பாடல் #367: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப்பேறு
மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதம் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே.
விளக்கம்:
திருக்கயிலாய வெள்ளி மலையின் மீது அமர்ந்திருக்கும் பிறப்பு இறப்பு இல்லாத இறைவன். ஏழு உலகங்களை படைத்து அந்த உலக தொழில்கள் சீராக நடைபெற திருமாலுக்கு கை பெருவிரலினை ஒட்டி அந்தரத்தில் பறப்பது போல் சக்கரம் தந்து அருளினான். இவ்வுலக தொழில்கள் சீராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அகங்காரத்தினால் ஏதேனும் தடை ஏற்பட்டால் திருமால் தனது சக்கராயுதத்தால் அகங்காரத்தை அழித்து இவ்வுலகைக் காப்பான்.