பாடல் #19: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து
இதுபதி ஏலம் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.
விளக்கம்:
இந்த உலகத்தில் ஏலக்காயின் சுகந்தமான வாசனை வீசக்கூடிய ஏழுவிதமான காடுகளை உருவாக்கியவன் இறைவன் அவற்றை பேரழிவுக் காலத்தில் வெறும் சாம்பல் காடுகளாகவும் மாற்றுபவனும் அவனே. அவன் அனைத்தும் அறிந்த பேரறிவாளன். பிறை நிலாச் சந்திரனை தன் திருமுடியில் அணிந்திருக்கும் இறைவன் தன்னை நோக்கி உயிர்கள் புரியும் உண்மையான தவத்தை மெச்சி அந்த உயிர்களின் உடலையே தான் கொண்ட திருக்கோயிலாக எழுந்தருளும் மாபெரும் அருளாளன்.
உள் விளக்கம்:
சுகந்தமான வாசனை வீசும் ஏழு காடுகள் என்பது அற்புதமான சக்தியை தமக்குள் அடக்கியிருக்கும் ஏழு சக்கரங்களைக் குறிக்கும். உயிர்களின் உடலில் இருக்கும் இந்த ஏழு சக்கரங்களே அவற்றை முக்திக்கு அழைத்துச் செல்லும் வழியை கொடுக்கக்கூடியவை. சக்திவாய்ந்த ஏழு சக்கரங்கள் இருந்தாலும் அவற்றை முறைப்படி தியானத்தால் சக்தியூட்டாமல் விட்டுவிட்டால், உயிர்களின் உடல் ஒரு நாள் அழிந்து வெறும் சாம்பலாக மாறிவிடும் என்பதையே சாம்பலாகும் காடுகள் குறிக்கிறது. இறைவன் முக்காலமும் அறிந்தவன் அவன் பேரறிவாளன் என்பது அவனிடமிருந்து எதையுமே மறைக்க முடியாது என்பதைக் குறிக்கிறது. மாபெரும் அன்பானவன், சந்திரனை விட குளிர்ச்சியை உடைய இறைவனை நோக்கி உண்மையான தவம் இருந்தால், அந்த உயிர்களின் உடலே இறைவனே மகிழ்ந்து வந்து தங்கும் இடமாகிவிடும். இதுவே முக்தியடையும் வழியுமாகும்.