும்.

பாடல் #695

பாடல் #695: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகு மருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே.

விளக்கம் :

தலைக்கு உள்ளே ஆறு போல உண்டாகின்ற அமுதம் ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புத் தொகுதிகள் வழியாக செல்கின்றன. அவ்வாறு செல்லும் அமுதம் அந்த நரம்புத் தொகுதிகளின் மறுபகுதியில் உள்ள சகஸ்ரதளத்தை அடைந்து உயிரை பக்குவப்படுத்தி மேல்நிலைக்கு கொண்டு செல்வது சிவசத்திகளே ஆகும்.

கருத்து : சிவசக்திகளே அமுதத்தை நரம்புத்தொகுதிகளின் வழியாக சகஸ்ரதளத்திற்கு கொண்டு சென்று உயிரை பக்குவப்படுத்துகிறார்கள்.

பாடல் #696

பாடல் #696: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே.

விளக்கம் :

இடைகலை பிங்கலை நாடிகளின் மேல் சுழுமுனைத் தலையில் இருக்கும் சிவசத்தி இடைகலை பிங்கலை இரண்டு நாடிகள் வழியாக மூச்சுக்காற்று செயல் புரிகின்ற முறையைக் கூறினால் உடலில் உள்ள மண்டலங்களையும் நரம்புத் தொகுதிகளையும் தாண்டி ஆறு சக்கரங்களில் உள்ள ஐம்பத்தொன்று கைகள் வழியாக கலந்து ஆயிரம் தாமரை இதழ்களைக் கொண்ட சகஸ்ரதளத்தை அடைகின்றன. காலத்தைக் கடப்பதற்குத் துணை செய்வது ஐம்முகச் சக்தி ஆகும். இந்நிலையில் உயிரின் காலத்தைக் கடக்கச் செய்வதும் ஐம்முகங்களோடு கூடிய சதாசிவனின் நாயகியாகும்.

பாடல் #697

பாடல் #697: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்தருளும் ஒன்றே.

விளக்கம்:

பத்துத் திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்டிருக்கும் சதாசிவசக்திக்கு உயிரின் மூச்சிக்காற்றுடன் உடலில் இருக்கும் பத்து வாயுக்களும் பத்து ஆயுதங்களாகும். இந்த பத்து ஆயுதங்களும் கீழே பார்த்த சகஸ்ரதளம் மேலே பார்த்த சகஸ்ரதளம் என்று இரண்டு ஆயுதங்களான அச்சக்தியுடன் உருவமற்ற நிலையில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலராக இருக்கும் சகஸ்ரார தளத்தில் என்றும் ஒடுங்கியே இருந்து பலகாலங்கள் பேரின்பத்தில் திளைத்திருக்க வைத்து அருளுவது சதாசிவமூர்த்தியாகிய ஒரு சக்தியே ஆகும்.

கருத்து: ஆயிரம் இதழ்கள் கொண்ட மலர்ந்த தாமரை மலராத தாமரை ஆகிய இரண்டுவித சக்திகளையும் பத்து திசைகளாகிய முகங்களையும் பத்து வாயுக்களாகிய ஆயுதங்களையும் கொண்டிருக்கும் சதாசிவமூர்த்தியாகிய இறை சக்தி ஒன்றுதான் எட்டுவிதமான சித்திகள் அடைந்தவர்களுக்கு அனைத்தையும் அருளுகின்றது.

பத்துவித காற்றுக்கள்:

  1. பிராணன் – உயிர்க்காற்று
  2. அபாணன் – மலக் காற்று
  3. வியானன் – தொழிற்காற்று
  4. உதானன் – ஒலிக்காற்று
  5. சமானன் – நிரவுக்காற்று
  6. நாகன் – விழிக்காற்று
  7. கூர்மன் – இமைக்காற்று
  8. கிருகரன் – தும்மற் காற்று
  9. தேவதத்தன் – கொட்டாவிக் காற்று
  10. தனஞ்செயன் – வீங்கல் காற்று

பாடல் #698

பாடல் #698: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்தருளும் முன்னே.

விளக்கம்:

தனக்கு நிகராக ஒன்றும் இல்லாமல் தானே தனிப்பொருளாய் இருக்கும் இறை சக்தியானது ஒன்றே ஆகும். அந்த சக்தி மூச்சுக்காற்றை இயக்கி யோக நிலையில் நடுநாடியாகிய ஒன்றன் வழியே செலுத்தி மேல் ஏறுகின்ற முறையைக் கூறினால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று ஆயிரமாயிரம் நாடி நரம்புகளைக் கடந்து உடல் முழுவதற்கும் சக்தியூட்டி அதில் ஒவ்வொரு சக்கரங்களாக வெற்றி கொண்டு மேலெழுந்து அங்கே சுழுமுனை நாடியில் கவிழ்ந்த சகஸ்ரதளத்தை நிமிர்ந்த சகஸ்ரதளமாய் மாற்றி அமைத்து காலத்தையும் கடக்கச் செய்யும்.

பாடல் #699

பாடல் #699: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத்தொ டொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயுவின் முடிவகை யாமே.

விளக்கம்:

தலையுச்சியின் முன்னே வீற்றிருக்கும் இறைசக்தியுடன் கீழிருந்து மேலெழுந்து சென்ற மூச்சுக்காற்று ஒன்றாகச் சேர்ந்து கலக்கும் விதத்தை சொன்னால் அடியிலிருந்து சுழுமுனை நாடி வழியே மேலே எழும்பும் வாயுவானது உயிர் சக்தியாகிய குண்டலினியை எழுப்பி மூலாதாரத்திலிருந்து ஒவ்வொரு சக்கரங்களாக அவற்றின் ஐம்ப்தத்தோரு இதழ்களின் வழியே சக்தியூட்டி (பாடல் #696 இல் கொடுத்துள்ளபடி) ஐந்து புலன்களுக்கும் செயல் திறனை அளித்து மொத்தமாய் மேலே சென்று அங்கிருக்கும் சகஸ்ரார தளத்தில் முடிவடைகின்றது. உயிர்சக்தி அங்கிருக்கும் இறை சக்தியோடு கலக்கும் முறை இதுவே ஆகும்.

