பாடல் #1730: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
கூடிய பாத மிரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழுந்
தேடு முகமைந்துஞ் செங்கணின் மூவைந்து
நாடுஞ் சதாசிவம் நல்லொளி முத்தே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கூடிய பாத மிரணடும படிமிசை
பாடிய கையிரண டெடடும பரநதெழுந
தெடு முகமைநதுஞ செஙகணின மூவைநது
நாடுஞ சதாசிவம நலலொளி முததெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கூடிய பாதம் இரண்டும் படி மிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழும்
தேடும் முகம் ஐந்தும் செம் கணின் மூ ஐந்து
நாடும் சதா சிவம் நல் ஒளி முத்தே.
பதப்பொருள்:
கூடிய (ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற) பாதம் (இறைவனது திருவடிகள்) இரண்டும் (இரண்டும்) படி (தம்மை சரணடைந்த உயிர்களை அடுத்த படியான) மிசை (மேல் நிலைக்கு கொண்டு செல்லுவது ஆகும்)
பாடிய (அடியவர்களால் புகழ்ந்து பாடப் படுகின்ற) கை (இறைவனது திருக்கரங்கள்) இரண்டு (இரண்டும்) எட்டும் (எட்டும் சேர்ந்து மொத்தம் பத்தும்) பரந்து (பத்து திசைகளுக்கும் பரந்து) எழும் (எழுந்து செல்லுவது ஆகும்)
தேடும் (அடியவர்கள் தேடுகின்ற) முகம் (இறைவனது திருமுகம்) ஐந்தும் (ஐந்தும்) செம் (செம்மையான) கணின் (கண்கள்) மூ (முகத்திற்கு மூன்றாக) ஐந்து (ஐந்து முகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினைந்து ஆகும்)
நாடும் (அடியவர்கள் தேடி அடைய விரும்பும்) சதா (அனைத்திற்கும் மேலானதாகிய) சிவம் (சிவப் பரம்பொருள்) நல் (நன்மையே கொடுக்கும்) ஒளி (பிரகாசமான ஒளி வீசும்) முத்தே (முத்தைப் போன்ற ஜோதி வடிவம் ஆகும்).
விளக்கம்:
அனைத்திற்கும் மேலான சிவப் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் திருவுருவமானது அடியவர்களை மேல் நிலைக்கு கொண்டு செல்லும் இணைந்தே இருக்கின்ற இரண்டு திருவடிகளைக் கொண்டும், பத்து திசைகளுக்கும் பரந்து எட்டுகின்ற பத்து திருக்கரங்களைக் கொண்டும், ஐந்து திருமுகங்களைக் கொண்டும், அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்களைக் கொண்டும், ஒப்பில்லாத முத்துப் போல பிரகாசமான ஒளி வீசும் ஜோதி அம்சமாகவும் இருக்கின்றது. உருவமே இல்லாத இறைவனுக்கு இப்படி அடியவர்கள் காணக்கூடிய அருவுருவமான வடிவமாக இருப்பதே சதாசிவ இலிங்கம் ஆகும்.
கருத்து:
சதாசிவ மூர்த்தியின் அருவுருவத் திருவடிகளானது தம்மை சரணடைகின்ற அடியவர்களின் பந்த பாசங்களை அறுக்கின்றது ஆகும். சதாசிவ மூர்த்தியின் அருவுருவத் திருக்கரங்களானது அவர் இருக்கின்ற இடத்திலிருந்தே தம்மை வேண்டுகின்ற அடியவர்கள் இருக்கின்ற இடம் வரை பத்து திசைகளிலும் பரந்து வந்து அபயமும் ஐஸ்வர்யமும் அருளுவது ஆகும்.சதாசிவ மூர்த்தியின் அருவுருவத் திருக்கண்களானது தகுதியான அடியவர்களின் பாவங்களை பார்வையாலே நீக்குகின்றது ஆகும். சதாசிவ மூர்த்தியின் அருவுருவப் பிரகாசமான ஜோதி வடிவமானது காண்கின்றவர்களை கவர்கின்ற நல்ல முத்தைப் போல் அடியவர்களை தம்மை நோக்கி ஈர்க்கின்றது ஆகும்.