பாடல் #1168 இல் உள்ளபடி பராசக்தியாகவே ஆகிவிடுகின்ற சாதகர் அந்த பராசக்தியின் பலவித அம்சங்களில் பல வகையான உலக இயக்கங்களை செய்து கொண்டு இருக்கும் போது அவருக்கு அருளைத் தருகின்ற சக்தியாக இருப்பது அனைத்திற்கும் தலையான பிரம்மம் என்று உணரப்படும் இறைவியாகும். இந்த இறைவியே இரா சக்தி என்று யாமள ஆகமத்தில் அழைக்கப்படுகிறாள். குருவாக வந்து அருளுகின்ற இவளது பலவிதமான திருக்கோலங்களை யாம் எமக்குள்ளே தரிசித்து உணர்ந்து கொண்டோம்.
பாடல் #1169 இல் உள்ளபடி பலவிதமான திருக்கோலங்களில் எமக்குள்ளே உணர்ந்த பராசக்தியாகிய இறைவியே இறைவனை உணர்வதற்கு உயிர்கள் பிறவி எடுக்கும் ஏழு உலகங்களிலும் இறைவனை அறிவதற்காக செய்யும் யோகங்களுக்கெல்லாம் தலையான சக்தியாக இருக்கின்றாள். எமது உயிருக்கு உயிராக எம்மோடு கலந்து இருக்கும் உன்னதமான இறைவனை யாம் உணர்ந்து அவருடன் கலந்து பல காலம் இருந்து உச்ச நிலையை அடைந்த ஒரு சமயத்தில் பேரின்பத்தை யாம் பெற்று அனுபவித்தோம். அப்போது எம்மோடு கலந்து இருக்கும் இறைவனோடு ஏழு உலகங்களிலும் பரவி இருக்கும் பராசக்தியாகிய இறைவியும் கலந்து பரம்பொருள் ஆகி நின்று இறைவன் இறைவி யாம் என்கிற தனித்தன்மைகள் இல்லாமால் ஒரே பொருளாகி இருக்கின்றோம்.
பாடல் #1170 இல் உள்ளபடி ஒரே பொருளாக இருக்கின்ற எமக்குள் மிகவும் பெருமையை உடைய எமது தலைவனாகிய இறைவனும் யாமும் ஒன்றாகக் கலந்து இருக்கின்ற நிலையிலும் அதனால் கிடைக்கின்ற பேரின்பத்திலும் இருக்கும் போது மாயையாகிய மயக்கத்தை அளித்து தம்மை நாடும் அடியவர்களை கவர்ந்து இழுக்கும் நறுமணம் வீசுகின்ற மலர்களைச் சூடியிருக்கும் அழகிய கூந்தலையுடைய மனோன்மணியாகிய என்றும் இளமையான இறைவியும் எம்மோடு கலந்து ஒரே பொருளாக இருக்கும் விதத்தை எமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொள்வது ஆயுழி எனும் மாபெரும் யோகமாகும்.
பாடல் #1171 இல் உள்ளபடி ஆயுழி எனும் மாபெரும் யோகத்தில் இருக்கும் போது அதிலிருந்து அனைத்திற்கும் நன்மை தருவதற்கு வெளிப்படும் சக்தியின் ஒளி உருவத்தை தாங்குகின்ற பீடமாக சாதகரின் உடலே இருக்கின்றது. அந்த சக்தியின் ஒளியானது தெற்குத் திசையை நோக்கி பரவிக் கொண்டிருக்கின்றது. அந்த சக்தியின் ஒளி சாதகரின் வயிற்றின் நடுப்பகுதியிலிருந்து வெளிப்படுகின்றது. இந்த சக்தியாக வெளிப்படும் இறைவியின் திருவடிகளே அனைத்திற்கும் மேலானது என்பதை உங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
பாடல் #1172 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட யோக ஓளியானது அதற்கும் மேலான அக்னியாக இருக்கும் இறைவனின் ஒளி உருவத்தோடு சேர்ந்து பரவும் போது அந்த பக்குவப்பட்ட சாதகரின் உள்ளிருந்து வெளிப்படுகின்ற அனைத்து விதமான மாயைகளையும் இறைவனின் அக்னி உருவமே சுட்டு எரித்து அழித்து விடுகின்றது. அதன் பிறகு உத்வேகத்துடன் சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற வெளிச்சமும் சத்தமும் மிகவும் உச்ச நிலையை அடையும் போது அதிலிருந்து மிகுதியாக வெளிப்படுகின்றாள் அடியவர்களின் எண்ணத்தை தம்மேல் இழுக்கின்ற அழகிய வளையல்களை அணிந்த இறைவி.
பாடல் #1173 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மிகுதியாக வெளிப்பட்ட இறைவி எப்படி இருக்கின்றாள் என்ன செய்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். தனக்கென்று ஒரு ஆரம்பமும் இல்லாமல் தானாகவே இருக்கின்ற வழிமுறைப்படி இறைவியானவள் எட்டுவிதமான சக்திகளாக (பாடல் #1084 இல் காண்க) சாதகருக்குள்ளும் பதினான்கு உலகங்களிலும் சரிசமமாக உருவாக்கி செயல்படுத்துகின்றாள். அவளே உள்ளுக்குள் இருக்கும் ஒளி வடிவான இறைவியாகவும் அனைத்தையும் இயக்குகின்ற சக்தி வடிவம் என்று உணரப்படுகின்ற இறைவனாகவும் இருக்கின்றாள். இந்த இறைவியானவள் ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாத அளவு என்று அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற தூய்மையான பொருளாக இருக்கின்றாள்.