பாடல் #700

பாடல் #700: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பதொ டொன்பது
ஆய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.

விளக்கம்:

ஆராய்ந்து அறிந்து கொள்ளுவதற்கு முடியாத தலைவியாகிய ஆதிசக்தியுடனும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத குண்டலினி சக்தியுடனும் வாயு ஒன்றாகக் கலக்கும் அளவு எவ்வளவு என்று சொன்னால் உயிர்கள் தமக்குள் இழுக்கப்படும் மூச்சுக்காற்றில் 540 அளவுகளில் 539 அளவு உடலின் சக்தியூட்டத்திற்கு பயனாகி மீதியிருப்பது ஒரு அளவே ஆகும். அந்த ஒரு அளவு வாயு மட்டும் உடலின் உள்ளிருந்து மேலே சென்று அங்கிருக்கும் இறை சக்தியோடு கலக்கின்றது.

540 வாயு அளவு விளக்கம்: ஆரோக்யமான ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான். இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இதை 40 கூறுகளாகப் பிரித்தால் மொத்தம் 21,600/40 = 540 பங்குகள் வரும். இந்த 540 பங்கு மூச்சுக்காற்றில் 539 பங்கு மூச்சுக்காற்று உடலின் சக்தியூட்டத்திற்கு பயனாகிறது. ஒரு பங்கு மூச்சுக்காற்று சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைசக்தியுடன் கலக்கிறது.

பாடல் #701

பாடல் #701: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.

விளக்கம்:

பாடல் 700 ல் உள்ளபடி சகஸ்ர தளத்தில் வீற்றிருக்கும் எம் தந்தையாகிய இறைவனிடத்தில் சென்று சேரும் ஒரு பங்கு காற்றின் அளவு உயிர்களின் உடலில் இருக்கும் இருநூற்று முப்பத்து மூன்று நாடிகளில் பரவிச்சென்று சகஸ்ர தளத்திலுள்ள ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரை மலரச் செய்து சங்கமமாகி விடுகின்றது. சங்கமமானதும் நமசிவாய என்னும் ஐந்து எழுத்து மந்திரமாய் சகஸ்ர தளத்தை இயங்குகிறது.

கருத்து: சிவசக்தியாய் இருக்கும் சகஸ்ரதளத்தில் கலக்கும் ஒரு பங்கு காற்று நமசிவாய என்னும் மந்திரமாய் செயல்பட்டு தவத்தால் அடையக்கூடிய அட்டமா சித்திகளை இயக்குகிறது.

பாடல் #702

பாடல் #702: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

விளக்கம்:

பாடல் 700 ல் உள்ளபடி மூலாதாரத்தில் ஜோதி வடிவமாக இருக்கும் சக்தியுடன் ஓர் பங்கு மூச்சுக்காற்று கலக்கும். அந்த மூச்சுக்காற்று எழும் இடத்தை சொன்னால் எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகள் வழியாக நான்கு இதழ்களைக் கொண்ட மூலாதாரச் சக்கரத்தின் அக்கினியோடு இருந்தவாறே ஆரம்பிக்கின்றது.

கருத்து: நான்கு இதழ்களாக இருக்கின்ற மூலாதார சக்கரத்தில் இருந்து எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளின் வழியாக ஓர் பங்கு காற்று மூலாதாரத்தில் ஜோதி வடிவமாக இருக்கும் சக்தியுடன் கலக்கிறது.

குறிப்பு: பாடல் #700ல் உள்ளபடி ஓர் பங்கு மூச்சுக்காற்று பாடல் #701ல் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தோடு மூச்சுக்காற்று கலக்கும் விதத்தை சொன்ன திருமூலர் இப்பாடலில் கீழே இருக்கும் மூலாதார சக்கரத்தில் மூச்சுக்காற்று கலக்கும் விதத்தை கூறுகிறார்.

பாடல் #703

பாடல் #703: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

விளக்கம்:

உயிரின் உடலாகிய தேருக்கு ஆறு ஆதாரச் சக்கரங்கள் இருக்கின்றன. இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களின் வழியே சக்தியூட்டப்பட்ட வாயு ஏழாவது ஆதாரமான சகஸ்ரதளத்திற்கு சென்று அங்கிருக்கும் இறைசக்தியோடு கலந்தபின் உருவாகின்ற அமிர்தம் அங்கிருந்து கீழிறங்கி எட்டாவது இடமாகிய உள் நாக்கிற்கு மேலே வந்து விழுகின்றது. இவ்வாறு விழுகின்ற அமிர்தத்தைப் பருகிக்கொண்டே பேரின்பத்தில் திளைத்திருக்கும் போது மாபெரும் நிலம் போன்ற உடலின் ஒன்பது துவாரங்களும் மூச்சுக்காற்றோடு இணைந்து இருக்கின்றது.

கருத்து: அமிர்தத்தைப் பருகி வாழ்பவர்களுக்கு உணவோ தண்ணீரோ தேவைப்படுவதில்லை. அவர்கள் அமிர்தத்தை மட்டுமே பருகிக்கொண்டு ஒன்பது துவாரங்களின் வழியாக வெளிக்காற்றோடு இணைந்திருக்கின்றார்கள்.