பாடல் #372: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)
பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே.
விளக்கம்:
பிரளயம் முடிந்து புதிய உலகங்கள் உருவாகிய காலத்தில் உலகங்களில் எல்லாம் புதிய உயிர்களைப் படைப்பதால் தாமே இறைவன் என்று பிரம்மனும், அந்த உயிர்களை எல்லாம் காப்பதால் தாமே இறைவன் என்று திருமாலும் அறியாமையால் ஒருவருக்கொருவர் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். அப்போது இறைவன் அவர்களின் முன்பு ஒரு மாபெரும் தீப்பிழம்பாக வந்து நின்று இப்பிழம்பின் அடி அல்லது உச்சியைக் காணுபவரே இறைவன் என்று கூற இருவரும் தீப்பிழம்பின் அடியையோ உச்சியையோ காண இயலாமல் புலம்ப ஆரம்பித்தனர்.