முன்னுரை: இரண்டாம் தந்திரம் எண் -2 பதிவலியில் வீரட்டம் என்னும் தலைப்பில் வரும் 8 பாடல்களும் இறைவன் தமது வீரத்தால் மறக்கருணை என்னும் அறியாமையால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்களை வதம்செய்து அவர்களை ஆட்கொண்ட புராணக்கதைகளை பாடல்களில் கூறுவதாக இருந்தாலும் இதன் உட்கருத்து உயிர்கள் தமக்குள் இருக்கும் எட்டுவித அசுரர்களை வதம் செய்து இறைவனை அடையும் வழிகளை இப்பாடல்களின் மூலம் அறியலாம்.
பாடல் #339: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)
கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
விளக்கம்:
கருத்த நிற மேனியோடு இரு கண்களும் தெரியாத அந்தகன் என்கிற அசுரன் மிகக் கடுமையான தவம் செய்து சாகா வரம் பெற்று ஈரேழு பதினான்கு உலகத்தையும் வெற்றி பெற்று அதில் வாழும் அனைத்து உயிர்களையும் கொடுமை படுத்தினான். இவனது கொடுமை தாங்காத தேவர்கள் இறைவனிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து குருத்து போன்ற மூன்று இலைகளில் நடு இலை மட்டும் மிகவும் நீண்டு இருக்கும் கூர்மையான சூலாயுதத்தால் அந்தகாசுரனின் கொன்று தேவர்களைக் காப்பாற்றினார்.
உட்கருத்து: அறியாமையால் மாயையில் மயங்கி கண் தெரியாமல் இருட்டில் இருக்கும் மனம் உயிரை இறைவனை அடையவிடாமல் தீய எண்ணத்துடன் வதைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாள் உயிர் இறைவா என்னை காப்பாற்று என்று வேண்ணிக்கொள்ள இறைவன் மாயையில் சிக்கி இருட்டில் கண் தெரியாமல் இருக்கும் மனதில் ஒளியைக் கொடுத்து அறியாமை என்னும் தீய எண்ணங்களை கொன்று உயிரை காப்பாற்றி அருளினார்.
மனித முதுகெலும்பு முடியும் பகுதி கழுத்து எலும்பு களுக்கு மேல் உள்ளது இது பின் மூளைப் பகுதிக்கும் முன்மூளை பகுதிக்கும் இடையில் முடிவுறுகிறது இதற்கு குருந்தம் என்று பெயர். இதன்மேல் சோம ஒளி, சூரிய ஒளி, ஆன்ம ஒளி என்னும் மூன்று ஒளிகள் உள்ளன. இவைதான் குருத்துயர் சூலமாகும். இந்த குருத்துயர் சூலத்தின் மூலம் இறைவன் அருளால் அறியாமை என்னும் இருட்டை அகற்றி இறைவனை உணர்ந்துகொள்ளலாம்.