பாடல் #1174 இல் உள்ளபடி ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாத என்று அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற தூய்மையான பொருளாக இருக்கின்ற பராசக்தியின் பேரறிவைக் கொடுக்கும் தத்துவமானது தானாகவே இருபத்து ஏழு விதமான தத்துவங்களாக இருக்கின்றது. இந்த தத்துவங்களைப் பெற்று பேரறிவைப் பெறுவதற்கு ஏற்றதாக சாதகரின் உள்ளுக்குள்ளிருந்து எழுகின்ற ஒரு மந்திரத்தை அவர் திரும்பத் திரும்ப செபித்து தியானித்துக் கொண்டே இருந்தால் அவருக்குள்ளிருந்து மிகுதியாக வெளிப்பட்டு எழுகின்ற இறைவியானவள் வெள்ளை நிறத்துடனும் மூன்று கண்களுடனும் கதை ஆயுதத்தை ஏந்திக் கொண்டும் ஆதி முத்திரையைக் காட்டிக் கொண்டும் இருப்பாள்.
பாடல் #1176: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள் அத்துவ மாயல்ல வாய சகலத்தள் வைத்த பராபர னாய பராபரை சத்தியு மானந்த சத்தியுங் கொங்கே.
விளக்கம்:
பாடல் #1175 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்ட இறைவி எப்படி இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். மூன்று வகை முத்திரைகளை தன் வசம் வைத்திருக்கும் உண்மையான ஞானத்தை உடையவளான இறைவி அந்த முத்திரைகளின் தத்துவங்களாகவும் தத்துவங்கள் இல்லாததாகவும் அனைத்துமாகவும் அவளே இருக்கின்றாள். சாதகருக்குள் இருக்கும் பரம்பொருளாகிய இறைவனாகவே இருந்து இயங்குகின்ற பராசக்தியான இறைவி பேரின்பத்தைக் கொடுக்கின்ற சக்தியான இறைவனோடு பூவும் அதிலிருந்து வரும் நறுமணமும் போல ஒன்றாகக் கலந்து இருக்கின்றாள்.
பாடல் #1176 இல் உள்ளபடி இறைவனோடு பூவும் அதிலிருந்து வரும் நறுமணமும் போல ஒன்றாகக் கலந்து இருக்கின்ற இறைவியானவளின் திரு உருவத்தை தமக்குள் அறிந்து உணர்ந்து கொள்வதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். நறுமணத்தை தருகின்ற வாசனை மிக்க மலர்கள் பூத்திருக்கும் செடியின் கொம்பு போன்ற மெல்லிய இடையுடனும் மலரின் அரும்பு போன்ற மென்மையான முலைகளுடனும் என்றும் இளமையுடன் இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்குள்ளிருந்து பொங்கி வெளிப்படும் குங்குமம் போன்ற சிவந்த ஒளி வீசும் திரு உருவத்தைக் கொண்டவள். அவளது திருக்கைகளில் அங்குசத்தையும் பாசக் கயிறையும் ஏந்திக் கொண்டு அடியவர்களின் உலகப் பற்றை அடக்கி ஆளுகின்றாள். அனைத்து உலகங்களிலும் அன்போடு வீற்றிருக்கின்ற அவள் தங்கியிருக்கும் வீடாகிய சாதகரின் உடலுக்குள் தாமாகவே தேடி அறிந்து கொள்ளுங்கள்.
பாடல் #1178: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
வாயு மனமுங் கடந்த மனோன்மணி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயு மறிவுங் கடந்த அரனுக்குத் தாயு மகளுநல் தாரமு மாமே.
விளக்கம்:
பாடல் #1177 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள்ளே தேடி அறிந்து கொண்ட இறைவியானவள் இறைவனுடன் எப்படி சேர்ந்து இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடல் அறிந்து கொள்ளலாம். வாக்கால் சொல்ல முடியாதவளும் எண்ணங்களால் எளிதில் கற்பனை செய்து பார்க்க முடியாதவளும் ஆகிய மனோன்மணி எனும் இறைவி தனது பெண் தன்மையில் என்றும் இளமையுடன் இருந்து உலகங்களின் இயக்கம் நடைபெறுவதற்கு எண்ணங்களோடு இருக்கின்ற ஆன்மாக்களையும் தேவ கணங்களையும் அதிகமாக வைத்து இயக்குகின்றாள். கல்வி அறிவால் எவ்வளவு ஆராய்ந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத இறைவனுக்கு அவளே தாயாகவும் மகளாகவும் என்றும் நன்மை தரும் துணைவியாகவும் இருக்கின்றாள்.
குறிப்பு: உலக இயக்கம் நடைபெறுவதற்கு இறைவியின் எண்ணத்திற்கு ஏற்ப ஐந்து பூதங்களையும் கணங்கள் செயல் படுத்துகின்றது. இறைவனிடமிருந்து தன் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக பிரிந்து வந்த எண்ணங்களுடைய ஆன்மா தனது ஆசைகளையும் அதனால் சேரும் வினைகளையும் பிறவி எடுத்து தீர்த்துக் கொள்கிறது. இதுவே இங்கு பேய் என்று குறிப்பிடப் படுகின்றது.
உப குறிப்பு: சாதகர் தமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொள்ளும் இறைவியானவள் முதல் நிலையில் தாயாக இருந்து சாதகரின் மேல் அன்பு செலுத்துகிறாள். இரண்டாவது நிலையில் சாதகர் தாம் உணர்ந்த இறைவியின் மேல் தன் மகளைப் போல அன்பு செலுத்துகிறார். மூன்றாவது நிலையில் இறைவியும் சாதகரும் சரிசமமாக ஒருவரோடு ஒருவர் அன்பு செலுத்துகிறார்கள்.