பாடல் #578: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தப் பழகுதல்)
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.
விளக்கம்:
வெளியே சென்று ஓடுகின்ற மனதை உள்ளே ஒரு நிலைப்படுத்தி விட்டால் இறைவனுடைய எட்டுவித குணங்களை நமக்குள்ளே உணரலாம். அவ்வாறு உள்ளே மனதை ஒரு நிலைப்படுத்தி வைத்து இருந்தால் ஆதிகாலம் முதல் பழமையான வேதங்களைக் கற்றறிந்தவர்களால் தமக்குள் தேடப்பட்ட இறைவனை அப்பொழுதே நமக்குள் கண்டு உணரலாம்.
இறைவனின் எட்டுவித குணங்கள்: 1. தன்வயத்தன் ஆதல், 2. தூய உடம்புடைமை, 3. அளவிலா ஆற்றல் உடைமை, 4. பாசங்களில் இருந்து நீங்கியிருப்பது, 5. பேரருள் உடைமை, 6. இயற்கை உணர்வு கொண்டிருத்தல், 7. முக்காலத்தையும் உணர்ந்திருத்தல், 8. அளவிலா ஆனந்தம் உடைமை)