பாடல் #718: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)
கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானேஅப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.
விளக்கம்:
பாடல் #717 ல் உள்ளபடி அகயோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் உருவாகும் பயன்கள் மூன்றுவிதமாகும். முதலாவதாக மூலாதாரத்தில் இருந்து வெளிவரும் காற்று சுழுமுனை நாடி வழியாக உள்ளுக்குள் சென்று சகஸ்ரதளத்திற்கும் மூலாதாரத்திற்கும் இடையே உள்ளுக்குள் நோக்கி சுழன்று கொண்டு இருப்பதால் வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டியது இல்லை. இரண்டாவதாக அவர்களின் உள்ளுக்குள்ளே சுழன்று கொண்டு இருக்கும் காற்று சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களிலும் பரவி அதை மலரச் செய்து எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருக்கும். மூன்றாவதாக அவர்களின் உடல் இறைவனின் ஜோதிமயத்திலேயே மூழ்கி பேரின்பத்தில் எப்போதும் அழியாமல் நிற்கும்.
கருத்து: அகயோகம் செய்கின்ற யோகியர்கள் உடலுக்கு தேவையான மூச்சுக்காற்றை தனக்குள்ளேயே பெற்றுக்கொண்டு தனக்குள் ஜோதியாய் இருக்கும் இறைவனுடன் பேரின்பத்தில் மூழ்கி இருப்பார்கள்.