பாடல் #99

பாடல் #99: பாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே.

விளக்கம்:

திருமூலனாகிய யான் வழங்கிய இந்த மூவாயிரம் தமிழ் மந்திரங்களும் யான் பெற்ற இன்பம் இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் பெற வேண்டும் என்ற அன்பினாலேயே எம் குருநாதன் இறைவனின் அருளால் வழங்கப் பெற்றது. இந்த மந்திரங்களைக் காலையில் எழுந்து அவற்றின் பொருளை ஓதி உணர்ந்து அதில் உள்ள கருத்துக்களை கடைபிடித்து வந்தால் உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய சதாசிவமூர்த்தியைச் சென்று அடைந்து யான் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெறலாம்.

பாடல் #100

பாடல் #100: பாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.

விளக்கம்:

உயிர்கள் அனைத்தும் இறைவனை உணர்ந்து வீடு பேறு அடைய வேண்டும் என்கின்ற அன்பினால் யாம் உயிர்களுக்கு வைத்த பேரின்ப பரிசு திருமந்திரம் என்னும் பேரின்ப நன்மை தரும் நூலாகும். இந்த நூலிலுள்ள மூவாயிரம் பாடல்களில் யாம் வழங்கியிருப்பது இறைவனை அடைந்து முக்தி பெறும் வழிகளும் அதன் முடிவில் இறைவனோடு என்றும் கலந்து இருக்கும் பேரின்பத்தின் விளக்கங்களும் ஆகும். இறைவனின் அருளால் அறிவுப்பூர்வமாக இயற்றப்பெற்ற இந்த மூவாயிரம் பாடல்களும் அனைவருக்கும் பொதுவானவையாகும். இந்த மூவாயிரம் பாடல்களையும் தமது சிந்தையில் வைத்து, அவற்றின் பொருளுணர்ந்து போற்றி வருபவர்களுக்கு அனைத்துவிதமான சிறப்புகளையும் கொடுக்கும் இந்த திருமந்திரப் பாடல்கள்.