பாடல் #95

பாடல் #95: பாயிரம் – 6. அவையடக்கம்

ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.

விளக்கம்:

எவராலும் அறிய முடியாத அளவிற்கு பெருமைகளை உடையவனும் எவராலும் அவனின் உயரத்தையும் அகலத்தையும் அறிய முடியாத அளவிற்கு அளவிடமுடியாதவனும் எவராலும் அறிந்து கொண்டு அழைத்துவிட முடியாத அளவிற்கு பெயரிடமுடியாத மாபெரும் சுடர் போன்று இருப்பவனும் தனக்கென்று ஆரம்பமும் முடிவும் இல்லாதவனுமான எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் அருமை பெருமைகளை அவன் அருள் மூலமே அறிந்துகொண்டு அதை யான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

பாடல் #96

பாடல் #96: பாயிரம் – 6. அவையடக்கம்

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேட கில்லேனே.

விளக்கம்:

இறைவனைத் துதித்து பாடல்களை இசைத்துப் பாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை ஆனந்தக் கூத்தாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை உண்மையான அன்போடு நாடிச் சென்று அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்து அவனைத் தமக்குள்ளே கண்டு அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். அப்படிப்பட்ட எம்மை ஆட்கொண்டு அவனை முழுவதும் அறியவைத்தது எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் பேரருளே.

பாடல் #97

பாடல் #97: பாயிரம் – 6. அவையடக்கம்

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே.

விளக்கம்:

என்றும் நிலைத்திருக்கும் வேதங்களைச் சொல்லுவதால் மட்டும் உணர முடியாதவனும் இனிமையான இசையோடு பாடுகின்ற அடியவர்களின் இசையினுள்ளே எழுந்தருளுகின்றவனும் படைப்புத் தொழிலைச் செய்யவேண்டி இறைவன் படைத்த பிரம்மனும் தியானிக்கும் சதாசிவமூர்த்தியை அவனது அருள்கொண்டே அவனை உணர முடியும்.

பாடல் #98

பாடல் #98: பாயிரம் – 6. அவையடக்கம்

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயனறி யாரே.

விளக்கம்:

இறைவனை உணர்ந்து முக்தி பெறவேண்டும் என்று மலை உச்சிகளிலும் குகைகளிலும் தவமிருக்கும் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் சதாசிவமூர்த்தியை உணரக்கூடிய பேரறிவு ஞானத்தை இறைவனே கூறியருளினாலும் இறைவனும் தாமும் ஒன்றானவர்களே என்கிற உணர்வு இல்லாமல் இறைவனையும் தம்மையும் வேறு வேறாகக் எண்ணிக்கொண்டு அவ்விறைவனின் மேல் பக்திகொண்டு போற்றிப்பாடுபவர்கள் இறைவன் வழங்கிய பேரறிவு ஞானத்தின் பயனை அவர்கள் பெறாமலே இருக்கின்றார்கள்.